சிவமே மூச்சாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள் – (அமர்நீதி நாயனார் )


 

தென்னாடுடைய சிவனே போற்றி …. எந்நாட்டவர்க்கும்  இறைவா போற்றி  என நாள்தோறும்  பக்தர்களின் நெஞ்சில் நிலைத்திருக்கும் சிவ பெருமானின் புகழ் பாடுவதை வாழ்நாள் தவமாக வரம் பெற்ற  அறுபத்துமூன்று நாயன்மார்களில்   அமர்நீதி நாயனார் பற்றி இப்பதிவில் அறிவோம் .

பழையாறில் வணிக குலத்தில் பிறந்த அமர்நீதி நாயனார் சிவ பக்தி மற்றும் சிவனடியவர்களுக்கு செய்யும் தொண்டில் சிறந்தவராக விளங்கினார். பொன், நவரத்தினங்கள், சிறந்த பட்டு, பருத்தி ஆடை போன்றவைகளை அந்தந்த பகுதிகளுக்கே சென்று நேரடியாக கொள்முதல் செய்து சிறந்த முறையில் விற்பனை செய்து வந்தார். அதில் கிடைத்த லாபத்தில்  இறைவனுக்கும், அவரின்  தொண்டர் களுக்கும் சிறப்பான தொண்டு புரிந்துவந்தார். சிவபெருமானுடைய தொண்டர்களுக்கு துறவிகள் அரைஞாணுக்கு பதிலாக கட்டும் கீழாடை மற்றும் கோவணம் போன்றவைகளை வழங்கி வந்தார் .

மனதில் எப்போதும் ஈசனை  நிறுத்தி , வாக்கில் ஈசனின் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி சிவத்தொண்டு ஆற்றி வந்த அமர்நீதி நாயனார் , திருநல்லூர் என்னும் தலத்திற்கு சென்று அங்குள்ள ஈசனை வழிபட்டு திருவிழாவை கண்டு களிப்பதை வழக்கமாகி கொண்டிருந்தார் .  திருவிழாக் காலங்களிலும், மற்ற காலங்களிலும் சிவனை தரிசிக்க வரும் அடியவர்கள் பசியாறும் பொருட்டு உணவு மற்று உடை வழங்க ,திருநல்லூரில் மடம் ஒன்றை நிறுவி தானம் செய்து சிவ தொண்டு புரிந்துவந்தார்.

தன்னையே மூச்சாகக் கொண்டு வாழும் அமர்நீதி நாயனாரின் அன்பின் பெருமையை உலகுக்கு உணர்த்த எண்ணினார் சிவபெருமான். அந்த திருவிளையாடல் கதைக்கான திரைக்கதையும் எழுதியாகி விட்டது .  ஆடல் அரசன் ஒரு பிரமச்சாரி வேடத்தில் திருநல்லூர் திருத்தலத்திற்கு வந்தார். அவரின் கொள்ளை கொள்ளும் தெய்வீக அழகில் மயங்கிய  அமர்நீதி நாயனாரும்  உள்ளம் மகிழ்ந்து , மலரடி பணிந்து வணங்கினார். திருமடத்தில் சிறந்த அந்தணர்களால் செய்யப்படும் அமுதை  உண்டு பசியாற வேண்டினார் அமர்நீதி நாயனார்.

அதற்கு அடியவர் உருவில் வந்த இறைவன் ,  தான் போய் காவிரியில் நீராடி வருவதற்குள்  அவரிடம் உள்ள கோவணத்தை காப்பாற்றி வைத்திருந்து தருமாறு கேட்டுக் கொண்டு தன் தண்டில் முடிந்திருந்த இரண்டில் ஒரு கோவணத்தை அவிழ்த்துக் கொடுத்தார். இறைவன் கொடுத்த கோவணத்தை வாங்கிக்கொண்ட அமர்நீதி நாயனாரும் அவ்வாறே செய்வதாக கூறி, அடியவர் கொடுத்த கோவணத்தை தனியொரு இடத்தில் வைத்தார் . அந்த கோவணத்தை அங்கிருந்து மறைத்து விட்டார், மகேசன்.

