சிவமே மூச்சாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள்


 

சிவனை தவிர வேறெந்த சிந்தனையின்றி அவன் தாள் பற்றி  வழிநடந்தவர்கள் நாயன்மார்கள். சிவாய நம என்றால் அபாயம் ஏதும் இல்லை என்று தொண்டாற்றிய நாயன்மார்களின் பாடல்கள் , சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். ஒவ்வொருவரும் தம் வாழ் நாளில் ஓர் குறிப்பிட்ட தொழிலை செய்து வந்தாலும் , சிவ நாமத்தையே மூச்சாக கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் .

அறுபத்துமூன்று நாயன்மார்களில் மூவர்  மட்டுமே பெண்கள். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் காரைக்கால் அம்மையார் ,  நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற அறியப்படும் மதுரையை ஆண்ட கூன் பாண்டியனின் மனைவி மங்கையர்கரசியார் , திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயன்மாரின் மனைவி இசைஞானியார்  என்று மூன்று பெண்கள் உள்ளனர் .

வரும் பதிவுகளில்  இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் .முதலாவதாக அதிபத்தர் என்னும் ஆதி சிவனின் பக்தரைப் பற்றி  தெரிந்துக் கொள்வோம் .

 

பொன்னுக்கு ஆசைப்படாத அதிபத்தர்

 

மீனவச் சமூகத்தை சேர்ந்த அதிபத்தர், சோழ நாட்டில் சிறந்து விளங்கிய நாகப்பட்டினம் துறைமுகத்தில் வாழ்ந்து வந்தவர் . சிறந்த சிவ பக்தரான அவர் ,  தினமும் நண்பர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்கச் செல்வார்.  அப்படி போகும் போது நடுக்கடலில் கிடைக்கும் முதல் மீனை “இது ஈசனுக்கு” என்று சொல்லி மீண்டும் கடலிலேயே விட்டு விடுவார்.

சில நாட்களில் மீன் எதுவும் கிடைக்காமல்  போவதும் உண்டு . அப்படி மீன்களே கிடைத்திடாத காலங்களிலும் கூட , வலையில்  மிக அரிதாக கிடைக்கும் மீனையையும்  கூட இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு  பட்டினியாக கிடக்கும் பக்குவத்தையும்  பெற்றிருந்தார் . அதிபத்தர் இந்த  செயல் நீண்ட நாட்களுக்கு தொடர்ந்தது .

ஒரு முறை கொடிய பஞ்சம் வந்தது. அப்போதும் கூட கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற அதிபத்தர் , வறுமையிலும் தான்  கொண்ட கொள்கையை  மட்டும் தவறவிடவில்லை. தினமும் கிடைக்கும் ஒரே ஒரு மீனையும்  , இறைவனுக்கு என்று சொல்லி கடலிலேயே விட்டுவிடுவார். இப்படி நாட்கள் சென்றாலும், தன்னுடைய பணியையும், பக்தியையும் அவர் விடவே இல்லை.

சும்மா இருப்பாரா நம் திருவிளையாடல்களின் நாயகன் , அதிபத்தர் அன்பை சோதிக்க விரும்பினார் .  ஒருநாள் அதிபத்தரின் வலையில் நவரத்தினமும் , பொன்னும் பதிக்கப்பட்ட அதிசய மீனை சிக்க செய்தார். வறுமை காலத்திலும் ,வலையில் சிக்கிய விலை மதிப்பற்ற அந்த ஒரு மீனையும் அதிபத்தர் எவ்வித தயக்கமும் இன்றி சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்தார்.  தொடர்ந்து ஈசனும் அந்த அதிசய மீனை அவர் வலையில் சிக்கும்படி செய்தார் . அதிபத்தரும் பொன் பொருளுக்கு ஆசைப்படாமல்  அந்த மீனையும் இறைவனுக்கே அர்ப்பணம் செய்தார் .

 

அவரது அன்பில் மயங்கிய சிவபெருமான், பார்வதியுடன் அதிபத்தருக்கு காட்சியளித்தார் என்கிறது  வரலாறு.

நாயன்மார்களின் வரலாறு தொடரும் ....



Leave a Comment