கும்பாபிஷேகம் கோடிப் புண்ணியம்


 

 

 நாம் வணங்கும் தெய்வத் திருவுருவச்  சிலைகள் கற்களால்  ஆனது என்றாலும் , அவற்றிற்குள்  தெய்வ சக்தியை  ஊடுருவ செய்வதற்கு கடைப்பிடிக்கப்படும் பல சாஸ்திர சம்பிரதாயங்களுள்   ஒன்றுதான் கும்பாபிஷேகம்.

 

கல்லினால் திருவுருவத்தை அமைத்துத் தானிய வாசம், ஜலவாசம் வைத்து அந்த இறைவனின் மந்திரங்களை எழுதி மந்திர யந்திரத்தை 48 நாள் வழிபாட்டில் வைப்பார்கள். வேத சிவாகம விர்ப்பனர்கள்  யாகசாலை அமைத்து இனிய மந்திரங்களை ஓதி , யாக அக்னி வளர்த்து வரும் ஜோதியைக் கும்பத்தில் சேர்ப்பார்கள். ஒருங்கிணையப் பெற்ற அந்த மந்திரங்களை  ஒன்றாகக் குவியச் செய்து, இறைவனின் கருவறையில் அதன் சக்தியை ஏற்றுவதற்கு பெயர் தான்  குடமுழுக்கு .  வைணவ சம்பிரதாயத்தில்  சம்ப்ரோட்சணம் என்றும்; சைவத்தில் கும்பாபிஷேகம் என்றும் சொல்லப்படுகிறது .

 

ஒரு அந்தணர், தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அவர் நெடுநேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர், ஐயா... என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்டார். சிவ பூஜைக்கு, வாழைப்பழம் வாங்குவதற்காக, ஓரணா வைத்திருந்தேன். அது கீழே விழுந்து விட்டது. அதைத்தேடிக் கொண்டிருக்கிறேன்... என்றார். பரவாயில்லை பூஜைக்கும் நாழியாகிவிட்டது;நான் ஓரணா தருகிறேன். வாழைப்பழம் வாங்கி, பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்...என்று சொல்லி, ஓரணாவைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அவரும், ஓரணாவுக்கு வாழைப்பழம் வாங்கி வைத்து,பூஜையை முடித்தார்.

 

தேவேந்திரன், ஒரு நாள், தர்மராஜன் சபைக்கு வந்தான். எமதர்மன்,தேவேந்திரனை உபசரித்து வரவேற்றான். சபையில், ஒரு ரத்ன சிம்மாசனமும்,ஒரு தங்கத்தாலான சிம்மாசனமும், போடப்பட்டிருந்தது. அந்த சமயம்,இரண்டு தேவ விமானங்கள் வந்தன. எமதர்மன், ஓடிப்போய் விமானத்திலிருந்தவரை வரவேற்று உபசரித்தான். ஒவ்வொரு விமானத்திலிருந்தும், ஒவ்வொரு புண்ணிய புருஷர் இறங்கினர். எமதர்மன்,ஒருவரை, ரத்ன சிம்மாசனத்திலும், மற்றொருவரை, தங்க சிம்மாசனத்திலும்,உட்கார வைத்தான்.

 

புண்ணிய புருஷர்களான நீங்கள் இங்கு வந்தது என் பாக்யம்... என்று சொல்லி, அவர்களை, எமதர்மன் உபசரித்ததை பார்த்த தேவேந்திரன், எமதர்மனைப் பார்த்து, இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்! அதிலும், ஒருவரை ரத்ன சிம்மாசனத்திலும், ஒருவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்திருக்கிறாயே... என்று கேட்டான்.அதற்கு எமதர்மன், இதோ தங்க சிம்மாசனத்தில் இருப்பவர், தினமும், சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர். அந்த புண்ணியத்தினால், இவரை தங்க சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறேன்.

 

மற்றொருவரோ சிவ பூஜைக்கு உதவி செய்தவர். ஒரு நாள், சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க வைத்திருந்த காசை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் போது, இந்த ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவர், அவருக்கு காசு கொடுத்து வாழைப்பழம் வாங்க,உதவி செய்தவர். அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்... என்றான் எமதர்மன். தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு, சிவபூஜை செய்தவரை விட, சிவ பூஜைக்கு உதவி செய்தவருக்குத்தான் அதிக புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்... என்று சொல்லி, எமதர்மனிடம் விடைபெற்று, தேவலோகம் சென்றான்.

 

நம்முடைய முன்னோர்கள் நமக்கு பல விஷயங்களை கதைகளின் வாயிலாகத்தான் நமக்கு சொல்லியிருக்கிறார்கள் . இந்த கதை நமக்கு தரும் பாடமானது ,

ஒரு சிவபூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவரை விட, அதற்கு உதவி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகம்.

நம்மில் எத்தனையோ பேர் ஊரில் இருக்கும் நமது குலதெய்வ கோவில் கும்பாபிஷேகமோ அல்லது  நமக்கு தெரிந்த கோவில் கும்பாபிஷேகமோ , நம்மால் நேரில் செல்ல முடியா விட்டாலும்  நம் வீட்டில் உள்ளவர்களுக்கு பணத்தை அனுப்பி , வைப்போம் . எப்படியாவது அந்த புண்ணியக் காரியத்தில் பங்கேற்க வேண்டும் என்று ஆசைப்படுவோம் . அத்தகைய  புண்ணியமிக்க கும்பாபிஷேகத்தைப் பற்றி நாம் அறிந்தது கையளவு . நாம் அறியாத உண்மைகள் கடலளவு .

