சிவலிங்க பூஜையின் மகிமைகள்


ஒரு காலத்தில் வியாசர் ஸநத் குமாரரை அடைந்து அவரது திருவடிகளை வணங்கிப் பணிந்து "சுவாமி, சிவபெருமானின் கிரியாயோகத்தையும் அதனால் வரும் பயனையும் வேதாந்யாசத்தையும் மானசீக பூஜையையும் பாஹ்ம பூஜையையும் இவ்வகையானது என்று திருவாய் மலர்ந்தருள வேண்டும். அன்றியும் பிரமசரிய மனத்தாலும் புண்ணியகரமானவாக்கு காயங்களாலும் கிரியாயோகத்தைப்  பெரியோர்கள் அனுஷ்டித்த முறைப்படி அனுஷ்டிப்பவன் எவ்வகைப் பயனை அடைந்து எப்படிச் சிவ பதமடைவான்? சிவ ரூபமாகிய லிங்கத்தை விதிப்படி அபிஷேகித்தவனும் அர்ச்சனை செய்தவனும் பெறும் பயன்யாது? மலர்களில் எவை சிவபூஜைக்குரியவை? எம்மலர்கள் சிவபூஜைக்கு உரியனவல்ல? கனிகளில் எவை சிவ பெருமானுக்கு நிவேதனம் செய்யத் தக்கவை? எவை தகாதவை வாத்தியங்களில் சிவ சன்னிதியில் வாசிக்கத் தக்கவை யாவை எவை நீக்கத்தக்கவை நெய், பால், முதலியவற்றால் அபிஷேகம் செய்தவன் அடையும் பயன் என்ன? சந்தனம் கஸ்தூரி முதலியவற்றால் சிவபிரானுக்கு யலேபனை செய்தவன் பெறும் பயன் யாது? மற்றைய சிவபணிவிடைகளின் பயன்கள் யாவன? இவற்றை அடியேனுக்குச் சொல்ல வேண்டும்?" என்று கேட்க ஸநத்குமாரர் சொல்லுகிறார்.

சத்தியவதி மைந்தனே! வியாச முனிவனே! நீ என்னைக் கேட்ட சிவபூஜா விஷயங்களையெல்லாம் தெளிவாகச் சொல்லுகிறேன், முழுமனதுடன் கேள். பரமாத்மாவாகிய பரம சிவனிடத்தில் சித்தத்தைச் செலுத்தி நிற்பதே ஞானயோகம். பரமசிவத்தின் பாஹ்யமாகிய அர்ச்சா ரூபத்தில் எப்பொழுதும் பூஜை முதலிய உபசாரங்களைச் செய்வதே கிரியாயோகம். இதுவே சிவபெருமானைத் தியானிப்பதற்கு முக்கிய சாதனம், இஷ்ட காமியங்களைக் கருதி, சிவாலய நிர்மாணம் முதலிய சிவ புண்ணியங்களைச் செய்தவர்கள் அடையும் பயன்களையும் சொல்லுகிறேன்.

சிவபெருமானுக்குக் கருங்கல்லாலோ அல்லது மரத்தாலோ அல்லது பொன் வெள்ளி முதலிய உலோகங்களாலோ அல்லது மண்ணாலோ திருக்கோயில் கட்டுவித்தவன் நாள்தோறும் சிவயோகத்தால் அந்தச் சர்வேஸ்வரனைப் பூஜித்தவன் அடையும் பயனை அடைந்து தன் குலத்தில் இறந்த பிதுர்க்களை நூறு தலைமுறை வரையிலும் என்றும் ஆனந்தமயமான சிவலோகத்தை அடையச் செய்வான். சிவாலயம் ஒன்றைப் பெரிதாகவோ அல்லது சிறிதாகவோ நிர்மாணஞ் செய்ய வேண்டும் என்று ஒருவன் தன் மனத்தால் நினைத்தவுடனே, தான் ஏழு ஜனங்களிற் செய்த பாவங்களிலிருந்தும் புனிதமடைவான். 

