அச்சத்தைத் தவிர்த்து வெற்றியை அருளும் வீரலட்சுமி


மனத்திற்கு தைரியத்தை தருபவள் வீரலட்சுமி என்ற தைரியலட்சுமி. வாழ்வின் இன்பம், துன்பம் ஆகியவற்றை சமமாக பாவிக்கும் நிலையை அருளும் சக்தி இவள். தெளிவான, அத்தியாவசியமான முடிவெடுக்க, அதற்கான முயற்சி மேற்கொள்ள மனதுக்கு உறுதியளித்து அச்சத்தைத் தவிர்த்து வெற்றியை அருள்பவள் இவள். எட்டுத் திருக்கரங்களைக் கொண்டவள்.

வலது திருக்கரங்களில் அபயம், சூலம், அம்பு, சக்கரம் முதலியவற்றையும், இடது திருக்கரங்களில் வரதம், கபாலம், வில், சங்கம் முதலியவற்றையும் கொண்டு விளங்குபவள். தாமரைப் பூவின் மீது வீற்றிருப்பாள். உருக்கிய பொன் போன்ற நிறத்தினை உடையவள், உயர் கிரீடத்தை உடையவள். தங்கநிற ரவிக்கை அணிந்தவள். எல்லாருக்கும் உறுதியான மனோதிடத்தை அருள்பவள்.

‘பிருகு முனிவரின் மகளே, மந்திர ரூபிணியே, மந்திரமயமானவளே, தேவர் கூட்டம் வழிபடும் அருட்சக்தியே, ஞான மலர்ச்சியுடையவளே, சாத்திரங்கள் போற்றும் புனித மகளே, இவ்வுலகில் ஏற்படும் பயங்களை நீக்குபவளே, பாவத்தைப் போக்குபவளே, மதுசூதனின் மனைவியே, நின்னருளால் எனது எல்லாப் பயமும் போகட்டும். தைரிய லட்சுமியே, எனக்கு எப்பொழுதும் தைரியம் அளித்துக் காப்பாற்ற வேண்டும்,’ என்று பக்தியுடன் கூறி வந்தால் மனஉறுதியையும், துணிச்சலையும், வீரத்தையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், ஸ்ரீ வீரலட்சுமி அளிப்பாள்.

வித்யாலட்சுமி

வித்யை என்பதற்குக் கல்வி என்று பொருள். கல்விச் செல்வத்தை வழங்குவதனால் இவளுக்கு வித்யாலட்சுமி என்று பெயர். கலைமகள் மற்றும் அலைமகள் சேர்ந்த வடிவம் இவள். கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றை அருள்பவள். ஸ்ரீஜெயாகிய சம்ஹிதையில் ‘வாகீஸ்வரி’ (நாமகள்) என்று விளக்கப்பட்டுள்ளது. அதிகமான வெண்மை உருவுடையவள். சங்க, பத்ம, வரத, அபய அஸ்தங்களுடன் கூடியவள், நூல்களை இயற்றிக் கொண்டிருக்கும் நாத சொரூபமானவள் என்று குறிப்பிடப்படுகிறது. ‘லக்ஷ்மி தந்திரம்’ என்னும் நூல் சகல ஞான சம்பத்துக்களையும் ஆற்றலையும் அருள்பவள் எனக்கூறுகிறது.

தேவர்கள் துதிக்கும் தலைவியே, கலைமகளுக்குத் தலைவியே, பிருகு முனிவரின் திருமகளே, துயரம் தீர்ப்பவளே, ரத்தின மயமானவளே, நவமணி பதித்த குண்டலம் அணிந்தவளே, அமைதி நிலவும் புன்னகை முகத்துடையவளே, கலியுக பாவங்களைத் தொலைப்பவளே, வேண்டியோர் விரும்பியவுடன் கலைகளை அருளிப் பயன்களை வழங்கும் திருக்கரங்களை உடையவளே, மதுசூதனின் மனைவியே, வித்யா லட்சுமியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும் என வேண்டினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
 



Leave a Comment