அத்தகைய  சில தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம் .

 

கும்பாபிஷேகத்தில்  வகைகள் நான்காக அறியப்படுகிறது .

 

ஆவர்த்தம்  எனப்படும்  வகையில் ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் தெய்வ விக்கிரகங்களுக்கு  கும்பாபிஷேகம் செய்யப் படுகிறது .

 

அனாவர்த்தம்  எனப்படுவது ,இந்துக் கோவில்களில் காணப்படும் மூன்று மற்றும் ஆறுகால பூஜை முறைகள்  இல்லாமலும் இயற்கை சீற்றம் காரணமாக ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்த  கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

 

புனராவர்த்தம்  முறை கும்பாபிஷேகமாவது , ஒரு கோவிலின் கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால், அதற்கு  பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

 

 அந்தரிதம்  முறையில் ,கோயிலுள் ஏதேனும்  அசம்பாவிதமோ அல்லது அதன் புனிதத்திற்கு  பங்கம் விளைந்திடின் அதன் பொருட்டு சந்தி செய்யப்படும் .

 

இனி அடுத்ததாக கும்பாபிஷேக வைபவத்தின் போது விக்ரகப் பிரதிஷ்டையில் பின்பற்றப்படும் முக்கியமான வழிமுறைகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம் .

 இத்தகைய தெய்வப் பணியை திறம்பட செய்ய தகுதியுள்ள ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து , இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தலை அனுஞை  அல்லது அனுமதி வாங்குதல்எனப் படுகிறது .

அடுத்ததாக  சங்கல்பம்  . அதாவது இறைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.

 

இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்கு தேவையான பூஜா பாத்திரங்களை சுத்தம் செய்தல் பொருட்டு அந்தந்த பாத்திரங்களுக்கு உரிய தேவதைகளை பூஜை செய்தலே  பாத்திர பூஜை

 

நம் இந்து மத வழக்கப்படி , எந்த செயலை தொடங்கும் முன்னர் விக்கினங்களை நீக்க விநாயகரை வணங்குதல் மரபு . ஆதலால்  – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடும் கணபதி பூஜை.

 

வருண பூஜை யினால் அவ்விடம்சுத்தம் செய்யப் பட வருண பகவானையும் , சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

 

பஞ்ச கவ்யம் –தெய்வப் பணி செய்வதற்கு முன் நம்முடைய ஆன்மாவை  சுத்தம் செய்தல் அவசியமாகிறது . ஆகவே ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால்,தயிர்,நெய்,பசுநீர்,பசுசானம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை தான் பஞ்ச கவ்யம் .

 

வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற , செயலுக்கும் , அச் செயலை செய்பவர்க்கும் எந்த வித இடையூறும் வராதபடி காக்கச் செய்யப்படுவது .

 

பிரவேச பலி – நல்லது நடக்கும் இடத்ஹில் தீய சக்திகள் நுழையா வண்ணம் ,எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செய்தல்  

 

 மிருத்சங்கிரஹணம் – ஆலயம் நிர்மாணம் செய்ய பூமா தேவியை கஷ்ட படுத்தியதற்கு  பிராயச்சித்தமாக ,  பூமா தேவியை மகிழ்விக்க  அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில்ருந்து மண் எடுத்து அபிஷேகம் செய்தல்.

 

மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை வளர செய்தல் .  12சூர்யர்களான  வைகர்த்தன்,விவஸ்வதன்,மார்த்தாண்டன்,பாஸ்கரன்,ரவி,லோகபிரகாசன்,லோகசாட்சி,திரிவிக்ரமன்,ஆதித்யன்,சூரியன்,அம்சுமாலி,திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதலே அங்குரார்ப்பணம் எனப்படுவது .

 

இவ்வளவு கிரியைகளையும் செய்யும்  ஆசாரியனுக்கும் எவ்வித இடையூறுகள் வராதபடிக் காத்தற் பொருட்டு அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு கட்டுதலே ரக்ஷாபந்தனம் எனப்படுகிறது .

 

கும்பலங்காரம் யாதெனில்  கும்பங்களை அதாவது  கலசங்களை இறைவன் உடம்பாகவே  பாவித்து அலங்காரம் செய்தல்.

 

விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தலே சக்தி அழைத்தல் அல்லது கலா கர்ஷ்ணம் எனப்படுகிறது .

 

யாகசாலா பிரவேசம்  என்பது கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

 

சூர்ய,சோம பூஜையின் போது ,  யாகசாலையில் சூர்ய சந்திரனை வழிபடுகிறோம் .

 

மண்டப பூஜை யின் மூலமாக , அமைக்க பட்டிருக்கும் யாகசாலைக்கு  பூஜை செய்யப்படுகிறது .

 

 பிம்ப சுத்தியால்   விக்ரகங்கள் மந்திர பூர்வமாக சுத்தம் செய்யப்படுகிறது .

 

யாகசாலை இடத்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி,வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்தி இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இனைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தலே நாடி சந்தானம்   எனப்படுகிறது .

 

விசேஷ சந்தி  எனப்படுவது 36 தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது,உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கு அர்க்யம் தருவது.

 

இந்த மனித உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தலே பூத சுத்தி

 

36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்குகொண்டு சேர்த்தலைஸ்பர்ஷாஹுதி என சொல்லப்படுகிறது .

 

 அஷ்ட பந்தனம்  என்பது எட்டு பொருள்களால் ஆன  மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பார்கள் .

 

பூர்ணாஹுதி  மூலம் யாகம் பூர்த்தி செய்யப்படுகிறது .

 

கும்பாபிