எறிபத்த நாயனார்  புராணம் (பாகம்-2)


- "மாரி மைந்தன்" சிவராமன்

பட்டத்து யானையை 
பயங்காட்டி ஓட்டி வந்த 
மூன்று குத்துக்கோற்காரர்களையும் 
இரண்டு பாகர்களையும்
பார்த்த மாத்திரத்தில் எறிபத்த நாயனார்
'இவர்கள் கட்டுப்படுத்தாததால் தானே 
பட்டத்து யானை 
மதம் பிடித்த 
காட்டு யானை போல
கட்டுக்கடங்காமல்
சிவகாமியாண்டாரைத்
துன்புறுத்தியது' என்று வெகுண்டார்.

அடுத்தடுத்த நொடிகளில் ஐந்து பேரையும் மழுவாயுதம் வீசி 
கொன்றொழித்தார்.

இச்செய்தி 
அரைகுறையாய்
அரசருக்கு எட்டியது.

யாரோ பகைவன்
வந்து விட்டதாகக் கருதி கோபம் பொங்க 
தானே குதிரை ஏறி உடனேபுறப்பட்டார் 
புகழ்ச்சோழர். 

அரசரின் கோபம் புரிந்த  மந்திரிமார்கள் 
அரசருக்குப் 
பின்புலமாக இருக்க நான்கு சேனைகளையும் தயார்படுத்தி 
அனுப்பி வைத்தனர் துரிதமாக.

புகழ்ச்சோழர் யானையும் உடன் வந்த ஐவரும் இறந்து கிடந்த 
இடத்திற்கு வந்தார்.

அவ்விடத்தில் செத்தவர்கள் தவிர யாருமில்லை.

அரசரின் கோபம் உச்சியைத் தொட்டது.

சற்று தூரத்தில் 
சிவபக்தர் 
எறிபத்தர்
மழுவாயுதத்துடன் 
வெறி பிடித்தவர் போல் நின்று கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்த மாத்திரத்தில் அரசரின் மனம் 'அமைதி... அமைதி' என அலறிச் சொன்னது.

காரணம்
எறிபத்தர் இருந்த 
கோலம்... 
சிவனடியார் கோலம்.

அது சமயம் 
அரசரின் பின்புலத்தில் இருந்த சேனைப் படைகள் அரசரை முந்தி 
களம் காண முற்படவே 
கையசைவில் 
அதைத் தடுத்து 
கண்ணசைவில் புறம் நிற்க வைத்தார்.

பின் குதிரையை விட்டு இறங்கிய 
புகழுடை அரசர் 
எறிபத்தரை நெருங்கி பணிந்து வணங்கி,

"ஐயன்மீர்....!
தவறு நேர்ந்து விட்டது.

சிவபிரானின் பிள்ளையாகிய தங்களிடம் பட்டத்து யானையும் பாகர்களும் 
ஏதேனும் பாதகமாக நடந்து கொண்டார்களா ?

தாங்கள் கொடுத்த தண்டனை போதுமா ?

இன்னும் யாருக்காவது தண்டனை 
கொடுக்க நினைத்தால் இப்படி ஒரு நிலையை தங்களுக்கு ஏற்படுத்திய எனது பிழையையும் மன்னிக்காதீர்கள்.

என் பணியாளர்களை நெறிப் படுத்தாமல் இருந்தது என் தவறே."

எறிபத்தர் 
நடந்ததைச் சொன்னார்.
தான் செய்தது 
சிவ அபராதம் என உணர்ச்சிவசப்பட்டு உரக்கச் சொன்னார்.

ஏற்கனவே 
மனம் நொந்திருந்த 
புகழ்ச்சோழர்,

"சிவ மைந்தனே...!

தங்கள் தெய்வாம்சம் பொருந்திய மழுவால் என்னைக் கொன்று 
விட வேண்டாம்.
அதற்கும் தகுதியற்ற 
பாவி நான்."

