மெய்ப்பொருள் நாயனார் புராணம் (பாகம்-1)
- "மாரி மைந்தன்" சிவராமன்
பண்டைய
சேதி நாட்டில் திருக்கோவலூரைத் தலைநகராகக்கொண்டு நீதி தவறாமல்
நாடாண்டு வந்தார் மலையான் குல மன்னர் மலாடர்.
அவரது மரபில்
வாராது வந்த
மாமணியாய்
உதித்தவர் தான் மெய்ப்பொருள் நாயனார்.
சிவபக்தி மிகுந்த
குறுநில மன்னர்.
சைவமும் பக்தியுமே அவரது அருள்நிறை
இரு கண்கள்.
அற நெறி தவறாதவர்.
சிறு எறும்புக்கும் தீங்கிழைக்காதவர்.
ஆயினும் பகைவன்
என்று வந்துவிட்டால்
தன் நாட்டைக் காக்க
போர் தொடுக்கத் தயங்காதவர்.
அப்படி பல
போர் கண்டவர்.
தோல்வியே காணாதவர் என புகழ் கொண்டவர்.
வீரமும் தீரமும்
அவரில் ஒரு பாதி.
மறுபாதி
அன்பும் அமைதியும்.
ஆகமங்களைக்
கசடறக் கற்றவர்.
எப்போதும் ஐந்தெழுத்தை ஓதும் பெருந்தகை.
விரிசடை உடையராய் உருத்ராட்சம் அணிந்தவராய்
புனித நீறு பூசியவராய் விளங்கும் சிவபெருமானும்
சிவனடியார்களும்
ஒன்று எனக் கருதி அவர்களே
மெய்ப்பொருள் எனப் போற்றி வணங்கி
வேண்டுவன தந்து
சிவசேவை
செய்து வந்தார்
சிவநேசர் மெய்ப்பொருளார்.
அதனால்
சேதி நாட்டில்
அரசனை ஒத்த செல்வாக்கு
அடியார்க்கு இருந்தது.
சிவனடியார்களை
இறையை ஒத்தவராகவே மக்களும் போற்றினர்.
மெய்ஞான மன்னரை மக்கள்
மெய்யான கண்கண்ட தெய்வமெனத் தொழுதனர்.
உண்மையான
நிலைத்த
மெய்ப் பொருளாய் உண்மைப் பொருளாய் சிவனையும் சிவனடியார்களையும் போற்றி வந்ததாலேயே கால ஓட்டத்தில்
மன்னரின்
இயற்பெயர் மறைந்து இன்றுவரை மெய்ப்பொருள் நாயனார் என்று வணங்கப்படுகிறார்.
மெய்ப்பொருளை
அறிந்து கொண்டதால்
எஞ்சிய உலகனைத்தும் பயனற்ற
பொய்ப் பொருள்
என்றுணர்ந்து
எப்போதும்
சிவ சிந்தனையிலேயே
நல்லாட்சி புரிந்து வந்தார்.
அவர் ஆட்சி
இறையாட்சி என்பதாலே
நாள்தோறும்
சிவன்
ஆலயங்கள் தோறும்
ஐந்து வேளை பூஜை சீரான சிறப்பு வழிபாடு
ஆடல் பாடலோடு
சிவ வழிபாடு
உரிய காலத்தில் பண்டிகை விழா என
சேதிநாடும்
சிவமயமாகவே
சிறந்தோங்கியது.
ஒருவர் நல்லவர்
என்றால்
அல்லவர் கண்பட்டு பொறாமைத் தீ
பெரும் தீயாய்
பேயாட்டம் ஆடுமே ?
ஆடியது.
பக்கத்து நாட்டில்
ஒரு பேராசை கொண்ட பொறாமையாளன் ஆட்சிபுரிந்தான்.
அவன் பெயர்
முத்தநாதன்.
மண்ணாசை கொண்ட முத்தநாதன்
பலமுறை
யானைப்படை குதிரைப்படை
தேர்ப்படை
காலாட்படை என
நாற்படை சகிதம்
ஒரு பெரும் படையோடு
சிவனாட்சி நடந்துகொண்டிருந்த
சேதி நாட்டின் மீது
போர் தொடுத்தான்.
புரமெரித்த அரனார் திருவருளால்
அத்தனை போரிலும் அவன் புறமுதுகிட்டுத் தோற்றோடினான்.
அடைந்த தோல்வி
பெற்ற அவமானம் அவனை
முழு மூர்க்கன் ஆக்கியது.
நல்லாட்சி புரிந்த மெய்ப்பொருளாரோ
போர் வெற்றிகளை லட்சியம் செய்யாது
பாராளும் பரமசிவத்தை எந்நாளும்
சிந்தித்தவாறே
ஆட்சி தொடர்ந்தார்.
மூளை சிறுத்து
கறுத்த மனத்தவனான
முத்தநாதனுக்கு
நிலத்தாசை முற்றிப்போய் போரில் நேரில் போனால் தோற்பது உறுதி என்பதால்
வெவ்வேறு யுக்தியில் புத்தியைத் திணித்தான்.
'வஞ்சகத்தால்
வென்றால் என்ன ?'
