மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் பெரிதும் போற்றப்படும் ராம அவதாரம்.... ராம நவமியின் சிறப்புகள்....
மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது ராம அவதாரம் என்றால் அது மிகையாகாது.
பூமியில் பிறப்பெடுத்து இறுதி வரை நீதி நெறி வழுவாமல், ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்தவர் என்ற வகையில் ராமர் பெரும் சிறப்பை எய்துகிறார்.
சிவபெருமானிடம் பல வரங்களை பெற்ற இராவணன், தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிப்பதற்காக, அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் இராமர். உரிய நேரம் வந்தபோது இராவணனையும், அவனது அசுர கூட்டத்தையும் அழித்தார். அதர்மத்தை அழித்து, தருமத்தை நிலை நாட்டினார்.
இராவணனை அழிக்கும் பொருட்டு மண்ணில் தோன்றி, மனித குலத்திற்கு ஒழுக்கம் மற்றும் தர்மத்தை கற்றுக் கொடுத்த ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமி என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீராமன், நவமி திதியில் அவதரிக்கும் போது, புனர்பூச நட்சத்திரத்தில் நான்காம் பாதத்திலும், ஐந்து கிரகங்கள் உச்சத்திலும் இருந்தன. கடக லக்னத்தில் நண்பகல் வேளையில், ராமவதாரம் நடந்தேறியது.
அஷ்டமி, நவமி திதியின் கவலை :
அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள். இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகா விஷ்ணுவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறையை கூறினர்.
அப்போது விஷ்ணு பகவான், 'உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும்" என்று உறுதியளித்தார். அதன்படியே வாசுதேவர்-தேவகி ஆகியோருக்கு மகனாக, அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நவமி திதியில் தசரதர்-கௌசலை தம்பதியருக்கு மகனாக பிறந்தார் ராமபிரான். அன்றைய தினம் ராம நவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த வருடம் 21.04.2021 (சித்திரை 08) புதன்கிழமை அன்று ராம நவமி வருகிறது.
Leave a Comment