எறிபத்த நாயனார் புராணம் (பாகம்-1)


- "மாரி மைந்தன்" சிவராமன்


சோறுடைத்த நாடான சோழ நாட்டின் தலைநகராக 
ஐம்பெரும் நகரங்கள் விளங்கின.

அவை காவிரிப்பூம்பட்டினம் திருவாரூர்
உறையூர்
சேய்ஞலூர்
கருவூர்.

இவற்றில் கருவூர் ஆகச்சிறந்த 
ஆன்மிக பூமி.

இயற்கை வளம் 
கொஞ்சும் அத்தலைநகரில் 
தவழ்ந்து ஓடும் 
புனித நதி
ஆம்பிராவதி. 

நதியின் 
இரு கரைகளிலும் ஞானிகளும் சாதுக்களும் தாமிர(மாமர) வடிவில் தவமிருக்கும் 
பேறு பெற்றதால் 
நதிக்கு 'ஆம்பிராவதி'
எனப் பெயர் வந்தது.

அந்நகரின் 
இன்றைய பெயர் கரூர். நதியின் தற்கால பெயர் அமராவதி.

கருவூரைக் 
கண்ணும் கருத்துமாக 
அன்றும் இன்றும் என்றும் காத்துவரும் 
இறைவனின் திருநாமம் பசுபதீசுவரர். 

காமதேனு 
பால் கொடுத்து 
பேறு பெற்றதால் ஆனிலையப்பர் என்று
இறைவனை 
அழைப்பர் ஆன்றோர்.

மாதம் மும்மாரி பொழிய சீரோடும் சிறப்போடும் ஆண்டுவந்தார் 
சோழ மன்னர்.

அவர் பெயர் 
புகழ்ச்சோழர்.

ஆழ்ந்த சிவபக்தர். 'அவனன்றி ஓர் அணுவும் அசையாது' என்பதில் 
முழு நம்பிக்கை உள்ளவர்.

சிவனடியார்கள் மீது 
ஏக மரியாதை. 
பார் போற்றும்
தனது செல்வாக்கையும் அரச பதவியையும் பெரிதெனக் கருதாது அடியவர்களைக் கண்டால் பணிந்து பாதம் தொழுவார் 
அப்பெரும் மன்னர்.

அதனால் 
அவர் நாட்டில் எப்போதும் ஆன்மீக அலை 
'சிவசிவ' என 
பரவசமூட்டியபடியே இருக்கும்.

சிவனாட்சி 
நடந்து வந்த திருநாட்டில் சிவகாமியாண்டார் என்று ஒரு சிவ பக்தர்.

வயது முதிர்ந்திருந்தாலும் அதிகாலை எழுந்து திருக்கோயிலின் நந்தவனத்திற்கு 
மெல்ல நடந்து பூந்தோட்டத்தில் 
'சிவசிவ' என்று உச்சரித்தபடியே 
குளித்துவிட்டு 
தனது வாயில் துண்டைக் கட்டிக்கொண்டு பயபக்தியோடு 
பரமனுக்குப் பூக்களை செடிகளுக்கும் மரங்களுக்கும் வலிக்காமல் பறித்து பூக்கூடையை 
நிரப்பிக் கொண்டு  
மாலை தொடுக்க தங்கியிருக்குமிடம் செல்வார்.

பின் மாலையோடு மறையோனைக்
மனநிறைவோடு
வணங்க வருவார்.

இதுவே அவரது 
அன்றாடப் பணி.

வேறொன்றும் 
வேலை இல்லை அவருக்கு.
அவருக்கென்று 
உறவு சொல்லவும்
யாரும் இல்லை.

புவியாளும் பரமேசுவரனும் 
புனித நாடாளும் 
புகழ்ச்சோழரும் இருக்கையில் 
அவருக்கு 
வேறு உறவு எதற்கு ?

அவருடைய சொத்தும் அதிகம் இல்லை.

மெல்ல நடந்து செல்ல ஏதுவாக கைப்பிடிக்க 
அவர் உயர மூங்கில் தடி.
பசுபதீசுவரருக்குப்
பூ எடுத்துச் செல்ல 
ஒரு பூக்கூடை.

அவ்வளவுதான்.

விலைமதிப்பில்லாச் சிவசொத்து இருக்க
அவ சொத்து 
அவருக்கு எதற்கு ?

அதே கருவூரில் 
ஒரு முரட்டு சிவபக்தர்.

அவர் பெயர் தான் எறிபத்தர்.

சிவனடி தொழுவதும் சிவனடியார் 
பணி செய்வதுமே 
அவரது முழு நேர
சிவத் தொழில்.

அவர் கையில் 
எப்போதும் ஒரு மழுவாயுதம் (கோடாரி) இருக்கும்.

கண்ணெதிரே சிவனடியார்களுக்கு யாரேனும் தீங்கு புரிந்தால் அவர் பேச மாட்டார்.

மழு தான் பேசும்.
மரணம் நிச்சயம்... 
அது யாராக இருந்தாலும் 
அவர் வணங்கும் 
சிவனே வேற்றுருவில் வந்தாலும்.

