செவ்வாய்க்கிழமை நல்ல நாளா இல்லையா..? சாஸ்திரம் என்ன சொல்கிறது?


ஒரு சிலர் செவ்வாய்க் கிழமையை மங்களவாரம், அதனால் மங்களகரமான காரியங்களைச் செய்யலாம் என்று விவாதித்தாலும், நம்மவர்களுக்கு செவ்வாய் என்றாலே ஒருவித பய உணர்வு மனதில் தோன்றுகிறது. ‘செவ்வாயோ... வெறும் வாயோ...’ என்ற பழமொழியை கிராமப்புறங்களில் கேட்டிருப்போம். செவ்வாய்க் கிழமையில் பேச வேண்டாம், புதன்கிழமையில பேசுவோம் என்று முக்கியமான விவாதங்களையும் செவ்வாய்க்கிழமையில் தவிர்ப்பார்கள். 

இவ்வாறு செவ்வாயைத் தவிர்ப்பதன் காரணத்தையும் ஜோதிடம் விளக்குகிறது. நவகிரகங்களில் சனி, ராகு, கேதுவிற்கு அடுத்தபடியாக தீய கிரகங்களில் ஒருவராக செவ்வாய் சித்தரிக்கப்படுகிறது. இயற்கையில் செவ்வாய் எஜமானரின் உத்தரவினை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் ஒரு தொண்டனாக, படைவீரனாக, காவல்காரனாக இருக்கும் குணத்தினைத் தரும். விஸ்வாசம் நிறைந்த பணியாள் என்றாலும் மூர்க்க குணம் தரும். எதைப்பற்றியும் கவலைப்படாது, சற்றும் யோசிக்காது மிகவும் வேகமாக செயல்படக்கூடிய தன்மையை செவ்வாய் தரும். 

ஜோதிட ரீதியாக செவ்வாயின் குணம் இதுவென்றால், சாஸ்திரம் செவ்வாய்கிழமையைப் பற்றி என்ன சொல்கிறது என்பதையும் தெரிந்துகொள்வோம். தர்ம சாஸ்திரத்தில் மௌன அங்காரக விரதம் என்று ஒரு விரதத்தினைப் பற்றி மிகவும் விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது.

அதாவது செவ்வாய்க்கிழமை நாளன்று மௌனவிரதம் அனுஷ்டித்தால் ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். செவ்வாயில் எந்த ஒரு விஷயத்தையும் அசைபோடாது வெறுமனே வாயை மூடிக் கொண்டிருப்பதால் சிரமங்கள் ஏதும் நேராது. 

இன்னும் சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது, அவ்வாறு தர்க்கம் செய்வதாலோ, விவாதத்தில் ஈடுபடுவதாலோ தீமையே உண்டாகும். தற்காலத்தில் கூட தங்களது பேச்சுத் திறமையின் (கேன்வாசிங்) மூலம் வாடிக்கையாளரைக் கவரும் தொழில் செய்யும் பெரிய நிறுவனங்கள் கூட (ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், நகைக்கடை போன்றவை) செவ்வாய்கிழமை அன்று விடுமுறை விட்டுவிடுவதைக் காணலாம். செவ்வாய்க்கிழமையில் பொதுமக்களோடு பேசுவதன் மூலம் பரஸ்பரம் ஒரு சுமுக உறவு உண்டாகாது என்பது அவர்களது அனுபவத்தில் கிடைத்த பாடமாக இருக்கிறது. 

அதனாலேயே திருமண சம்பந்தம் பேசச் செல்பவர்கள் கூட செவ்வாய் மங்களவாரமாக இருந்தாலும் அதனைத் தவிர்க்கிறார்கள். ‘செவ்வாயோ.. வெறும் வாயோ...’ என்ற பழமொழியை நம்மவர்கள் அனுபவித்துத்தான் சொல்லியிருக்கிறார்கள். அதனால் தர்மசாஸ்திர வாக்கியப்படி செவ்வாய்க்கிழமையில் மௌன விரதம் இருக்க முயற்சிப்போம். இயலாவிட்டால் வீண் விவாதத்தினையாவது தவிர்ப்போம். நன்மை காண்போம். அதேநேரத்தில் செவ்வாய் தோஷத்திற்கான பரிகார சாந்தி, துர்கா ஹோமம் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யும் ஆயுஷ்ய ஹோமம், சஷ்டி அப்த பூர்த்தி ஆகியவற்றை செவ்வாய்கிழமையில் செய்யலாம்.
 



Leave a Comment