பொருள் வளத்துடன் வாழ அருள் தரும் ஸ்ரீதனலட்சுமி
தனம் என்பது பணம் அல்லது தங்கத்தைக் குறிக்கும். பணம் நாம் சுக வாழ்வு வாழ மிகவும் அவசியம். இத்தேவியே வைபவ லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். தனலட்சுமியின் அருளால் செல்வங்கள் குவிகின்றன என்று நிகமாந்த தேசிகன் கூறியுள்ளார். தன் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், பச்சிலை, கெண்டி, வில், அம்பு போன்றவற்றை ஏந்தி பத்மபீடத்தில் பொலிபவள்.
‘திமி திமி திந்திமி திந்திமி திந்திமி என்று துந்துபி முழங்கப் பூரண வடிவானவளே, குமகும குங்கும எனச் சங்கம் இனிமையோடு முழங்க, வேதங்களும், புராணங்களும் துதித்துப் போற்ற, வேத வழியில் நன்னெறி காட்டுபவளே, மதுசூதனின் ஆபரணமே, உன்னைத் தரித்திருப்பதால் நாராயணனும் பெருமை பெற்று விளங்குகிறான். எம்மைக் காத்து வாழ்விப்பவள் நீயே,’ என்று சொல்லி வழிபட்டால், நல்லவழியாகிய தர்ம நெறியில் நம் தேவைக்கேற்ப செல்வத்தை சம்பாதித்து பொருள் வளத்துடன் வாழ ஸ்ரீதனலட்சுமி அருள்புரிவாள்.
விஜயலட்சுமி
விஜயம் என்றால் வெற்றி என்று பொருள். வெற்றியை அருள்பவள் விஜயலட்சுமி. எடுத்த காரியங்களில் வெற்றிபெறச் செய்பவள். விஜயலட்சுமிக்கு வெற்றித் திருமகள் என்ற பெயரும் உண்டு. தன் திருக்கரங்களில் வாள், சார்ங்கம், சுதர்சன சக்ரம், சங்கு, கத்தி, கேடயம், அபயம், வரதம் போன்றவற்றைத் தரித்து அன்னத்தின் மீது அமர்ந்தருளும் கோலம் கொண்டவள்.
‘தாமரை மலரில் பொலிபவளே, நற்கதியளிப்பவளே, ஞானம் வளர்ப்பவளே, கான மயமானவளே, வெற்றியைக் குறைவின்றி நல்குபவளே, அனுதினமும் குங்குமத்தினாலும், மலர்களினாலும், அர்ச்சனை பெறுபவளே, வாத்தியங்கள் முழங்க, சங்கர பகவத் பாதாள் கனகதாரா துதி பாட, அவருக்கு அருளியதன் மூலம் பெருமையளித்தவளே, மதுசூதனின் மனைவியே, வெற்றித் திருமகளே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும்,’ - என பக்தியுடன் கூறி ஸ்ரீவிஜயலட்சுமி தேவியை வழிபட்டால் நம் வாழ்வில் தோல்வி, ஏமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கும் எதிலும் வெற்றிதான்.
Leave a Comment