என்றவாறு தன் உடைவாளை உருவி,

"இதோ என் 
வாளைக் கொண்டே 
இச்சிறியோனின் 
சிவ குற்றத்திற்கு 
அபராதமாக 
என் உயிரை 
எடுத்துக் கொள்ளுங்கள்."
எறிபத்தரிடம் நீட்டினார்.

எறிபத்தர் திகைத்தார். 'இப்படி ஒரு சிவ பக்தியா! அன்பு ஊற்றா ?' வியந்தார்.

கொஞ்சம் விட்டால்...  
காலதாமதம் ஆக்கினால்...  உணர்ச்சிபூர்வமாக இருக்கும் மன்னர் தன்னைத்தானே 
கொன்று கொள்வாரோ
எனப் பயந்தார்.

எனவே அரசரின் உடைவாளை 
அவர் கையிலிருந்து பறித்தார்.

பறித்த எறிபத்தர் 
"அன்பின் அருவியாக இருக்கும் 
உங்கள் பெருமை அறியாமல் 
நீங்கள் சிவமைந்தர்கள் மீது கொண்டுள்ள அன்பின் ஆழம் தெரியாமல் 
உங்கள் சிவ பக்தியின் அருமை புரியாமல் 
உங்கள் இன்னுயிரைப் பறிக்க நினைத்த
பாதகனாய்
இருந்து விட்டேனே!" 
என கண்ணீர் உதிர்த்தபடி கையிலிருந்த
புகழ்ச்சோழரின் கூர்வாளினைத் 
தன் கழுத்தில் அழுத்தி 
சாகத் துணிந்தார்.

அதனைக் கண்டு துடிதுடித்துப் போன புகழ்ச்சோழர் வாளினை பறிக்க முற்பட்டார்.

அதைத் தடுத்த 
எறிபத்தர் வாளினை 
அரசர் பாதங்களில் வைத்துப் பாதம் தொட்டார்.

இருவரிடமும் இருந்த அன்பும் மரியாதையும் சிவபக்தியும் 
வெளிப்பட்ட தருணம் அது.

எறிபத்தர் திருவடிகளில் முடிசூடிய அரசர் 
விழுந்து வணங்க
அவர் எழுந்தவுடன் 
ஆண்டி போலிருந்த எறிபத்தர் 
அரசரைத் தழுவி
அவரின் திருப்பாதங்களில் தன் சிரத்தைப் பதித்தார்.

இப்படியாக இருவரும் அன்பைப் பரிமாறிக் கொண்டிருந்த தருணத்தில் 
ஆகாயத்தில் ஒலித்தது ஓர் அசரீரி.

அது திருவிளையாடல் முடிந்துவிட்டதன் அறிகுறி.
சிவபிரானின் வெளிப்பாட்டுக் குறி.

"அன்பிற் சிறந்த நல்லோரே!
மெய்தவச் சீலர்களே!

சிவபக்தியில் 
சிறந்து விளங்கும் 
உங்கள் இருவரின் அன்பையும் தொண்டையும் 
உலகுக்கு வெளிப்படுத்தவே 
இந்த நாடகத்தை 
நாம் நடத்தினோம்.

புகழ்ச்சோழர் 
சிவனடியார் மீது வைத்திருந்த நம்பிக்கை அவர் அன்பின் வெளிப்பாடு.

பெயரைப் போலவே 
அவர் 'புகழ்' சோழர் 
என புகழ் பெறுவார்.

எறிபத்தர்
என் மீது வைத்த அன்பு பேரன்பு.

தக்க நேரத்தில் 
தண்டனை தருவது 
இறைவனின் இயல்பு.

அதைத்தான் 
எறிபத்தர் செய்தார்.

அடியவர்க்கு இடர் களைவது 
சிறந்த தொண்டு.

அந்தவகையில் 
ஆண்மை மிக்க 
எறிபத்தர் என்னுள் நிறைந்தவர்.
இறைநிலை மாந்தர்.