தோல்வி அவமானம்
பேராசை ஆத்திரம் அவனை
வஞ்சகத்திற்கான
சூத்திரத்தை
யோசிக்க வைத்தது.
திட்டமிட்டுத் தீட்டினான்.
மெய்ப்பொருளாளர் மெய்ப்பொருளென கருதும்
சிவனடியார்களை போற்றும் விதத்தை
பிற நாட்டார் புகழ ஏற்கனவே தெரிந்திருந்தான்.
எத்தடையும் இல்லாது எந்நேரமும்
திருக்கோவலூர் அரண்மனை
சிவனடியார்களுக்காக திறந்திருக்கும் என்பதையும்
அறிந்து கொண்டான்.
மெய்ப்பொருளார்
அடியார்களைத் தரிசிப்பதில்
காலம் நேரம் பார்ப்பதில்லை....
போன்ற செய்திகள்
தேனாய்ப் பாய்ந்தது
தேள் மனத்தான் செவிகளில்.
வஞ்சகன்
வஞ்சக வலை
விரிக்கத் தயாரானான்.
முதலில்
முத்தநாதன்
முத்தி நாதன் ஆனான்.
ஆம்... முத்திப்பேறு அடையும் சிவனடியார் வேடம் தரித்தான்.
மெய்யான சிவனடியார்களே
தோற்கும் வண்ணம்
பொய்த் தோற்றம்
புனைந்து
தவயோகி போல்
உடல் முழுக்க திருநீறு பூசி,
கனத்த உருத்திராட்ச மாலைகள் கழுத்தில் சூடி,
கையில் ஒரு
பெரிய புத்தகம்,
மானம் மறைக்கும்
காவி உடை சகிதம்
அந்த பாவி உருமாறினான்.
அவ்வுருவில்
சிவன் ஆளும்
சேதிநாடு அடைந்து
நாயனாரை நெருங்கி சமயம் பார்த்து
தீர்த்துக் கட்ட முடிவெடுத்தான்.
கள்வர்களுக்கும் வஞ்சகர்களுக்கும் உரித்தான
இரவு நேரத்தில்
சேதிநாடு வந்தடைந்தான்.
அந்நேரத்திலும் எதிர்கொண்ட
நன்மக்கள் அவனை வணங்கி
ஒதுங்கி நின்று
மரியாதை செலுத்தி வரவேற்றது
தனது
போலி வேடத்திற்கு கிடைத்த நற்சான்றிதழ்
என பெருமிதம் கொண்டான்.
இடையில்
எந்தவித தடையும் இன்றி கோவலூர் அரண்மனையை அடைந்தான்.
அரண்மனை வாசலில் காவலுக்கு இருந்த கம்பீரமான காவலர்கள்
போலிச் சிவனடியாரான முத்தநாதனை
எதுவும் கேட்காது
எதுவும் மறுக்காது வணங்கி வழிவிட்டனர்.
இப்படியே வந்துவிட்டான்
போலி வேடதாரி அரசன் பள்ளியறைக்கு அருகே,
நல்ல வேளை.
அன்று
பள்ளியறைக்கு
காவலில் இருந்த
வாயிற்காப்போன்
அதி புத்திசாலி.
அவன் பெயர் தத்தன்.
"ஐயன்மீர்...!
தங்கள் வரவு நல்வரவாகுக!
இது எம் வேந்தர்
உறங்கும் நேரம்.
அரசியாரும்
உடன் உள்ளார்.
எனவே இது
தக்க சமயம் அன்று.
இதோ இந்த
விருந்தினர் மாளிகையில் அறுசுவை உணவு அருந்தி ஓய்வெடுங்கள்.
நாளை காலையில்
அரசருக்குத் தரிசனம் தாருங்கள் "
நாசுக்காகத்
தடை போட்டான்.
அதைக் கூட.
வேண்டுகோளாகவே
வைத்தான் தத்தன்.
கொலை வெறியோடு வந்திருந்த முத்தநாதன்
கண்கள் சிவக்க கையிலிருந்த
நூலைத்
தத்தனிடம் காட்டி
சினந்தான்.
"நான் ஒன்றும்
சும்மா வரவில்லை.
இறைவன் படைத்த இரகசியமான சாத்திரம் ஒன்றைப் போதிக்கவே வந்துள்ளேன்.
இது மண்ணில்
யாரிடமும் இல்லாத சிவாகம நூல்.
என் போன்றோருக்கு நேரம் காலம் இல்லை.
உரிய நேரம் நாம் அறிவோம் "
என்றவாறு
கோபத்தோடு
உற்று நோக்க
தத்தன் சற்று தள்ளி நின்று வழி விட்டான்
சிறிதும் விருப்பம் இன்றி.
பாவம்
அவன் ஓர்
இருதலைக் கொள்ளி.
தத்தநாதனை
உள்ளே விட்டால்
வேந்தன் உறக்கம் கெடும் என அவனது
மனமே சூடும்.
விடாவிட்டால்
தத்தன் குடும்பம் கெடும்
சிவயோகியின் சாபத்தால்.
