ஏனாதி நாத நாயனார் புராணம் (பாகம்- 2)


- "மாரி மைந்தன்" சிவராமன்

மறுநாள் 
ஏனாதி நாதருக்கு 
ஒரு செய்தி அனுப்பினான்
அதிவீரன்.

"எதற்கு 
அனாவசியப் போர் ?அப்பாவிகள் ஏன் 
உயிர் விட வேண்டும்??

நமது இருவருக்கும் 
தானே பகை ?

பக்கத் துணை யாருமில்லாமல் 
போர் செய்வோம்.

நானும் தனித்து வருகிறேன்.
நீயும் தனியாளாய் வா.

ஒத்தைக்கு ஒத்தை பார்த்து விடுவோம் 
ஒரு கை.

ஊர் எல்லையில்
இருக்கும் 
காட்டுப்பகுதியே 
சண்டைக் களம்.

வென்றவர் மட்டுமே 
வருங்காலத்தில்
வாட் பயிற்சிக்கு வாத்தியார்"

என்பதே வந்த ஆள் சொன்னார் 
போர்முரசின் சாராம்சம்.

சொன்ன நாளில் 
குறித்த நேரத்திற்கு முன்னரே சென்று காத்திருந்தார் 
ஏனாதி நாதர்.

தனியாளாக 
வருகிறானா...
இல்லை...
காட்டில் பலரை முன்னேற்பாடாக 
ஒளித்து வைத்திருக்கிறானா
என நினைத்தாரே தவிர ஆயிரம் பேர் வந்தாலும் எதிர் கொள்ளத் 
தயாராக இருந்தார் ஏனாதிநாதர்.

அதிசூரனும் 
அப்படி ஒரு திட்டத்தில் தான் இருந்தான்.

ஆனால் அதை விட 
ஒரு பெரும் சூழ்ச்சியின் சூட்சமம் 
அவனுள் 
பொறி தட்டியதால்
அத்திட்டத்தைக் கைவிட்டான்.

ஏனாதிநாதர் 
நாற்புறமும் 
பார்வையைச் சுழற்றியவாறே காத்திருக்க 
அதிசூரன் 
ஒரு கையில் வாளுடனும் மறுகையில் கேடயத்துடனும் 
தனித்தே வந்தான்.

ஆனால் 
ஏனோ முகத்தை கேடயத்தால் மறைத்தபடி
வந்தான்.

அவனைப் பார்த்த மாத்திரத்தில் 
ஓ(ம்)வென கத்தியவாறே அவன்மீது
புலி போல் பாய்ந்தார்  ஏனாதி நாதர்.

கேடயம் அவன் 
முகம் விட்டு நழுவியது.

முகத்தில் திருநீறு. 
அதுவும் மூன்று கீற்று.

ஏனாதி நாதருக்குப் போரிடத் தோன்றவில்லை.

'திருநீறு அணிந்து 
சிவன் ஆகிவிட்டவனிடம் வாட்போரா...?

தவறு....  தவறு

நல்லவேளை வாளை வீசாதிருந்தேன்'

கேடயத்தையும் கூர்வாளையும் 
தாழ்வாக்கி 
அதிசூரனைப் பார்த்து புன்னகைத்தார் ஏனாதிநாதர்.

திட்டம் பலித்து விட்ட மகிழ்வில் 
ஏனாதி நாதரை 
வாள் வீசி 
கொல்லத் துடித்தான் அதிசூரன்.

அவன் அப்படி 
செய்து விடுவானோ என ஏனாதிநாதரும் பயந்தார்.

ஒரு சிவ வடிவில் இருப்பவருக்கு 
கொலை செய்த
பழிபாவம் வந்துவிடுமோ என தான் 
ஏனாதியார் பயந்தார்.

சிவ பக்தனுக்குத் 
தோஷம் வந்துவிடக்கூடாது 
என்று அஞ்சிய 
ஏனாதி நாதர் 
போர் புரிபவர் போல் கொஞ்சம் நடித்தார்.

சும்மா போரிட்டபடியே 
அவனிடம் 
தன் எண்ணம் சொல்லி இனிமேல் அவனே 
வாள் வித்தை கற்பிக்கட்டும் 
என்று உறுதி சொல்லி
வாட் போரை 
நிறுத்தி விடலாம் 
என நினைத்தார்.

ஆனால் ஆத்திரக்காரனுக்குப் 
புத்தி மட்டு என்பதை உறுதியாக்கும் வகையில்
ஏனாதி நாதரின்
நல்லெண்ணத்தைப் புரிந்து கொள்ளாத அதிசூரன் 
அதிவீரன் போல் 
ஏனாதி நாதரை 
வாள் வீசிக் கொன்றான்.

ஜெயபேரிகை 
கொட்டிய வண்ணம்
ஊராரிடம் 
தம்பட்டம் அடிக்க
ஊருக்கு விரைந்தான்.

அப்போது செஞ்சடை மின்னலிட வெளிப்பட்டார் இந் நாடகத்தின் இயக்குனர் 
சிவபிரான் தேவியோடு.

"வெண் திருநீறு அணிந்தவரெல்லாம் சிவவடிவம் என 
எப்பேதமுமின்றி 
பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருக்கும்
 ஏனாதி நாதரே!

எனதன்பு 
ஏனாதி நாத நாயனாரே!

விழித்திடு. எழுந்திரு."

ஆண்டவனின் கட்டளையை 
அப்படியே ஏற்றார் 
ஏனாதி நாத நாயனார்.

உயிர் பிழைத்து
உயிர்ப்போடு எழுந்து 
தாள்பணிந்து 
இறை வணங்கி நின்றார்.

"மெய்யன்பரே...!

 

வஞ்சகனின் 
சூதை மீறி 
திருமண் அணிந்திருந்ததாலே அவனை
என் போல் பாவித்து கொலை ஏற்று 
உலகப் பாசம் 
அறுத்த அருளாளரே...!

நீர் என்றென்றும் 
எம்மை விட்டுப் பிரியாத வாழ்வைப் பெறுவாயாக!

வா....
சிவபுரி  செல்வோம்."

என அழைத்தார் 
சிவபுரித் தலைவர்.

காட்டிலிருந்த 
ஓரறிவு முதல்
ஐந்தறிவு வரையிலான ஜீவிகள் அனைத்தும்
வியந்து பார்க்க வானிலிருந்து விழுந்த மலர்களை நுகர்ந்தபடி
விண்ணில் பறந்து மறைந்தார் 
ஏனாதி நாத நாயனார்.

'வேடநெறி நில்லார்
வேடம் பூண்டு 
என்ன பயன் ?'
என்ற திருமூலர் வாக்குப்படி
சிவனடியார் போல் 
பொய் வேடம் பூண்ட அதிசூரன் 
ஊர் தூற்ற வாழ்ந்து பின்னரும் நரகத்தில் துன்பமுற்றான் 
என்கிறார்
வாரியார் சுவாமிகள்.

கிபி 660-840 வாக்கில் இயற்பகை நாயனார் இளையான்குடி நாயனார் ஏனாதி நாத நாயனார் வாழ்ந்ததாக ஓர்
ஆய்வுக் குறிப்பு உள்ளது.

'ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்' என்பது சுந்தரர் வாக்கு.

திருச்சிற்றம்பலம்.

(ஏனாதிநாத நாயனார் புராணம்- முடிவுற்றது)
 



Leave a Comment