இனி 
எறிபத்த நாயனார் 
எனும் பெயர் பெறுவார்.

விரைவில் அவர் 
கைலாய கிரியில் சிவகணங்களுக்கு தலைவராகி 
சிவ பணி தொடர்வார்."

இறைவனின் 
கருணைக குரல் 
காற்றில் கரைந்தது.

அடுத்த கணமே 
பட்டத்து யானை 
ஒன்றுமே நடவாதது போல்
துள்ளி எழுந்தது.

பாகர்கள் கண்விழித்தனர் 
உறங்கி எழுந்த மாதிரி.

சிவகாமியாண்டார் பூக்கூடையை 
அன்றலர்ந்த மலர்கள் நிறைத்து மணம் பரப்பின.

இறை குரல் 
கேட்ட பரவசத்தில்
சோழ அரசர் 
மெய் சிலிர்த்த படி
அரண்மனைக்குப்
புறப்படத் தயாரானார்.

புரிந்து கொண்ட 
அவர் குதிரை 
அரசர் அருகில் 
வந்து நின்றது.

புகழ்ச்சோழரிடம் 
எறிபத்தர் 
ஓர் அன்பு 
வேண்டுகோள் விடுத்தார்.

"மன்னர் மன்னா...!பரமனின் குரல்கேட்டு புகழ்சேர்த்த மன்னா...!

நீங்கள் அன்பாளும் அரசர். சிவன் போற்றிய சோழர். பட்டத்து யானை மீதேறி வெண்கொற்றக் குடை நிழலின் கீழ் 
அரண்மனை செல்லுங்கள்.

அத்திருக்காட்சியை கண்குளிர 
அகம் மகிழ 
காண விரும்புகிறேன்."

அவ்வண்ணமே
அரசர் புறப்பட்டார்.

அருகிருந்து
அத்தனையும் பார்த்திருந்த 
இறை குரல் கேட்டு மகிழ்ந்திருந்த
சிவகாமியாண்டார்
பூக்கூடையோடு
ஆனிலையப்பரைத் தரிசிக்க 
கோயிலுக்குப் போனார்.

எறிபத்த நாயனார் சிவபிரானின் 
அழைப்பை ஏற்று 
மானிடச் சட்டையை கழற்றி எறிந்துவிட்டு பேரின்ப உலகிற்குப் பயணமானார்.

ஒரே சமயத்தில் புகழ்ச்சோழர் 
எறிபத்த நாயனார் சிவகாமியாண்டார் புறப்பாடுகளைப் பார்த்திருந்த  பக்தகோடிகள்
பசுபதீசுவரர் 
புகழ் பாடி மகிழ்ந்தனர்.

எறிபத்த நாயனார் புராணத்தை
ஞானப் பார்வையோடு ஆய்வு செய்பவர்கள்
ஐம்புலன்களையும் ஆணவ மலத்தையும் வென்ற எறிபத்த நாயனார் 
ஐந்து பாகர்களையும் யானையையும் கொன்று வீரத்துடன் நின்றதை ஒப்பிட்டுச் சிலாகிப்பர்.

உண்மையில் 
சிவகுற்றம் செய்த யானையையும் 
பாகர்களையும் 
கொன்று குவித்து மறுமையில் 
அவர்களுக்குப் 
பெரும் துயர் நேராவண்ணம் காத்தது எறிபத்த நாயனாரின்
சிவ நோக்கம் என்று வியாக்கியானம்
செய்வோரும் உண்டு.

'இலைமலிந்த வேலநம்பி எறிபத்தர்க்கு அடியேன்'
என்பது 
சுந்தரமூர்த்தி நாயனார் எறிபத்த நாயனாருக்கு கொடுக்கும் 
இறை ஆசனம்.

திருச்சிற்றம்பலம்.


(எறிபத்த நாயனார் புராணம்-முடிவுற்றது.)



Leave a Comment