இளையான்குடி  மாற நாயனார் புராணம் - பாகம் 2


- "மாரி மைந்தன்" சிவராமன்

கண்ணீர் மல்க கணவனை அழைத்த புனிதவதி 
மெதுவாய்ச் சொன்னாள்.

"பிராண நாதா...
நாம் இருவரும் 
ஒன்றை மறந்து விட்டோம்.

"அடுப்பு எரிக்க 
விறகு வேண்டாமா?

வீட்டிலும் விறகில்லை.
வெளியில் தேடினாலும் ஈரம் பட்டு
நமத்துப் போய் இருக்கும்"
கண்ணீர் சொரிந்தாள்.

கவலை மிகுந்து
என்ன செய்வது 
என புரியாமல்
தலையைச் சொறிந்தபடி
வீட்டை நோட்டமிட்ட
மாற நாயனாரின் 
கண்களில் பட்டது மேற்கூரை விட்டம்.

வறுமையின் 
கோரத் தாண்டவத்தில்
சிதிலமடைந்து
கவனிப்பாரின்றிக் கிடந்த
வீட்டின் ஒருபுற மேற்கூரையில்
மரப்பட்டைகள் ஆங்காங்கே 
காய்ந்து தொங்கிக் கொண்டிருந்தன.

சட்டெனத் தாவி அவற்றைப் பிடுங்கி மனைவியிடம் தந்தார் மாற நாயனார்.

"போதுமா தாயே"

"இப்போதைக்குப் போதும்" 
மனம் நெகிழ்ந்தாள் மனையாள்.

இனி 
புனிதவதிக்குத் தானே புனிதமான வேலை ?

நெல்மணிகளை அப்பியிருந்த 
சேற்றை நீக்கி,
தண்ணீர் விட்டு அலசி,
அழுக்கு நீக்கி,
அடுப்பில் இருக்கும் சட்டியில் லேசாக வறுத்து,
போதுமான பதத்தில் அவற்றை உரலில் இட்டு,
எழும் ஓசை 
சுவாமிகளின் செவிகளைத் தொடாதவாறு
மெல்ல இடித்து,
 உமி, அரிசி 
என வேறாகப் பிரித்து
அரிசியை மட்டும் 
தனித்து எடுத்து 
சோறு ஆக்கினாள்.

கீரையையும் காய்களையையும்
கறியாகச் 
சமைத்து முடித்தாள்.

சமையல் வேலை முடிவுற்றதும்
புனிதவதி 
முகமலர்ந்து 
கணவனைப் பார்த்து
தலையசைத்தாள்.

அதற்காகவே காத்திருந்த மாற நாயனார்
சுவாமிகளின் அருகில் சென்று மெலிதாக அழைத்தார்.

"சுவாமி...
 எழுந்தருள்வீர்!
அமுது தயார்!!"

அதற்காகவே காத்திருந்தவர் போல் எழுந்தார் 
ஏழு உலகமும் போற்றும்
கருணாமூர்த்தி.

எழ முயன்ற
அதே கணத்தில் 
கோடி சூரிய ஒளியாய் பிரகாசித்து 
ஜோதி சொரூபமாய் 
காட்சி அளித்தார் சிவனடியார் உருவில் வந்த சிவபெருமான்.

இளையான்குடி 
மாற நாயனாரும்
ஈடில்லா மனைவி புனிதவதியும் அதிர்ச்சியில் செய்வதறியாது 
திகைத்து நின்றனர்.

அனிச்சையாய் 
அவர்கள் கரங்கள் கைகூப்பின.
சிரங்கள் 
தாழ் பணிந்தன.

காட்சி தந்த கடவுளரின் காணக்கிடைக்காத
முடி பார்த்து 
முகம் தரிசித்து அடிபணிந்து 
காலடி விழுந்து 
அவரின் அடியையும் தொழுது வழங்கினர்.

சிவனது 
அடியையும் முடியையும் பார்க்கும் பேறு திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் கிடைக்காத 
பெரும்பேறு அன்றோ ?

அப்பேறு
அடியார்க்கு அடியாராய் சிவ சேவை புரிந்த மாறனார் தம்பதியினருக்கு
இறையே 
நேரில் வந்து தந்தது 
பெரும்பேறு அன்றோ !

