ஏனாதி நாத நாயனார் புராணம் (பாகம் -1)


- "மாரி மைந்தன்" சிவராமன்

புலிக்கொடி பறந்த சோழநாட்டில் கும்பகோணத்திற்கு தென்கிழக்கில் 
அரிசிலாற்றங்கரையில் சிவபுரி போல் அமைந்திருக்கும் அருள்மிகு ஊர் எயினனூர்.

அவ்வூரில் தான் அவதரித்தார் 
ஏனாதி நாத நாயனார்.

ஏனாதி நாத நாயனார் 
ஈழகுலச் சான்றார் குலத்தைச் சேர்ந்தவர்.
கள் இறக்கும் சமூகம்.

சான்றார் என்பதே காலப்போக்கில் 
சாணார் என்று மருவியதாகச் சொல்வர்.

அக்காலத்தில் 
சேனைத் தலைவர்களுக்கு ஏனாதியர் என்ற 
பெயர் இருந்தது.

சங்க காலத்தில் 
அரசர்கள் 
ஏனாதியருக்கு 
நெற்றியில் அணியும் தங்கப் பட்டமும் 
விரலுக்கு 
ஏனாதி மோதிரமும் அளித்து வருவதை மரபாகக் கொண்டிருந்தனராம்.

இப்படிப்பட்ட 
சிறப்பான குலத்தில் தோன்றிய ஏனாதிநாதர் சிவனிடத்தில் 
பேரன்பு கொண்டவர்.

சிவ கோலத்தில் இருப்பவர்களைக் கண்டால் 
மனம் நெகிழ்ந்திடுவார்.

நெற்றியில் திருநீறு 
அணிந்தவர்களைப் பார்த்த மாத்திரத்தில் பரவசமாகி விடுவார்.

புனித திருநீறைப் முக்கீற்றாகப் 
பூசுபவர்கள் 
ஏனாதி நாதரைப பொறுத்தமட்டில் 
பூசிக்கத்தக்கவர்கள்.

அதற்கு அவரிடம் 
நிறையக்
காரணங்கள் இருந்தன.

திருநீறு 
சிவபக்தியின் புறச்சின்னம்.

அகம்பாவம் 
சுயநலம் 
மயக்கம் என்ற மும்மலங்களை அழிக்கவல்லது.

பொருளாசை பெண்ணாசை
புத்திர பாசம் 
ஆகிய 
மூன்று ஆசைகளைத் துறக்க வைப்பது.

உலகப்பற்று 
சமய வேத வாக்குவாதம் மற்றும் நம்பிக்கை 
உடல் பற்று 
ஆகிய மனச் சார்புகளைப் போக்கவல்லது.

தூல சரீரம் 
ஆவி சரீரம் 
காரண சரீரம் 
ஆகிய மூவகை உடல் பற்றுகளைக் கடந்து நிற்கச் செய்வது.

விழிப்பு நிலை 
கனவு நிலை 
ஆழ்ந்த உறக்க நிலை முதலான 
மூவகை அவஸ்தைகளிலிருந்து விலகி
இறைவனோடு 
கலக்க வைப்பது.

பிணி நீக்கி 
பிறப்பு இறப்பு 
உள்ளிட்ட எல்லா நோய்களையும் நீக்கி முக்தியைத் தரவல்லது.

இவை போன்ற
ஆன்றோர் வாக்கினைப் 
பரிபூரணமாக நம்பியதால் சிவ உருவமாகவே பார்த்தார் 
விபூதி பூசியவர்களை.

அவர்கள் 
ஆசைப்பட்டால் 
தன் உயிரைத் தரவும் சித்தமாக இருந்தார்.

அவரைப் 
பொறுத்த மட்டில் 
திருநீறு சிவனின் ரூபம்.

சிவ பணிக்கு அப்பால் ஏனாதி நாதரின் வருமானத்திற்கு
ஒரு தொழில் இருந்தது.

அது அரச குடும்பத்தினருக்கும் இளம் காளையருக்கும் வாள் பயிற்சி பயிற்றுவிப்பது.

அதில் வரும் வருமானத்தில் திருநீறுடன் வருவோருக்கும் 
சிவனடியாருக்கும் 
உதவி, உபசரணை செய்துவந்தார்.

வேண்டியவர் வேண்டாதவர் 
நண்பர் பகைவர் 
என்று பாராமல்
உதவி புரிந்து வந்தார்.

வாள் வலியும் 
தோள் வலியும் 
சிவ வலியும் 
பெற்றிருந்த அவருக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பேரும் புகழும் 
பெருகி வந்தது.

மாணாக்கர் கூடினர்.
ஓய்வறியாது கற்பித்தார்.
ஊருக்கே உதவி வந்தார்.

எல்லோருக்கும் 
இன்பம் தரும் சந்திரன் கள்வருக்கு 
வெறுப்பைத் தரும் அல்லவா ?

