வீடு பேறு தருவோன், ஓடு கேட்டு வழக்கு...!!!


- "மாரி மைந்தன்" சிவராமன்

அறுபத்தி மூன்று நாயன்மார்கள் வரலாறு

திருநீலகண்டர் புராணம் - பாகம் 3

"அப்பனே.....நலமா ? கொஞ்சம் அவசரம்....

என் திருவோடு தா...
தெருவோடே நான் விடைபெறுகிறேன்."

"சற்று பொறுங்கள் ஐயன்மீர்..."
தாள் பணிந்து வணங்கிவிட்டு குடிசைக்குள் போனார் நீலகண்டர்.

என்னே கொடுமை !
வைத்த இடத்தில் தேடினார் 
திருவோடு காணவில்லை.
ஓடு வைத்த இடத்தில் 
மண் துகள்கள் கூட தென்படவில்லை.

குடிசை முழுக்கத் தேடினார். 
ஊஹூம்...
கண்ணில் படவில்லை.

"என்னப்பனே...!என்னாயிற்று...?நேரமாகிறது.....!" வீட்டிற்குள்ளேயே வந்துவிட்டார்
தீராத விளையாட்டுப் பிள்ளை.
திருவோட்டை மாயமாய் மறையச் செய்திருந்த மறை போற்றும்
பிள்ளையாரின் அப்பா.

அடுத்து என்ன ?

ஆடலரசனின் குரல் ஓங்கித் 
திருவோடு கேட்க
பறி கொடுத்திருந்த 
அப்பாவி நீலகண்டர் 
பரிதவித்துக் கதறினார்.

"சுவாமி....
இது என் பிழை அல்ல.
நான் பொய்யன் அல்ல.
என்னை நம்புங்கள்.
வேறு திருவோடு 
செய்து தந்து விடுகிறேன்"

சிவயோகியின் கோபம்
எல்லை மீறியது.

"என்னப்பா...
என் சக்தி வாய்ந்த திருவோட்டை வைத்துக்கொண்டு 
வேறு தரலாம் என்று வஞ்சகம் செய்யப் பார்க்கிறாயா ?"
நெற்றிக் கண்ணை திறக்காத குறை.

"ஐயோ...சுவாமிகளே! அப்படிச் சொல்லாதீர்கள்.
 நான் வஞ்சகன் அல்ல" துடிதுடித்தார் நீலகண்டர்.

யோகி 
கோபம் தணியாமல் 
கண் சிவக்க,
"ஓடு தரவில்லை எனில் ஊரைக் கூட்டுவேன். வழக்குப் போடுவேன்.
நியாயம் கேட்பேன்."

நன்றாகவே நடித்தார்.
மகா நடிகன் அல்லவா ?

"நீ 
திருட வில்லை எனில் 
உன் மகனுடன் 
ஊர்க் குளத்தில் மூழ்கி சத்தியம் செய்.... நம்புகிறேன்." 

"சுவாமி....
 அதற்கு வாய்ப்பில்லை."

"காரணம் ?"

"எனக்கு மகவு இல்லை "

"ஓஹோ... மகனையும் தொலைத்து விட்டாயா !"
குரலில் அனல் தெறித்தது.

"ஆம்... சுவாமி 
அந்த பாக்கியம் இல்லை"

" சரி....சரி 
காலம் கடத்தாதே.
உன் மனைவியுடன் குளத்தில் மூழ்கி 
சத்தியம் செய் 
ஊரார் முன்னிலையில், நம்பித் தொலைக்கிறேன்"

தில்லைவாழ் அந்தணர்
வேத விற்பன்னர்கள்
ஊர் பெரியவர்கள் 
திருப்புலீச்சரத்துக்
குளத்தின் முன்பாக கூடியிருக்க
பஞ்சாயத்து தொடங்கியது.

வாதி தன் வாதம் சொன்னார்.
பிரதிவாதிக்குப்
பழி வராதிருக்க பரிகாரமும் பகர்ந்தார். .

'திருநீலகண்டர் 
தன் மனைவியுடன் 
குளத்தில் இறங்கி சத்தியம் செய்ய வேண்டும்' என்று
மக்கள் மன்றமும் 
கூறவே சம்மதித்தார் 
திருநீலகண்டர்

திருநீலகண்டர்
குடிலுக்குச் சென்று
மனைவியை 
அழைத்து வந்தார்.

ஒரு நீண்ட 
மூங்கில் தண்டின் 
ஒரு முனையை
திருநீலகண்டர் பிடித்துக்கொள்ள மறுமுனையை 
மனையாள் பிடித்தபடி குளத்தில் இறங்கினர் சத்தியம் காக்க.

"பொறு...  பொறு...  குயவனே...
இதென்ன நியாயம் ? 
கரம் பிடியப்பா...
குளத்தில் மூழ்கி கழுத்தளவு நீரில் நின்று சத்தியம் செய்..."

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு யோகியின் குரல் 
கடும் கோபமாய் விண்ணைத் தொட்டது.

(திருநீலகண்டர் புராணம் -  தொடரும்)



Leave a Comment