உலகாளும் 
உமையவர் 
உரத்த குரலில் 
சொன்னார்.

"புண்ணிய சீலரே! புனிதவதியே! 
நீவிர் இருவரும் 
உரிய காலத்தில் 
சிவபுரம் 
வந்தடைவீர்கள்.

சிவபுரியில் 
சிவகணங்கள் ஆகி 
சிவபணி தொடர்வீர்கள்.

அங்கே 
உங்களுக்காக 
என் நண்பன் 
குபேரன் 
காத்திருப்பான்.
வரவேற்பான்.

சங்கநிதி, பதுமநிதி இரண்டையும் 
இரு கரங்களில் 
ஏந்திக் கொண்டு
உங்கள்
ஏவலுக்கு
பணி செய்வான்."

புன்னகைத்தபடியே மறைந்தார் 
மழை நேரத்தில் வந்த
மறை நாயகன்.

அப்போது 
ஒரு பெரும் 
தொடர் மின்னல்
வெளிச்சத்தைப் பீச்சியடித்தது.

அம்மாதிரியான 
பெரும் மின்னல் குடிசைக்கு ஆபத்தை விளைவிக்கும்
என அறிந்திருந்த இருவரும் வீட்டைவிட்டு
வெட்டவெளிக்கு ஓடிவந்தனர்.

மின்னல் தொடர்ந்தது.
"திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்" என்றபடியே 
கணவனும் மனைவியும்
ஒருவருக்கொருவர் ஆதரவாய் 
கரங்கள் பிடித்தபடி 
சில நொடிகளுக்கு 
முன் பெற்ற 
பேரருள் தரிசனத்தையும் மறந்து நடுங்கியபடி
நின்றிருந்தனர்.

அப்போது
திடுமென தோன்றிய மின்னலின் ஊடே
வானில் தோன்றி
சிவனும் பார்வதியும் தம்பதி சமேததராய்
ரிஷப வாகனத்தில் 
அருட்காட்சி அளித்தனர்.

அக்காட்சியைக் கண்குளிரக் கண்ட 
மாறனார் தம்பதியினர்
கண்ணீர் மல்க
உரத்த குரலில் 'திருச்சிற்றம்பலம்...
திருச்சிற்றம்பலம்'
என்று இறைதொழுதனர்.

காணக் கண்கோடி வேண்டுமே என 
மாற நாயனார்
மகிழ்ந்திருந்த நேரத்தில்
ஆசீர்வதித்த படியே
விண்ணில் மறைந்தனர் இறைவனும் இறைவியும்.

அதன் பின்னர் 
சில காலம்
மாறநாயனார் -
புனிதவதி தம்பதியினர்
இளையான்குடியே 
வியந்து 
தொழும் வண்ணம்
சிவனடியார்க்கு பணிசெய்து விட்டு
இறையடி சேர்ந்தனர்.

'உலகில் 
மனிதராகப் பிறந்ததன் பிறவிப் பயன் 
அடியார்க்கு 
அமுது படைத்தலே' என்கிறார் 
திருஞான சம்பந்தர்.

இதையே 
பின்னாளில்,
நடைமுறை 
உலகிற்கு ஏற்ப தடையின்றி 'பசித்தவருக்கு
அன்னதானம் செய்க' என்று ஆணையிட்டு
'அணையா அடுப்பு' அமைத்தார்
அருட்பெரும் ஜோதி கண்ட
வள்ளல் பெருமான்.

மகேஸ்வர பூசை செய்பவர்களை 'மகேஸ்வரர்' என்று 
அழைக்கிறது ஆன்மிகம்.

இளையான்குடி 
மாற நாயனார் புராணம் நமக்கு
சொல்லியுள்ள 
சிவ ரகசியம்  
என்ன தெரியுமா ?

'வறுமையிலும் 
சிறுமையின்றி முடிந்தவரை பசியாற்றுங்கள்'
என்பதே.

'இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்' என இளையான்குடி 
மாற நாயனாரின் 
கீர்த்தியை
உலகுக்கு உரைக்கின்றார் சுந்தரமூர்த்தி நாயனார்.

திருச்சிற்றம்பலம்.


(இளையான்குடி மாற நாயனார் புராணம் - நிறைவுற்றது.)
 



Leave a Comment