சர்வகர்த்தாவான சிவபெருமானுக்கு ஆலயம் கட்டுவித்து அதில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்வித்தவன் சகல லவுகீக போகங்களையும் அனுபவிப்பான். புண்ணிய ஸ்தலங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்வித்தவன் சகல லோகங்களிலும் சிறந்த முக்தியை அடைவான். கருங்கல்லால் சிவாலயம் செய்வித்தவன் அக்கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோராயிரம் ஆண்டுகள் சிவலோகத்தில் வசிப்பவன். சிவபெருமானது அர்ச்சா ரூபங்களாகிய லிங்க மூர்த்தத்தைச் செய்வித்தவன் ஒருகாலத்தும் அழிவில்லாத சிவலோகத்தை அடைந்து அறுபதினாயிரம் ஆண்டுகள் பலவித சுகங்களை அனுபவித்து, அப்படியே ஒவ்வொரு பதவியிலும் அறுபதினாயிரம் ஆண்டுகள் வசித்திருப்பான். புண்ணியகரமான சிவலிங்க பிரதிஷ்டை மட்டுமே செய்தால் இறந்த பின்னரும் இறவாதவனாகவே இருந்து, தன் வம்சத்தில் இறந்தவர்களையும் இனி பிறப்பவர்களையும் கற்பாந்தகாலம் வரையில் புனிதர்களாகச் செய்வான். சிவலிங்கப் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று மனத்தில் நினைத்தவன் தன் பிதுர்க்களை எட்டுத் தலைமுறை வரையிலும் தன்னோடு சிவசாயுஜ்யம் பெறச் செய்வான். சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவனைக் கண்டு, தானும் அவ்வாறு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தால் நற்கதியையடைலாம் என்று நினைத்தவன் அப்போதே பரமபுண்ணியனாகித் தான் முன்பு செய்த பாவங்களையெல்லாம் ஒழித்து முக்திக்கு அருகனாவான்.

முனிவர்களே! பூர்வத்தில் பிரமதேவன் இயமனுக்குப் பாசத்தையும் தண்டத்தையும் அதிகாரத்தையும் கிங்கரர்களோடு கொடுத்து "நீ உலகத்தில் சஞ்சரித்து தர்ம அதர்மங்களை விசாரணை செய்ய வேண்டும்" என்று கட்டளையிட்டு சொல்லத் துவங்கினார். 

"இயமனே! பிற தேவர்களைப் பணியாமல் தேவதேவனாகிய சிவபக்தனையே பரம்பொருள் என்று உணர்ந்து அப்பெருமானையே சரணாகதி என்று சொல்லிக் கொண்டிருக்கும் சிவ பக்தர்களையும் உலகத்தில் மஹேஸ்வரனை மனதில் தியானித்துக் கொண்டிருப்பவர்களையும் நித்திரையிலும் நடக்கையிலும் இருக்கையிலும் இரவும் பகலும் யாது செய்கையிலும் சிவத்யானம் அகலாது 'சிவ மஹா தேவா! சந்திரசேகரா! நீலகண்டா! சங்கரமஹேஸ்வரா! ஜகத்பதீ! சச்சிதானந்த ஸ்வரூபா! என்று சங்கராமஹேஸ்வரா!  ஜகத்பதீ! சச்சிதானந்த ஸ்வரூபா!' என்று பஜனை செய்பவர்களையும், சிவபெருமானை நித்திய நைமித்திக பூஜைகளால் மகிழச் செய்பவர்களையும் சிவபெருமானைப் புஷ்பம், தூபம், தீபம் முதலியவற்றால் ஆராதிப்பவர்களையும் சிவாலயத்தை ஜீர்னோதாரணம் செய்பவர்களையும்  சிவாலயத்தைக் காலையிலும் மாலையிலும் திருவலகிட்டுச் சுத்தஞ் செய்பவர்களையும்  அவர்கள் முன்னோரது மூன்று தலைமுறையினரையும் சிவாலயத்தைக் கட்டுவிப்போர்களையும், அவர்கள் வமிசத்தில் பிறக்கும் நூறு தலைமுறையினரையும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்வித்தவர்களையும் அவர்கள் வம்சத்தில் பிறக்கும் ஆயுத புருஷர்களையும் நீ நெருங்கக் கூடாது. அவர்கள் சிவகணங்களுக்குச் சமமானவர். அவர்களை நீ தண்டிக்க முடியாது" என்று பிரமதேவன் கூற, இயமன் அதற்கு இணங்கித் தனது சேவகர்களாகிய கிங்கரர்களுக்கு நாள்தோறும் இந்த விஷயங்களை ஞாபகப்படுத்திக்  கொண்டிருந்தான்.

சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து முறைப்படிப் பூஜை செய்தவன் தன் மனத்தில் விரும்பிய கோரிக்கைகளையெல்லாம் சந்தேகமில்லாமல் சிந்திக்கப் பெறுவான். தேவர்களால் அர்ச்சிப்பதற்கு உரிய அர்ச்சா ரூபமான சிவலிங்கத்தை தேன், பால், நெய், தயிர் முதலியவற்றால் அபிஷேகஞ் செய்தவன் ஆயிரம் பசுக்களை அருமையாளருக்குத் தானமளித்தவன் பெறும் பயன்களை வேதியருக்குப் பசு நெய்யைத் தானஞ் செய்தவன் பெறும் பயனைப் பெறுவான். ஆடகப் பிரமாணமான நெய்யினால் அபிஷேகித்தவன் தான் செய்த பாவங்களிலிருந்து விலகுவான், பூரணை அமாவாசைகளில் அர்ச்சாரூபமான சிவலிங்கத்தை பிரயத்தன பூர்வமாகப் பூஜித்தவன் சர்வபாபங்களிலிருந்தும் நீக்கப்படுவான். 

ஞானத்தாலாவது அஞ்ஞானத்தாலாவது ஒருவன் செய்த பாபங்கள் சிவபெருமானுக்குப் பிரதோஷங்காலத்தில் நெய்யபிஷேகம் செய்த அந்த க்ஷணமே அவனை விட்டு அகன்று போகும். தேவர்களால் சிறந்தவன் சிவபெருமான், அவ்யங்களில் சிறந்தது நெய். இந்தச் சர்வேஸ்வரகிருத சம்பந்தம் பாபங்களை வேரோடு அறுக்க வல்லது சிவபெருமானுக்குப் பசுவின் பாலால் சிறப்பாக அபிஷேகஞ் செய்தவன் இந்தவுலக்தை விட்டு நீங்கும் பொழுது, பாலே ஜலமாகப் பெருக்கெடுக்கும் நதியையும் பால் சம்பந்தமான சேற்றையுமுடைய வழியாகச் சிவலோகத்தை அடைந்து மகிழ்ச்சியும் சுகமும் ஸ்வஸ்தசித்தமும்  ரோகமின்மையும் நல்ல உருவமும் பெற்று வாழ்ந்திருப்பான். தயிர் முதலிய பொருள்கள் பாலிலிருந்து உண்டாவதுபோல பெரும் போகங்கள் எல்லாம் சிவார்ப்பணமாக அபிஷேகித்த பாலினாலேயே உண்டாகும் தேகப் புஷ்டியை உண்டு பண்ணும் பாலினால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தவன் திவ்யமான ஞானவிருத்தியை அடைவான். 

சிவபெருமான் பால் அபிஷேகத்தால் களிப்படைந்து அவ்வாறு அபிஷேகஞ் செய்தவனுக்கு நவக்கிரகங்களின்  அனுகூலமும் புஷ்டியும் யாவரிடத்திலும் கிருபையும் உண்டாகும். நெய்யும் பாலும் சிவபெருமானுக்கு அபிஷேகித்தவுடன்  சிவபெருமான் அருள் புரிவார் சிவபெருமானை எப்பொழுதும் நெய்யினாலும் பாலினாலும் அபிஷேகித்தவனுக்கு உலகில் யாவும் நன்மையாகவே அமையும் இதற்கு உதாரணமாக ஒரு பூர்வ சரிதத்தைச் சொல்லுகிறேன். பூர்வத்தில், பூஷ்ணன் என்பவனும் அவனது அதி ரூபலாவண்யமான சுமதி என்னும் யவுவனமுடைய மனைவியும் சுவர்க்கலோகத்தை அடைந்து அங்கு பலவிதமாகக் கூடி மகிழ்ந்து சுகம் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது கவுதமி என்பவள் அவர்களைக் கண்டு வியந்து, சுமதியைப் பார்த்து "சுமதி! இந்தச் சொர்க்கலோகத்தில் இந்திராதி தேவர்கள் எண்ணற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் கூட உனக்குள்ள காந்தியும் உன்னைப்போன்ற தேக மணமும் அதிக அழகும் அருவிலைப் பணிகளும் பட்டாடைகளும் இல்லை. இவை எல்லாவற்றையும் விட இந்திராதி தேவர்களையும் விட நீங்கள் மேம்பட்டிருக்கிறீர்கள்! உங்கள் மன ஒற்றுமையும் அவர்களுக்கு இல்லை இத்தகைய சிறப்புகளையெல்லாம் ஒருங்கேயடைந்த நீ உன் கணவனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாயே? இது உனக்குத் தவத்தால் கை கூடியதான பலத்தால் கிடைத்ததா? யாகாதி கிருத்தியங்களால் சம்பவித்ததா? அதை நீ எனக்கு முழுமையாகச் சொல்ல வேண்டும்" என்று கேட்டாள்.