 சிறிது நேரம் கழித்து அடியவர், திருமடம் நோக்கி வந்தார். அப்போது அவர் முழுவதுமாக மழையில் நனைந்ததுபோல் காணப்பட்டார். அவரது உடைகளும், தண்டில் வைத்திருந்த மற்றொரு கோவணமும் நீரில் நனைந்திருந்தது. எனவே அமர்நீதி நாயனாரிடம்  கொடுத்து வைத்த கோவணத்தை எடுத்து வரும் படி கேட்டுக்கொண்டார் . நாயனாரும் தனியறைக்குள் சென்று கோவணத்தை வைத்த இடத்தில் தேடினார். எங்கும் கிடைக்காமல் திருமடத்தில் இருந்த அனைவரிடமும் விசாரித்தார், ஆனால் கோவணத்தை அறிந்தவர் எவருமில்லை. தனக்கு வந்த சோதனையை எண்ணி கலங்கிய நாயனார் , தான்  பெரும் பாவத்திற்கு ஆளானது குறித்து மனம் கலங்கினார்.

 பின்னர், அடியவர் ஈரத்துடன் நிற்கிறாரே என்று எண்ணி, தன்னிடம் இருந்ததில் சிறந்த ஒரு கோவணத்தை எடுத்துக் கொண்டு அடியவரை நோக்கிச் சென்றார் அமர்நீதி நாயனார். கோவணம் காணாமல்  போனது குறித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்ட நாயனார் தன்னிடம் உள்ள வேறு ஒரு நல்ல கோவணத்தை ஏற்றுக்கொள்ளுமாறு  வேண்டினார். வெகுண்ட அடியவர் அதை ஏற்க மறுத்தார் . உடல் நடுங்கிய  அமர்நீதி நாயனார்  ,அறியாமல் நடந்து விட்ட பிழைக்கு ,  அந்த கோவணத்திற்கு பதிலாக உயர்ந்த பட்டாடைகளும், நவமணிகளும், பொன்னும், பொருளும் தருகிறேன் என்று கூறியும் தன்னிடம் ஈரமாக உள்ள கோவணத்தை தராசில் ஒரு பக்கத்தில் வைப்பதாகவும்  அதற்கு நிகராக கோவணத்தை தரும்படியும்  பணித்தார் அடியவர்.

 அதற்கு  ஒப்புக்கொண்ட அமர்நீதி நாயனார் அதற்கான ஏற்பாட்டைச் செய்தார். லேசில் விளையாட்டை முடிப்பவரா ஈசன் . தராசின் ஒரு பக்கத்தில் அடியவரின் கோவணம் வைக்கப்பட்டது. அதற்கு நிகராக தன்னிடம் இருந்த ஒரு கோவணத்தை தராசு தட்டில் வைத்தார் அமர்நீதி நாயனார். ஆனால் தராசு சமமாவதற்கு பதிலாக, அடியவரின் தட்டு கீழ்நோக்கிச் சென்றதைப் பார்த்து திகைத்துப் போனார்  அமர்நீதியார் .  அடியவர்களுக்கு கொடுக்க வைத்திருந்த கோவணங்களை ஒன்றன்பின் ஒன்றாக தட்டில் வைத்தும் அடியவர் பக்கத் தட்டு கீழ் நோக்கியே இருந்தது.

நாயனாரிடம் இருந்த கோவணம் எல்லாம் தீர்ந்து விட்ட நிலையில்  ,உயர்ந்த பட்டாடைகளையும் தராசு தட்டில் வைத்தார். அப்போதும் தராசு சமமாகவில்லை. நவரத்தினங்கள், பொன்னும், பொருளும் வைத்தும் யாதொரு பயனும் இல்லாமல் போய்விட்டது. வைப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்ற நிலை வந்து விட்டது.

                             

                                     

 

தன்னிடம் இருந்த பொருட்கள் அனைத்தையும் வைத்தும் தராசு சமமாகாத நிலையில் தன் மனைவி மற்றும் பிள்ளையுடன், தராசு தட்டில் ஏறி ‘இதுவரை நான் செய்த அடியவர் அன்பினில், சிறிதும் தவறாதிருந்தது உண்மையானால், இத் துலாம் நேர் நிற்க’ என்று கூறி பஞ்சாட்சரம் ஓதினார் .  தராசு தட்டு இப்போது சமமானது. அமர்நீதி நாயனார் உள்பட அங்கிருந்த அனைவரும் இறைவனின் கருணையை எண்ணி மனம் நெகிழ்ந்தனர் . ரிஷப  வாகனத்தில் இறைவனும், இறைவியும்  எழுந்தருளி ,அங்கிருந்த மக்களுக்கு காட்சியளித்தார் .  இறைவன், அமர்நீதியாரையும், அவரது குடும்பத்தையும் சிவபதம் வருமாறு அருளி மறைந்தார்.

 

 

 

 

                                          

ஓம் நமசிவாய .........



Leave a Comment