பள்ளியறைக்குள்ளேயே சென்றுவிட்டான்
தவ வேடம் பூண்ட
பாதகன்
அவ வேடதாரி.
சிவநேச மன்னர் நித்திரையில் ஆழ்ந்திருந்தார்.
கனவிலும்
சிவ சிந்தனையே
நிறைந்திருந்தது.
அடிக்கடி தூக்கத்திலும்
'சிவசிவா' என முணுமுணுத்தார்.
தலைநிறைய
பூச்சூடி
திருமகள் போலிருந்த பட்டத்தரசி
அரசன் படுக்கை அருகில்
திண்டில் சாய்ந்திருந்தாள்.
சிவனடியார் போல்
யாரோ வருவதை
நிழல் காட்ட
நித்திரையில் இருந்த மன்னரை
கூந்தல் மலரொன்றை எடுத்து லேசாகத் தட்டி எழுப்பினாள்
கண் துஞ்சாக் காரிகை.
திடுக்கிட்டு எழுந்தவர் கண்களில்
திருவிளையாடல்
நாயகர் போல்
வஞ்சகன் முத்தநாதன் காட்சியளித்தான்.
கனவில் கண்ட சிவபெருமானே அவ்விரவில் வந்ததாக மெய்ப்பொருளார் மெய்சிலிர்த்தார்.
இப்போது
முத்தநாதனுக்கு இருந்த ஒரே இடைஞ்சல்
இடையில் இருந்த
இளைய பட்டத்தரசியே.
"மன்னர் பிரானே!
என்னிடம் ஒரு
சிவாகம நூல் உள்ளது.
அது
'உங்கள் நாயகன்'
முன்னம் உரைத்தது.
அது
நீவீர் மட்டும் கேட்டு உணரத்தக்கது.
எனவே.... "
"சொல்லுங்கள்
சிவனடியே.
அடுத்து இந்த
சிவனடிமை
என்ன செய்ய வேண்டும் ?"
"நீர் தனித்திருக்க வேண்டும்.
பூச்சூடி அருகிருக்கும் அரசியார்
நம்மைத் தனித்து விட்டு
வேறிடம் செல்ல வேண்டும்."
'அவ்வளவுதானே ?'
என்கிற மாதிரி மெய்ப்பொருள் நாயனார் அரசியைப் பார்க்க பொருள் உணர்ந்த
மாதரசி -
இன்னும்
சில நொடிகளில்
பூ விழக்கப்போகும்
பூவரசி -
மன்னவரின் கண்ணசைவுக்கு ஏற்ப அந்தப்புரம் சென்றாள்.
எதற்கு சிவனடியார்
'நம் நாயகர்' என்று சொல்லாமல்
'உம் நாயகர்' என்று
எகத்தாளமாய்ச் சொன்னார் என்று யோசித்தபடியே அவள் அந்தப்புரத்தில்
உறங்கிப் போனாள்.
"இனி அரசனைக்
கொள்வது எளிது.
இதுவே தருணம்"
முத்தநாதனின்
வஞ்சக மனது கூச்சலிட்டது.
பொய் வேடதாரி முத்தநாதனின்
வஞ்சகத் திட்டத்தை
அறியாத அரசர்
மெய்ப்பொருளார்
அவரை
ஓர் ஆசனத்தில்
அமர வைத்து
அருகில்
தரை அமர்ந்து
தாழ் பணிந்து
தலைவணங்கி
உபதேசம் கேட்கத் தயாரானார்.
மடியில் வைத்திருந்த மறை நூலில்
மறைத்து வைத்திருந்த சிறு குறுவாளை எடுத்து கண்மூடித்
தலைவணங்கி
செவி திறந்து
கேட்கத் தயாராக இருந்த மெய்ப்பொருள் நாயனாரை
கூர்நிறை
கொடுவாளால்
உயிர் போகும் வண்ணம் போட்டான் ஒரு போடு
நடுமுதுகில் நயவஞ்சகன்.
இரத்த வெள்ளத்தில்
வீழ்ந்த
மெய்ப்பொருள் நாயனார்
அப்போதும்
'சிவ.. சிவ'என்றபடி
'சிவ வேடமே மெய்ப்பொருள்'
என முணுமுணுத்தபடி
இருந்தார்.
வெளியே
தத்தனின் மனம்
வேடதாரியின்
நடவடிக்கையில்
ஐயம் கொண்டு
தத்தளித்துக்
கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் பள்ளியறையில் வினோதமான சத்தம் கேட்பது போல் தோன்றவே
திடுமென
பள்ளி அறைக்குள் நுழைந்தான்.
அங்கே....?
இரத்த வெள்ளத்தில்
தத்தளித்தபடி
தத்தனின்
மனம் கவர் மன்னன்.
அருகில்
'நான் தான் கொன்றேன்' என இறுமாப்புடன் நின்றிருந்த அரசனின் உயிர் கவர்ந்த வஞ்சகன்.
நிலைமை உணர்ந்த அக்கணமே
தனது கூர்வாளினை எடுத்தான்
கூர்த்த மதி தத்தன்.
(மெய்ப்பொருள் நாயனார் புராணம்- தொடரும்)
Leave a Comment