தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவது ஏன்?
வட இந்தியாவில் குப்தர் வம்சத்தை சேர்ந்த 2-வது சந்திர குப்தன் தமது பெயரை விக்கிரமாதித்தன் என மாற்றிக் கொண்டு தமது பெயரால் விக்கிரம சகம் என்ற ஆண்டு முறையை உருவாக்குகிறான். அதனடிப்படையில்தான் விக்கிரமசகம் எனும் 60 ஆண்டு முறை உருவாகிறது. இது பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் முடியும். இந்த 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான்.
உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகின் பல்வேறு நாடுகளும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின. சூரியனை மையமாக வைத்து பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையில் தமிழர்கள் 12 பாகங்களாகப் பிரித்தார்கள்.
இந்த வான வீதியை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் 12 பாகங்களாக பிரித்தார்கள். இவையே ராசிகள் என அழைக்கப்படுகின்றன. சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நிகழ்வு சித்திரையில் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் ஆரம்பித்தார்கள்.
சித்திரையின் சீர்மிகு விழாக்கள்
திருக்கோயில்களின் விழாக்கள், மிகவும் கோலாகலமாக நடைபெறும் மாதமும் சித்திரையாகும். மதுரை மாநகரில் அருள்மிகு மீனாட்சியம்மன் ஆலயத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவும், அதன் உள்நிகழ்வுகளான அம்பாள் பட்டாபிஷேகம், மீனாட்சி-சுந்தரேச்வரர் திருக்கல்யாணம் போன்றவையும் உலகப் பிரசித்தம். அழகர் மலை கள்ளழகருக்குச் சித்திரையில் பிரம்மோற்சவம். அழகர் உலா புறப்பட்டு, ஆற்றில் இறங்கி, அகிலத்தோர் எல்லோருக்கும் அருள்பாலிப்பார்.
ஆழித்தேருக்குப் பெயர்போன திருவாரூர் தேர்த் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தேரோட்டமும் இம்மாதத்தில்தான். பற்பல திருத்தலங்களில் தேரோட்டம் சித்திரையில் நடைபெறும். வைணவத் திருக்கோயில்கள் பலவற்றிலும், சித்திரை மாதம், விமரிசையான கொண்டாட்ட காலம். திருவில்லிப்புதூரில், பத்து நாள் விழா கண்டு, சித்திரா பவுர்ணமி நாளில் ரங்கமன்னாரோடு ஆண்டாள் நாச்சியார் தேரில் பவனி வருவாள்.
சித்திரா பவுர்ணமி நாளில், சிவபெருமானை வழிபடுவதும் வெகு சிறப்பு. மருக்கொழுந்து அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம் சாற்றி, சுத்தான்னம் படைத்து வழிபட்டால், சகல ஐச்வரியங்களும் கிட்டும். திருநெல்வேலிப் பகுதிக்கே உரித்தான சித்திரா நதியில் நீராடி விரதமிருந்து திருக்குற்றால நாதரை வழிபடுவதும் விசேஷமானது.
இயற்கையின் திருவிளையாடல்
மாசி-பங்குனி மாதங்களில், மரங்களிலிருந்து இலைகள் அதிகமாக உதிரும். ஆயின், சுக்ல பக்ஷ பிரதமை நாள் நெருங்கும்போதே, புதிய துளிர்கள் துளிர்த்து, மொட்டுகள் அரும்பி, வசந்தத்தின் வண்ண விளையாட்டு, தலைகாட்டத் தொடங்கிவிடும்.
சாந்த்ரமான யுகாதியைக் கணக்கெடுத்தால், அன்று தொடங்கி ஒன்பது நாட்களுக்குக் கொண்டாடப் பெறும் முதல் விழா வசந்த நவராத்திரியாகும். துர்க்கையை வழிபடும் விழா. இளவேனில் காலத்து விளைச்சல் நன்கமையவேண்டுமென அம்பிகையை பிரார்த்திக்க வேண்டும்.
இதே வகையில், ஆண்டின் முதல் நாளில் தொடங்கி, ஏழு நாட்களுக்கு, நாளொன்றுக்கு ஒருவராக, ஸப்த ரிஷிகளையும் வழிபடவேண்டும்.
Leave a Comment