தமிழகத்தில் முருகனுக்குக் குடவரைக் கோயில் உள்ள இடங்கள்..... 


முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் “கார்த்திகேயன்” என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான். குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.


வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி, கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும்.

அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான். அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.

முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும். முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர். பிரம்மசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும். கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும். தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.



Leave a Comment