வாழ்வின் துன்பங்கள் நீங்கி செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி வழிபாடு


சித்ரா பவுர்ணமி சித்திரை மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் சித்திரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வின் போது தர்ம தேவதையான எமதர்மராஜனின், உதவியாளரான (கணக்கு பிள்ளை) சித்திர குப்தனுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இத்தினத்தில் சிவன் மற்றும் அம்மன் வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

சித்திரை மாதத்தில் குளிர் முழுவதும் முடிந்து இளவெயில் ஆரம்பமாகிறது. எனவே இவ்விழா வசந்த காலத்தை வரவேற்கும் உற்சாக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பொதுவாக இவ்விழா நாளன்று மக்கள் நீர் நிலைகளில் புனித நீராடலை மேற்கொள்கின்றனர்.

பொங்கல் வைத்து படையலிட்டும், அன்னதானம் செய்தும் மக்கள் இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். சித்ரா பவுர்ணமி அன்று விரதம் மேற்கொள்கின்றனர். இதனால் வாழ்வின் துன்பங்கள் நீங்கி வளம் பெறுவதாகவும், எம பயம் நீங்கி நீண்ட ஆயுள் கிடைப்பதாகவும் மக்கள் கருதுகின்றனர்.

இத்தினத்தன்று இரவு மக்கள் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளின் கரைகளில் கூடி நிலவொளியில் அமர்ந்து சித்ரான்னம் என்று சொல்லக் கூடிய பல வகையான கலவை சாத வகைகளை பகிர்ந்து உண்டு மகிழ்கின்றனர். இவ்வாறு சித்ரா பவுர்ணமி இரவு உணவு உண்ணும் நிகழ்ச்சி பற்றி சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.



Leave a Comment