நீலகண்டருக்கு யோகி கொடுத்த பேராற்றல் கொண்ட திருவோடு.....
- "மாரி மைந்தன்" சிவராமன்
அறுபத்தி மூன்று நாயன்மார்கள் வரலாறு
திருநீலகண்டர் புராணம் - பாகம் 2
காலம்
பல காலம் நகர்ந்தது.
அத்தனை காலமும்
அந்த சிறிய
ஒண்டிக் குடித்தனக் குடிசையில்
நக நுனி கூட படாது நீலகண்டனும் அவரது மனையாளும்
வாழ்ந்து வந்தனர்.
அக்கம்பக்கத்தார், நெருங்கி வந்த உற்றார் உறவினர் கூட
அறியாத வண்ணம் திருநீலகண்டரின்
தேடல்,ஊடல்,
உடல் உறவில்லா தாம்பத்தியம் தொடர்ந்தது.
யாருக்கும் தெரியாத
இந்த ரகசியம்
கணவன் மனைவி இருவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் படியளக்கும் பரமனுக்குத் தெரியாமலிருக்குமா என்ன ?!
எப்போதும்
இறை விளையாட்டில் அர்த்தம் இருக்கும்.
எல்லையில்லா
கருணை இருக்கும்.
முடிவில் உலக மாந்தர் அனைவருக்கும்
அவன் சொல்ல வந்த
நீதி நிறைந்திருக்கும்.
அதற்குப் பரமன்
நாள் குறித்தான்.
பழுத்த யோகி.
உடல் முழுக்க திருநீறு. பேச்சும் மூச்சும் சிந்தனையும்
பரமசிவன் என்றே
புகழ்பாடும்.
விழித்திருக்கும் நேரமெல்லாம்
'சிவ சிவ'என
நா அசையா
இறை முழக்கம்.
வீதியில் நடந்து வந்த அந்த யோகி,
நெற்றியில்
திருநீறுப் பட்டை,
கழுத்தில்
ருத்ராட்சக் கொட்டை,
புலன்கள் முழுக்க திருநீலகண்டம்
என வாழும்
நீலகண்டர்
குடில் முன் நின்றார்.
நீலகண்டருக்கு
எல்லையில்லா மகிழ்ச்சி.
கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
மனது மட்டும் எட்டுக்கால் பாய்ச்சலில்
குடிசை முன் நின்ற சிவனடியாரை நெருங்கி
அவரை அவரின்
காலடி விழ வைத்தது.
''சுவாமி.....
என்னே என் பாக்கியம் !
உள்ளே வாருங்கள்"
பாதாபிஷேகம் செய்து விழுந்து வணங்கி
உள்ளே அழைத்துச் சென்றார்
உள்ளமெல்லாம் பூரிப்புடன்.
அடியார் ஆசி தந்தார் இறையருளும்
கூடும் என்றார்.
பின்
வந்த காரியத்தை
மெலிதாகச் சொன்னார்.
"அப்பனே !
நான் கொஞ்ச காலம்
தேச சஞ்சாரம் செல்கிறேன்.
வர நாளாகும்.
என்னிடம் இருக்கும்
இந்த திருவோடு
ஈடு இணையற்ற அருளாற்றல் மிக்கது. உள்ளே வைக்கும் எப்பொருளையும்
சக்தி மிக்கதாக மாற்றும் பேராற்றல் கொண்டது.
பயணத்தில்
எனக்கெதற்கு ?
நீயே பொருத்தமான
சிவ பக்தன்.
நான் திரும்ப வரும் வரை நீ பத்திரமாக வைத்திரு.
திரும்ப வந்து
பெற்றுக் கொள்கிறேன்."
'பத்திரம்' என தந்தார்.
மீண்டும் 'பத்திரம்'
என்று எழுந்தார்.
வீதி வரை வந்து வழியனுப்ப வந்த திருநீலகண்டரின் தோள்தட்டி
மூன்றாம் முறையாக 'பத்திரம்' என்று அழுத்தமாக
விஷமச் சிரிப்புடன் சொன்னார்.
நீலகண்டர் சிவயோகி சென்ற
திசையை
வணங்கியபடி இருக்க....
தெருமுனை வரை
நடந்த அவ்வடியார் நொடிப்பொழுதில் மாயமானார்.
ஓரிரு நொடிகளில்
அவர் அமர்ந்த இடம் சிதம்பரம் பொன்னம்பலம்.
ஆண்டுகள் பல உருண்டோடின.
அதே சிதம்பரம்.
அதே நீலகண்டர்.
அதே குடிசை.
அதே விலகி வாழ்ந்த வைராக்கியத் தாம்பத்தியம்.
நீலகண்டரும்
அவர் மனையாளும்
இளமை இழந்து வயோதிகத்தின் விளிம்பில்
வாழ்ந்து கொண்டிருந்தது மட்டுமே மாற்றம்.
அன்று
நீலகண்டர்
குடிசை வாயிலில் . 'திருநீலகண்டம்... திருநீலகண்டம்... '
என இறை நாடிக் கொண்டிருந்தார்.
ஆயிரம் சூரிய ஒளி பிரகாசத்துடன்
கோடிப் பூக்கள்
நறுமணம் கமழ
அப்போது வந்தார்
யோகி வடிவிலிருந்த
ஆதியோகி அம்பலத்தரசன்.
திருவிளையாடல் களைகட்டத் தொடங்கியது.
(திருநீலகண்டர் புராணம் தொடரும்)
Leave a Comment