நல்லரின் வளர்ச்சியை வெறுத்த புல்லன் 
ஒருவன் அவ்வூரில் இருந்தான்.

ஆதி சூரன் 
எனப் பெயர் பெற்றிருந்த அவன் ஏனாதி நாதரின் உறவினன்-பங்காளி.

அவனும் 
வாள் பயிற்சி  
கற்பிக்கும் தொழில் செய்து கொண்டிருந்தான்.

அவன் வெறும் 
வாய் வீச்சு வீரன்.
தற்பெருமைக்காரன்.

தனக்கு 
ஒப்பாரும் மிக்காரும் யாருமில்லை 
எனக் கருதிய 
தலைக்கனத்தான். 

வாள் வித்தை பயிற்றுவிக்கும் உரிமை தனக்கு மட்டும் 
இருக்க வேண்டும் என பேராசைப்பட்டான்.

ஆனால் அவனிடம் 
கற்க வருபவர் எண்ணிக்கை 
நாளுக்கு நாள் குறையவே அத்தனை ஏமாற்றமும் ஏனாதி நாதர் மீது வன்மையாய் பொறாமையாய் பகையாய் 
வெடித்த வண்ணம் இருந்தது.

இந்த முறையில்லாப் பகை காரணமாக 
ஒரு நாள் 
தன் உற்றாரையும் தன்னிடம் கற்றாரையும் கற்போரையும் 
கொலைத் தொழில்
புரிவோர்களையும் சேர்த்துக்கொண்டு படைகலன்களோடு வந்து ஏனாதிநாதர் 
வீட்டில் தனித்திருந்த நேரம் பார்த்து  
வீட்டின் முன் நின்று
போருக்கு அழைத்தான்.

அஞ்செழுத்தானை நெஞ்சில் கொண்ட
அஞ்சா நெஞ்சரான ஏனாதிநாதர் 
தனித்தே தயாரானார் போர் அறியா 
பொய் வீரன் 
அறைகூவலைக் கேட்டு.

இடுப்பில் 
இறுகக் கட்டிய கச்சையோடும்
காலில் கட்டிய 
வீரக்கழங்களோடும் 
ஒரு கையில் 
வாளுடனும் 
மறு கையில் கேடயத்துடனும் 
ராஜ சிங்கமாக 
வீர கர்ஜனையோடு வெளியே வந்தார் ஏனாதிநாதர்.

சிங்கத்தை சந்திக்க சிங்கத்தின் குகைக்கே வந்த குள்ள நரி போல அதிசூரன் 
நின்றதைக் கண்டு சிரிப்புத் தான் வந்தது ஏனாதி நாதருக்கு.

அதற்குள் 
அக்கம் பக்கத்திலிருந்த அவரின் உறவினர்களும் மாணவர்களும் ஓடிவந்து 
நிலைமை உணர்ந்து ஏனாதிநாதர் 
இருபக்கமும் 
அரண் போல் நின்றனர்.

கூட்டத்தைப் பார்த்ததும் பயந்து போன 
அதிசூரன் புத்திசாலித்தனமாய்,

"ஏனாதியாரே...!
இங்கு வேண்டாம் சண்டை... 
இப்போதும் வேண்டாம்...

சாலைக்கரைக் குளம் அருகே உள்ள 
திடலுக்கு வா... 
அதுவே 
இருவருக்குமான 
பொது இடம்.

வாள் பயிற்சி தரும் தகுதி வெற்றி பெற்றவருக்கே"
என 
நிபந்தனை விதித்தான்.

அவனே நாளும் குறித்தான்.

அந்நாளில் 
அதிசூரனின் கூலிப்படையும்
ஏனாதி நாதரின் 
வாள் படையும்
திடலில் கூடின.

உண்மையில் 
ஒரு பெரும் 
போரே நடந்தது.

எக்கச்சக்கமானோர்
கை இழந்தனர்
கால் இழந்தனர்.
தலை இழந்தனர்.

தரைமண் 
செங்குருதி
மயமாகியது.

பிணக் குவியலை கழுகுகள் வட்டமிட்டன.

ஒருகட்டத்தில் 
உயிர்பிழைத்தோரும் அதிவீரனும் 
புறமுதுகிட்டுத் தப்பியோடினர்.

அன்று இரவு
அதிவீரனுக்குத் 
தூக்கம் வரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது.
அவமானம் மேலும் அவமானப்படுத்தியது.

நேருக்கு நேர் மோதி வெற்றி பெற முடியாது என நேர்மையாகத் தீர்மானித்தான்.

ஏதேனும் தந்திரத்தால் வஞ்சகத்தால் 
வெற்றி பெறலாம் 
என முடிவெடுத்தான்.

யோசித்தபடியே 
தூங்கிப் போனான்.

 

(ஏனாதி நாத நாயனார்  புராணம் -தொடரும்)
 



Leave a Comment