சிவமே மூச்சாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள் - ( அப்பூதியடிகள் )
அப்பூதி அடிகளார் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர் . அன்றைய சோழ நாட்டை சேர்ந்த திங்களூரில் வாழ்ந்த சிறந்த சிவபக்தர் . நாயன்மார்களில் முதன்மையானவரான திருநாவுக்கரசரை நேரில் பார்க்காமலேயே ,அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் பெரும் மதிப்பும் , மரியாதையும் கொண்டு இருந்தார். தன்னுடைய புதல்வர்களுக்கு மட்டுமல்லாமல் தான் ஆசையாக வளர்த்த பசு, எருமை, கன்றுகள், முதற்கொண்டு தன் வீட்டில் உபயோகப்படுத்தப்பட்ட தராசு, அளக்கும் கருவிகளான மரக்கால், படிகள் ஆகிய எல்லாவற்றிற்கும் நாவரசர் பெயரைச் சூட்டும் அளவிற்கு அவர் மேல் பக்தி கொண்டிருந்தார் .
இது மட்டுமின்றி திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினை அறிந்த அப்பூதியடிகள் திருநாவுக்கரசரின் பெயரால் மக்களுக்கு அன்னம்தானம் செய்தல் , சத்திரம் அமைத்துக் கொடுத்தல் , நீர் பந்தல் அமைத்தல் என செய்து வந்தார் . திங்களூருக்கு வந்த திருநாவுக்கரர் அப்பூதியடிகளின் இந்த நற் தொண்டினை அறிந்து அவரைக் காண அவரின் இல்லத்திற்கு சென்றார்.
அப்பூதியடிகளை நேரில் சந்தித்த திருநாவுக்கரசர், நீங்கள் அரும்பாடுபட்டு செய்யும் தர்ம காரியங்களுக்கு , ஏன் உங்கள் பெயர் வைக்காமல் , யாரோ ஒரு திருநாவுக்கரசரின் பெயரை வைத்திருக்கிறீர்கள் என்று வினவினார். அதற்கு அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் சமண சமயத்தில் பெரும் துறவியாய் இருந்த போதிலும் , சிவனருளால் சைவ மதமேற்று தொண்டுகள் புரிந்து வருவதை எடுத்துரைத்தார். மேலும் சிவனடியவருக்கு செய்யும் தொண்டு , அந்த சிவனுக்கே செய்வது போன்றது என்று எடுத்துரைத்தார். அப்பூதியடிகளின் களங்கமற்ற அன்பை புரிந்துக் கொண்டதும் தானே திருநாவுக்கரசர் என்று தன்னை வெளிப்படுத்தினார் நாவுக்கரசர். இத்தனை காலம் தான் மனதிற்குள் வைத்து பூஜித்த திருநாவுக்கரசரே தன்னுடைய இல்லம் வந்திருப்பதை அறிந்து மகிழ்ந்த அப்பூதி அடிகள் அவரை உணவு உண்ண அழைத்தார்.
நாவுக்கரசருக்கு உணவு படைக்க வாழை இலையை அறுக்கச் சென்ற அப்பூதி அடிகளின் மகன் பாம்பு தீண்டப்பட்டு இறக்க நேரிடுகிறது . அந்த துயர நேரத்திலும் , மகன் இறந்து போனதால், திருநாவுக்கரசரை உணவு உண்ண தடை ஏற்படக்கூடாது என அப்பூதி அடிகளும், அவரது மனைவியும் துயரத்தினை மறைத்து உணவு இட்டனர். ஆனால் திருநாவுக்கரர் தன்னுடன் அப்பூதியடிகளின் மகனையும் உணவருந்த அழைக்க , அப்பூதி அடிகள் தன்னுடைய மகன் பாம்பு தீண்டி இறந்ததை தெரிவித்தார். இதுவும் இறைவனின் திருவிளையாடல் என புரிந்துக்கொண்ட நாவுக்கரசர் இறைவன் மேல் பாடல்பாடி அப்பூதி அடிகளின் மகனை உயிர்ப்பித்தார்.
இனி சிவாலயங்களுக்கு நாம் செல்லும் பொது , எம்பெருமான் சிவனை நெஞ்சார நிறுத்தி மனமுருக வாயாராப் பாடிய அறுபத்து மூன்று நாயன்மார்களை மனதார போற்றுவோம் .
Leave a Comment