மக்கள் மகிழ்ச்சியாக இருந்த ஒரு நாள்...
குறிப்பாகச் சொல்வதென்றால்
நவமிக்கு முதல் நாள்...

வழக்கம்போல் சிவகாமியாண்டார் 
பறித்த பூக்களுடன் 
பூக்குடலை 
ஒரு கையிலும் 
உதவும் தண்டினை இன்னொரு கையிலும் பிடித்தவாறு  
ஈசனுக்கு மாலை கட்டச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது 
புகழ்ச்சோழரின்
பட்டத்து யானை 
புகழத்தக்க அலங்காரத்துடனும் பிரமிக்கத்தக்க கம்பீரத்துடனும் 
அச்சம் கொள்ளத்தக்க அகங்காரத்துடனும் அவ்வழியே 
பவனி வந்தது.

மூன்று 
குத்துக்கோற்காரர்கள் வழிநடத்த 
இரண்டு பாகர்கள் 
யானை மீதேறி 
நின்ற வண்ணம் நெறிப்படுத்த 
பட்டத்து யானை பரபரப்பாக 
கடைவீதியையே கலங்கடித்தது.

வியந்தும் பயந்தும் ஒதுங்கிய மக்களை பாகர்களும் 
குத்துக்கோற்காரர்களும் மக்கள் படும் பாட்டைக் கண்டு கொள்ளவில்லை- பட்டத்து யானையின் அமர்க்களம் அப்படி இருந்தது.

வேகமாக ஆட்டம் போட்டபடி வந்த 
பட்டத்து யானை 
சிவகாமியாரைக் கடக்கும்போது 
எதையும் கவனியாது 
ஏக இறைவனைத்
துதித்து கொண்டே சென்று கொண்டிருந்த அவரை 
லேசாக உந்தித் 
தள்ளி விட்டு 
பவனியைத் தொடர்ந்தது.

வயதான சிவகாமியாண்டார் 
புயல் தாக்கியது போல் சுருண்டு தரையில் விழுந்தார்.

பூக்கூடை 
தூரத்தில் 
ஒருபுறம் கிடக்க.... 
இறைவன் சூடவிருந்த பூக்கள் எல்லாம் 
சிதறி
இன்னொருபுறம் கிடக்க 
மிரண்டு போனார்.

'சிவதா... சிவதா' என 'சிவனே காண மாட்டாயா... இதைக் கேட்க மாட்டாயா...' என்று வருத்தத்தைப் புலப்படுத்தும் ஓலம் மட்டும் 
அவரிடமிருந்து எழுந்தது. அதுவும் மெதுவாக ஓய்ந்தது.

உருண்டு 
கைத்தடியைத் தேடி எடுத்து தட்டுத்தடுமாறி எழுந்தவர் 
அந்த வயதிலும் யானையைத் 
துரத்திப் போய் 
கைத் தடியால் 
அடிக்க போனார்.

யானையின் வேகத்திற்கு தடி கொண்டு நடக்கும் கிழவரால் ஈடு கொடுக்க முடியவில்லை.

துவண்டு போய் 
கண்ணீர் பெருக்கோடு அரற்ற ஆரம்பித்தார்.

அப்போது 
பட்டத்துயானை நடத்தும் அலப்பறைகளைக் கண்ணுற்றபடி
அவ்வழி வந்த 
சிவவழி நடக்கும் எறிபத்தர் கணப்பொழுதில் நடந்ததை அறிந்து கண்களில் 
செவ்வொளி பீச்சிட "யானை எப்பக்கம் சென்றது?" என 
சிவகாமியாரிடம் கேட்டார்.

அவர் தனது 
தடியைத் தூக்கி 
திசை காட்டினார் ஆற்றாமைத் துயரோடு.

அவர் காட்டிய திசையில் எறிபத்தர் சீறிப் பாய்ந்தார்.

எறிபத்தரின் வேகத்திற்கு பட்டத்து யானையால் ஈடுகொடுக்க முடியவில்லை.

சிங்கம் போல் விரைந்து யானையின் முன் துணிவோடு நின்ற எறிபத்தரைப் பார்த்து திகைத்த யானை 
ஓரடி முன்வைக்க எத்தனித்த அக்கணத்தில் மழுவாயுதத்தை 
யானை மீது 
வலுவாக ஏறிந்தார்
எறிபத்தர்.

தும்பிக்கை வெட்டுண்டு வேறு திசையில் விழ...  கதறிய யானை 
அலறித் துடித்தபடி தரையில் சாய்ந்தது.
கடல் முழங்குவது போல் கதறியது.
கருமலை உருளுவது போல் உருண்டு 
முடிவில் 
மாய்ந்தே போனது.

எறிபத்தரின் கோபம் அப்போதும் தணியவில்லை.

சுற்றுமுற்றும் 
வெறியோடு பார்த்த எறிபத்தர் கண்களில்
அச்சத்தோடு ஒதுங்கிய குத்துக்கேற்காரர்களும்
பாகர்களும் பட்டனர்.

(எறிபத்த நாயனார் புராணம் -தொடரும்)
 



Leave a Comment