எது கேட்டாலும் தானமாகத் தரும் நாயனார்
- "மாரி மைந்தன்" சிவராமன்
அறுபத்திமூன்று நாயன்மார்கள் வரலாறு
இயற்பகை நாயனார் புராணம் (பாகம் -1 )
மகத்துவத்தில்
கங்கைக்கு
மேலானது காவேரி.
அது சமுத்திரத்தில் சங்கமிக்கும் இடம் என்பதால்
அந்த சோழநாட்டுச்
சிறுநகர்
'காவேரிப்பூம்பட்டினம்'
என பெயர் பெற்றது.
அதற்குப்
'பூம்புகார்'
என்ற பெயரும் உண்டு. அவ்வூர் மக்கள்
எதன் பொருட்டும்
எல்லா வளமும் நிறைந்த அவ்வூரை விட்டு
'வேறு ஊர் புகார்'
என்ற காரணத்தால் 'பூம்புகார்'
என பெயர் வந்தது.
அவ்வூரில்
ஒரு சிவநேசச் செல்வர். ஈகையில்
இணையில்லா வள்ளல்.
அவர்
எவர் வந்து
எது கேட்டாலும்
இல்லை என்று சொல்லாது
வந்தவரை மனம் குளிர அனுப்பிவைக்கும்
மாண்புடையார்.
வந்தவர் சிவனடியார் என்றால் பணிவோடும் பக்தியோடும் வழிபட்டு அவர் அகமகிழ
விரும்பிய பொருள் தந்து வழியனுப்பும் அருளாளர்.
பொதுவாக
உலக மாந்தர்
கேட்பதை எல்லாம் தருவதையும்
இருப்பதை எல்லாம் வழங்குவதையும் வாழ்க்கையாக கொண்டிருக்க மாட்டார்கள்.
'தர்மத்திற்கும் எல்லையுண்டு...
தனக்கு மிஞ்சியே
தான தர்மம்' என்றெல்லாம் நடைமுறைத் தத்துவம் உலகில் உண்டே !
'ஆற்றில் போட்டாலும் அளந்து போடு,
என்னும் வாழ்வியல் அறத்திற்கு மீறி
தானம் வழங்குவது
உலக இயற்கைக்கு அப்பாற்பட்டது.
எதிரானது.
இயற்கைக்குப் பகையானதும் கூட.
எனவே அவரை 'இயற்பகை நாயனார்' என்றே
காரணப் பெயரோடு
ஊர் அழைத்தது.
இயற்பகை நாயனாரை சிவனடியார்களும்
தம் சிரம் மேல் வைத்து போற்றிக் கொண்டாடினர்.
'என்னிடம் இருப்பதெல்லாம் சிவனுக்குரிய பொருளே. எனவே
அடியார் கேட்பதை
நான் ஏன்,
ஏன் எதற்கு
என்று கேட்டு
வழங்க வேண்டும்?
சிவனே கேட்கிறான். அவனே பெறுகிறான்.
அவனே அனைத்தையும் இயக்குகிறான்.
இடையில்
கேள்விகள் எதற்கு ?'
என்ற சரணாகதித் தத்துவம் அவர் கடைப்பிடித்த
சிவ வழிபாடு.
இயற்பகை நாயனார் வைசிய குலத்தைச் சேர்ந்த பெருமகனார்.
அவர் தொழில் வணிகம்.
ஈகை நிறைந்த வாழ்க்கை. மனை நிறைத்த
அழகிய மனையாள்.
ஆரவாரமற்ற
அற வாழ்க்கை.
புண்ணியம் சேர்க்கும்
தர்ம வாழ்க்கை.
வெண் பிறை சூடிய சிவபெருமானுக்கு இயற்பகை நாயனாரின் கீர்த்தியை உலகறியச் செய்ய விருப்பம் எழுந்தது.
விருப்பம்
விளையாட்டாய் உருவெடுத்தது.
கூத்தப் பெருமான்
ஒரு பழுத்த அந்தணர் வடிவம் எடுத்தார்.
உடலெங்கும்
திருநீறு மயமாய்
பார்க்க பரவசப்படும் பாங்கினராய்
இயற்பகை நாயனார் இல்லம் வந்தார்.
ஆம்...
இயற்பகையின்
அன்றைய விருந்தினர் இறையே.
ஓடோடி வந்து பாதம் தொட்டு வணங்கி "சுவாமிகள்...
வந்தது என் பாக்கியம்.
நான் யாது செய்ய வேண்டும் ?
உத்தரவிடுங்கள்"
பக்தி மேலிட வேண்டினார்.
ஆனால்
அந்தணர் உருவில் வந்த அம்பலவாணரின் விருப்பம் அறத்திற்கு அப்பால் இருந்தது.
இயற்கைக்கு எதிராய் இருந்தது.
"மெய் அன்பனே...
நான் எது கேட்டாலும் தருவேன் என
நீ சத்தியம் செய்தால்
என் விருப்பத்தைச் சொல்கிறேன்"
"கேளுங்கள்.. ஐயன்மீர்..!
எம்பெருமான் புண்ணியத்தில்
தாங்கள் கேட்பது
என் வசம் இருந்தால் மறுக்காது
மறுசொல் கூறாது
தந்து மகிழ்வேன்.
என்னுடையது என்று
ஏதும் ஏதுமில்லை. எல்லாம் சிவனுக்கு
உரியனவே."
ஆகாயத்தைக் கைகாட்டி அர்த்தத்தோடு
வணங்கிச் சொன்னார்.
அந்தணரின் ஆழ்மனம் ஆச்சரியம் கொண்டது.
'இப்படி ஒரு மெய்யடிமையா !'
வியந்தார்.
அதேசமயம் தான் விருப்பப்பட்டதைத் தாமதிக்காது
வினயமாகக் கேட்டார்.
"எனக்கு
உனது இளம் மனைவி வேண்டும்.....!!!! "
ஏனோ அருள் நிறைந்த அருட்தெய்வத்தின் கண்கள்
காமம் கொப்பளிக்கச் சிவந்திருந்தது.
சிவனுக்கு
எவனாவது நடிப்பு சொல்லித் தரவேண்டுமா என்ன ?
ஆனால்
ஒரு சந்தேகம்
இச்சம்பவம் குறித்து
இன்று வரை உலவுகிறது.
'உமைக்குத் தெரியாமல் ரகசியமாக அவன் வந்திருக்கலாம் !'
யார் கண்டது?
பார்வதிதேவிக்கு தெரிந்திருந்தால் ஒரு பிரபஞ்சப் போரே நிகழ்ந்து இருக்குமோ என்னவோ !!!
அந்த சர்ச்சை
இருக்கட்டும்
ஒரு புறம்.
விஷயத்திற்கு வருவோம்.
இறைக் கூத்தாடி
விரும்பிக்
கேட்டது
இறையே
எல்லாமுமாக இருந்த
இயற்பகை நாயனாரை
ஒரு கணம் கூட
யோசிக்க வைக்கவில்லை.
அவர் மனைவி ?!?!
(இயற்பகை நாயனார் -தொடரும்)
Leave a Comment