கொடுத்துக் கெடுத்தாலும் , மீண்டும் கொடுப்பவர் சாயா புத்திரன்


சூரியனுக்கும், சாயா தேவிக்கும் பிறந்தவர்  தான் தர்ம ராஜனின் அவதாரம் என போற்றப்படும் சனீஸ்வரர் . ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனியின்  தாக்கம் இருந்தே தீரும். அவரின் பார்வையில் இருந்தும் , தீர்ப்பில் இருந்தும் யாரும் தப்பிக்க முடியாது . சராசரி மானிடரில் இருந்து தேவலோகத்துக்கு அதிபதியான இந்திரனாக இருந்தாலும் அவருக்கு எல்லோருமே ஒன்று தான் .

ஒரு சமயம் தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று, ‘நான் தேவர்களுக்கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம்?’ என்று கேட்டான். அதற்கு சனி பகவான், ‘நான் நீதிமான். எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது’ என விளக்கம் சொன்னார்.‘அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடு’ என்று தேவேந்திரன் வேண்டினான். சனீஸ்வரர் அந்த கால நேரத்தை தெரிவித்தார். சனீஸ்வரர் தெரிவித்த அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டு சாக்கடையில் போய் ஒளிந்துகொண்டான். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்த பிறகு வெளியே வந்த தேவேந்திரன், சனீஸ்வரரிடம் சென்று, ‘உங்கள் பார்வையில் இருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களா’ என்று பெருமையடித்துக் கொண்டான். சனீஸ்வரர் சிரித்துக்கொண்டே, ‘நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் உழன்றீர்களே.. அதுகூட என் பார்வை, பீடிப்பினால்தான்’ என்றார். இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் பாரபட்சம் இல்லாத நீதிமான் என்பதை அறிந்துக் கொள்ளலாம் .

ஏழரைக்குப் பிறகு  ஒவ்வொரு மனிதனுக்கும் தெளிவும் நிதானமும் வந்து விடும் . அந்த அளவிற்கு மனிதனை பண்படுத்தும் காலக்கட்டம் என்று கூட சொல்லலாம் . ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ,  புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மை ,தீமைகளையும் தருவார் என்று சொல்லப்பட்டாலும்  , சனி கொடுத்தால் யார் தடுப்பார் என்று  சொல்லும் அளவிற்கு ஏழரையின்  முடிவில்  அளவில்லாமல் வாரி வழங்கவும் செய்வார் .

 

இரண்டாவது சுற்று

 

இருபத்தேழு வயதுக்கு மேல் நடக்கும் ஏழரைச் சனிக்கு  பொங்கு சனி என்று பெயர். பறித்தல்,பறித்ததை காத்தல் , காத்ததை அதன் வீரியம் குறையாமல்  பாதுகாத்தல், பாதுகாத்ததை அதோடு நிற்காமல் பலமடங்காக பெருக்கி , எடுத்தவருக்கே அதை திருப்பி தருதல்  என பொங்கு சனியின் இயல்பை குறிப்பிடலாம் .  இதனால் தான்  கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்று சனி பகவானைக் குறிப்பிடுவதுண்டு .  காசு, பணம், பதவி,கல்யாணம், சொத்து, சுகம் எல்லாம் வந்தாலும் , வந்த வேகத்திலேயே காணாமலும் போகும் . ‘நான்’ என்ற அகந்தையை ஒருவரிடம் இருந்து பிடுங்கவே இந்த அதிரடி நடவடிக்கை . இந்தக் காலக்கட்டத்தில் தான் நாம் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் . ‘நான்’ , ‘எனது’ , ‘என்னால் தான்’ என்ற எண்ணம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .

 

 ‘‘நம் கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவம் தான் இந்த காலகட்டத்தில் உத்தமம் .  நம் நேர்மையை சோதிக்கவும் சனி பகவான் செய்வார் . மனம் சஞ்சலப்படாமல் நேர்மையின் பக்கம் நின்று விட்டால் பின் எல்லாமே ஜெயம் தான் .

நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய் என முக்கூட்டு எண்ணெயினை  ஓர் இரும்புச் சட்டியில் இட்டு , வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத்  திரியாக இட்டு , நீலசங்கு புஷ்பம், , வில்வ இலைகளைக் கொண்டு  சனி பகவான் சன்னதியில் மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர நலம் பயக்கும் .

 

சனி பகவான் ஸ்தோத்திரம்

 

ஸூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ: ஸிவப்ரிய:

தீர்க்கசார: ப்ரஸந்நாத்மா பீடாம்ஹரதுமே ஸனி:

 

சூர்யபுத்திரனும், நீண்டதேகமுள்ளவனும், சிவப்ரியனும் தெளிந்த மனம் உள்ளவனுமான சனீஸ்வரபகவான் என்னுடைய தோஷத்தை எல்லாம் போக்க வேண்டும்.



Leave a Comment