இறவாப் புகழ்பெற்ற இயற்பகை நாயனார்


- "மாரி மைந்தன்" சிவராமன்

அறுபத்தி மூன்று நாயன்மார்கள் வரலாறு

இயற்பகை நாயனார் புராணம் (பாகம் -2)


' எனது மனைவியைத் தருகிறேன்',என அந்தணருக்குத் தயக்கமின்றிச் சொன்ன
இயற்பகை நாயனார்
வீட்டினுள் சென்றார்.

அழகின் திருவுருவாய் அன்பின் அடையாளமாய் பண்பின் அடைக்கலமாய் சமையல் வேலையில் இருந்த இல்லத்தரசி யாதென கேட்டாள்.

இயற்பகையனார் 
அவளிடம் தயக்கமின்றி
"உன்னைக் கேட்கிறார்.. தானமாகக் கேட்கிறார்... தந்துவிட்டேன்.....
நீ அவருடன் புறப்படு.."

அத்தெய்வமகள் 
முதலில் அதிர்ந்தாள்.
ஒரு கணம் யோசித்தாள்.
பின் அமைதியாய் சொன்னாள்.

"பிராண நாதா...
கணவனின் கட்டளையை நிறைவேற்றுவதே கற்புடையோர்
செய்ய வேண்டிய தலையாய கடமை
என அறிந்திருக்கிறேன்.

இதோ...
சிவனடியாருடன்
செல்ல 
இப்போதே
நான் தயார்..."

கட்டிய சேலையை 
சீர் படுத்திக்
கொண்டவாறே தயாரானாள்.
தாமதிக்காமல் புறப்பட்டு 
வெளியே வந்தாள்.
பின்னாளில் புவனம் போற்றிய அம்மாதரசி.

"சுவாமி செல்லலாம்"
கணவனும் மனைவியும் ஒருசேரச் சொல்ல அந்தணர் 
அர்த்தப் புன்னகையுடன் புறப்பட ஆயத்தமானார்.

"சிவன் மைந்தனே...!
இவளோடு நான் செல்கையில் 
உன் சொந்த பந்தங்களால் எங்களுக்குத்
தொந்தரவு வரலாம்.

ஊரும் 
அவர்கள் பக்கமே நிற்கும்.

எனவே....."

"மன்னிக்கவேண்டும்...
சுவாமிகளே...!
இதை யோசிக்காமல் 
நான் 
பிழை செய்ய இருந்தேன்.

நீங்கள் இருவரும் 
முன் செல்லுங்கள்.
ஈரடி தள்ளி 
பாதுகாப்பாக 
ஊர் எல்லை வரை 
நான் வருகிறேன்."

சொன்ன கையோடு 
ஆயுதச் சாலைக்குச் சென்று 
கைகள் நிறைய 
போர்க் கருவிகளுடன் போர்க்கோலம் 
பூண்டு வந்தார்.

கொடுத்துக் கொடுத்துச் சிவந்த 
அவர் திருக்கரங்களில்
உயிர் கெடுக்கும்,
உதிரம்
பீறிட வைக்கும்
கொலைக் கருவிகள்.

எதிர்பார்த்தபடியே உறவினர் பலர் 
எதிர்க்க வந்தனர்.

"மூடனே...
யாரேனும் மனைவியைத் தானம் தருவார்களா...?

அடேய்...பித்தனே....
பித்தம் தலைக்கேறி விட்டதா ?
உனக்குத் தான் மானமில்லை.
எங்களுக்கு உண்டு.

நம் குலப் பெண்ணை போயும் போயும் 
ஓர் அந்தணருக்கா தருவது ?

மானங்கெட்ட செயல்.
எங்களுக்கு மானமே பெரிது.

எங்கள் உயிரே போனாலும் பரவாயில்லை.

இந்த 
போலிச் சாமியாருடன்
போக இருக்கும்
இந்த பாவையையும் 
வர இருக்கும் 
பழியையும் மீட்டெடுப்போம்."

வில், வேல், வாள் 
கொண்டு 
தாக்கத் தொடங்கினர்.

அந்தணர் 
ஓரமாக நின்று
அத்தனை நிகழ்வுகளையும் 
பயந்த மாதிரி நடித்தபடி
ரசித்துக் கொண்டிருந்தார்.

"சுவாமி...
சிறிதும் பயப்படாதீர்கள்.. இயற்பகை
நம்மைப் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வார்"
மங்கை நல்லாள் அந்தணருக்குத் 
தைரியம் சொன்னாள்.

ஒரு போரே 
நிகழ்ந்து முடிந்தது. போர்க்களம்
செங்களம் ஆனது.

தப்பி ஓடிய 
உறவினர்கள் தவிர மற்றவர்களின் 
தோல் கை,கால்கள்
இரத்த வெள்ளத்தில் மாண்டு கொண்டிருந்தன.

"முட்டாளே...
இஃதொன்றும் 
வீர சாமர்த்தியம் 
இல்லை" என்று முனகினான் 
கடைசி  ஆளாகத் 
தப்பித்திருந்த
ஒருவன் தனது
கடைசி மூச்சில்.

