சித்திரை மாத விஷூ பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது....


ஏப்ரல் 18 ஆம் தேதி வரை ஐயப்பன் கோயில் பக்தர்கள் தரினத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். 
பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மார்ச் 14-ந் தேதி திறக்கப்பட்டது. 19-ந்தேதி பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் விழா மிக கோலாகலமாக நடந்து, 28-ந் தேதி ஆராட்டுடன் விழா நிறைவடைந்தது. அன்று இரவு நடை சாத்தப்பட்டது.

இந்த நிலையில், விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று  திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். இன்றைய தினம் பக்தர்களுக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

நாளை வழக்கம் போல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும். 14-ந்தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் கனி காணுதல் நடைபெறும். தொடர்ந்து 18-ந்தேதி வரை சித்திரை மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சபரிமலையில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் 18-ந்தேதி வரை தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து பக்தர்களுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பாசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நெகட்டிவ் மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களுடன் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 
 



Leave a Comment