அதற்கு சுமதி சொன்னாள். "என் கணவரின் மூதாதையர் யாவரும், குல பூர்வமாகச் சிவபெருமானை ஆராதித்து வந்து கடைசியில் என் கணவர் அந்த சாம்பவமூர்த்தியைக் குறித்து அநேகம் யாகங்களைச் செய்ய அந்த யாகத்தால் யாகபதியாகிய சங்கர பகவான் திருவுளங்களித்து, அனுக்கிரகஞ் செய்ததால், சுவர்க்க பிராப்தி உண்டாயிற்று. அந்த யாகத்தில் தீர்த்தோக ஸ்நானமும் கிருதஸ்நானமும் கணக்கின்றிச் செய்ததால் எங்கள் இருவருக்கும் திவ்யமான தேககாந்தியும் மனவொற்றுமையும் மிருது தன்மையும் சுகமும் யாவருக்கும் விருப்பமும் உண்டாயின. இவை யாவும் நெய்யினால் அபிஷேகம் செய்த பயனாகவே கிடைத்தன. அந்த யாகத்தில் மனோபீஷ்டமான விலையுயர்ந்த வஸ்திரங்களையும்  நவரத்தின பூஷணங்களையும் சந்தனம் முதலிய பரிமள வஸ்துக்களையும் அநேக விதமான மலர் மாலைகளையும் சிவார்ப்பணமாக்கினோம். 

ஆகையால் சிவார்ப்பணம் செய்தவை யாவும் இப்பொழுது எங்களுக்குக் கிடைத்துள்ளன. சிவபெருமானை நானாவித நைவேத்தியங்களால் திருப்தி செய்வித்தோம். ஆகவே நாங்கள் இங்கு எப்போதும் திருப்தியாகவே இருக்கிறோம். சுவர்க்க காமியாகிய என் கணவர் சிவார்ச்சனை செய்யும்போது, நானும் அவருடன் இருந்து அர்ச்சனை செய்ததால் எனக்கு அற்புதமான புஷ்டி உண்டாகியிருக்கிறது. மனோ வாக்கு காயங்களால் எந்தெந்த கோரிக்கையோடு ஒருவன் சிவபெருமானது அர்ச்சா ரூபமான லிங்கத்தைப் பூஜித்தால், அவன் அவ்வக் கோரிக்கையை விரும்பியவாறே அடைவான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை" என்று கவுதமியை நோக்கி சுமதி சொன்னாள். 

ஆகையால் ஒருவன் சிவபெருமானைப் பக்தி பூர்வமாக அர்ச்சனை செய்பவனாயின் அவன் தேவர்களுக்கும் துர்லபமான போக போக்கியங்களை அனுபவிப்பான். சந்தனம், குங்குமப்பூ, அகரு கர்ப்பூரம் முதலிய சுகந்தத் திரவியங்களால் சிவலிங்கத்தை உபலேபனம் (பூசுதம்) செய்தவன், அப்போதே சுபகரமான வரங்களைப் பெறுவான். சிவபெருமானுக்குக் கருஞ்சந்தனமும் கருந்தூபமும் விநியோகித்தவன் யோகியாவான் நல்ல சுகந்தமுடைய வேத உக்தமான சாம்பிராணி முதலியவற்றை நெய் கூட்டித் தூபங் கொடுத்தவன் துஷ்டி புஷ்டிகள் உண்டாக்கப் பெறுவான். மனத்திற்கு ரம்மியமில்லாத மலர்மாலைகளைச் சிவபெருமானுக்குச் சாற்றக்கூடாது. மனோஹரமான மலர்களால் தொடுத்த மாலைகளையே தேவதேவனுக்குச் சாற்றலாம். சிவபெருமானுக்கு விருப்பத்தைத் தரத்தக்கமலர்கள் மிருதுவானதாகவும் மனமுடையதாகவும் இருக்க வேண்டும். தாமரை மலரும் உலர்ந்திருப்பினும் வில்வபத்திரமும் நீலோத்பலமும் ஜாதி புஷ்பமும் மல்லிகையும், பாடலமும், கரவீரமும், ஆத்தியும் கொன்றையும் கோங்கும் சதபத்திரமும், துளசியும், அகத்திப்பூவும் முல்லையும் இருவாட்சியும் பலாசமும் உகந்தவை, இவ்வகை மலர்களிலேயே சிவபெருமானைப் பூஜிக்க வேண்டும். இவையேயன்றி மனத்துக்கும் பார்வைக்கும் ரம்மியமான மலர்கள் சிவராதனைக்குத் தக்கவையாகும். சிவந்த மலர்களும் கறுத்த மலர்களும் சிவலிங்கரூபத்தில் பூஷணார்த்தமாகச் சமர்ப்பிக்க வேண்டும், சிவபெருமானைச் சிவந்த மலர்களால் தினந்தோறும் பூஜிப்பவன் சித்தர். வித்தியாதரர் அப்சரஸ் கணங்கள் முதலானவருடன் பலகாலம் வாழ்ந்து மகிழ்ந்திருப்பான். முள்ளையுடையதும்  உக்கிரகந்தமுடையதுமான ஊமத்தை மலர்களால் சிவ லிங்கத்தைப் பூஜித்தவன். சிவ கணங்களுக்குப் ப்ரீதிவானவான் மலர்கள் கிடைக்காவிட்டால் அறுகம்புல், ப்ருங்க ராஜபத்திரம் (கரிசலாங்கண்ணி)  சமீபத்திரம், தமாலம், முதலியவற்றால் பூஜிக்கலாம். இவ்வாறு தினமும் இலிங்கமூர்த்தத்தில் பூஜிப்பவன். அப்சரஸ்கணங்களில் பூஜிக்கப்பட்டு சிவலோக வாசியாவான். அவனுக்கு ஒரு காலத்தில் உலகத்திலே பிறவியுண்டாயினும் பேரரசனாய் பெருஞ்செல்வத்துடன் ஏக சக்கராதிபதியாய் கிரமமாக முக்தியடைவான். 

தாழை மலர்களால் சிவபெருமானை அர்ச்சிக்கக் கூடாது. மருதோன்றி மலர்களால் பூஜித்தவன் மிலேச்சனாவான். சுகந்தமான மலர்களாலும் சுகந்த கர்ப்பூர சந்தனங்களாலும் பரிசுத்தமான ஜலத்தினாலும் சர்வேஸ்வரனாகிய சிவபெருமானை அபிஷேகம் செய்து பட்டினாலாவது பருத்தியினாலாவது நெய்யப்பட்ட ஆடை தரித்து மனோகரமான ருசியுள்ள விரும்பத்தக்க பக்ஷியங்களையும்  சிறந்தவையான பலவகைப் பழங்களையும் சுவர்ண பாத்திரத்தில் வைத்து நிவேதனம் செய்து, சுவர்ணம், நவரத்தினம் முதலியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். பிறகு மகாயோகியும் சதாசாரசம்பன்னுமான பிராமணனைச் சிவபெருமானாகவே பாவித்து ஸர்வாய வ்யக்த ரூபாய நாமநாதஸ்மை என்று சொல்லிக் கொண்டே சிவார்ப்பணம் செய்த பொருள்களில் சிலவற்றை அவ்வேதியனுக்குக் கொடுக்க வேண்டும். சங்கிராந்தி, லிஷுவத் புண்ணியகாலம், வ்யதிபாதம் தக்ஷிணயன, உத்தராயணங்கள், கிரஹணகாலம், பூரணை, அமாவாசை, சதுர்த்தசி அஷ்டமி முதலிய புண்ணிய காலங்களில் செய்யப்படும் பூஜை நைமித்திக பூஜை ஆகவே அந்தக் காலங்களில் சிவார்ச்சனை செய்தவர்கள் நித்திய பூஜை செய்வோரை விட ஆயிரம் பங்கு அதிகப்பயனை அடைவார்கள். இது சிவபெருமானாலேயே கூறப்பட்டது இவற்றை உள்ளது உள்ளபடி உமக்குச் சொன்னேன் என்று சநத்குமார முனிவர் வியாச மகரிஷிக்குச் சொன்னார். இவ்வாறு புராணிகர் நைமிசாரணிய வாசிகளுக்குக் கூறினார்.
 



Leave a Comment