ஊரின் எல்லை வந்தது.
'திருச்சாய்க்காடு' 
கோயில் அருகே இருவரையும் பாதுகாப்பாக 
இருக்கச் செய்துவிட்டு திருப்தியுடன் 
திரும்பினார் இயற்பகை.

கொஞ்ச நேரத்தில் 
அந்தணரின் குரல் 
உரக்க ஒலித்தது...
"இயற்பகை முனிவா அபயம்...!
நீ திரும்ப வருவாயாக..!செயற்கரிய செயல் 
செய்த தீரனே...
விரைந்து வா"

அக்குரல் 
திருச்சாய்க்காடு கோயில் 
சுவரில் பட்டு 
அப்பகுதி முழுக்க எதிரொலித்தது.

திருக்கோயிலில் உறைந்து அருள்பாலித்துக் கொண்டிருந்த
இறைவனும் இறைவியும் கூட
'அந்தணரைக் காணவில்லையே'
என அதிர்ந்து 
அடுத்த நிகழ்வுக்காக காத்திருந்தனர்.

'பிழைத்தவர் யாரேனும் தாக்க வந்து விட்டார்களோ' என்று எண்ணிய இயற்பகை 
வாளெடுத்து
விரைந்து வந்தார்.

போர் தொடர
வாளோடு வந்ததவருக்கு
பேர் அதிர்ச்சி!

ஆம்... 
அந்தணரைக் காணவில்லை.
'ஐயன்மீர்...'
ஆனமட்டும் 
கத்தி அழைத்தார்.

பதிலில்லை.

பூச்சூடி 
பூந்தளிர் போல்
கொள்ளை அழகுடன் மங்கை நல்லாள் மட்டும் பூங்காவனம் அருகே நின்றிருந்தாள்.

அவளிடம் 
அந்தணர் பற்றி கேட்டதற்கும் 
பதில் இல்லை.

'அவருக்கு ஏதாவது...
தனது உறவினரால் 
கெடுதல் வந்துவிட்டதோ'
இயற்பகையாரின் கண்கள் எண்திசையும்
தேடிய வேளையில்...

வானில் 
ஒரு பேரொளி
இடி முழக்கத்தோடு செவிமடுக்க வைத்தது.

வானவர் பூமாரி பொழிய விற்பன்னர் வேதங்கள் முழங்க
ஞான முனிவர்கள் போற்ற ரிஷப வாகனத்தில் இறைச் செல்வரும்
அவருக்கு அருட்சக்தியாக விளங்கும் அன்னையும் தம்பதிக் கோலத்தில்
அருட் காட்சி தந்தனர்.

"அப்பழுக்கற்றவனே..! என்னிடம் ஈடில்லா
அடிமைத் திறன் கொண்டவனே !

'அன்பு மிகும் போது ஆராய்ச்சிக்கு இடமில்லை' என மனைவியையே தானம் தந்தவனே !

அறமில்லை எனினும் கேட்பவர் சிவனடியார் என்பதால் 
மறுக்காது 
மனைவியையே
ஈந்த மெய்யன்பனே !

உடம்பும் உயிரும் 
உறும் பொருளும் சிவனடியாருக்கு உரியது எனும் உயர்ந்த 
சிவநெறி கொண்டவனே !

மனைவியை மனமகிழ்வோடு 
தானம் கொடுத்ததோடு அதற்கு இடையூறு இல்லாமல் 
போர்க்கோலம் பூண்டு நிழல்போல் காத்த 
அற்புத பக்தனே.!

'கணவனே கண்கண்ட தெய்வம் 'என 
அவன் சொல் மீறாது மாற்றானுடன் 
வாழத்  துணிந்த பெண்ணரசியே ...!

நீவிர் இருவரும் வாழ்க !
உமது அன்பையும்
அர்ப்பணிப்பையும்
நானும் உமையும்
மெச்சுகிறோம்.

பூமியில் 
இன்பப் பெருவாழ்வு வாழ்ந்து வாருங்கள்.
உரிய காலத்தில் 
சிவபுரம் 
அழைக்கப் படுவீர்கள்.

அங்கு வந்து 
மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்வீர்கள் !"

கடவுளர் 
வாழ்த்து மழை பொழிய
இயற்பகை நாயனார் பிறவிப் பயனடைந்த 
பெருமிதம் கொண்டார்.

அடுத்து
அந்த அதிசயம் அரங்கேறியது.

போரில் உயிர்நீத்த உறவினர்கள் உயிர்ப்பித்து எழுந்து முக்தி அடைந்து 
சிவபாதம் அடைந்தார்கள்.

'இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்'
என்று சுந்தரர்
போற்றி இருக்கிறார் என்றால் சும்மாவா ?

அது சுந்தரர் தந்த
நிரந்தர சிம்மாசனம் அல்லவா !

மார்கழி மாதம் 
உத்திரம் நட்சத்திரத்தில்
உதித்த
இறையே விரும்பிய 
இயற்பகை நாயனாரின்
நிறைபாதக் கமலங்களை
வணங்கி வருவது
குறைவில்லா 
வாழ்வு தரும்.

நிறைவில்
இறையின் திருவடிகளின்
நிரந்தர நிழலும் தரும்.


(இயற்பகை நாயனார் புராணம் முடிவுற்றது)



Leave a Comment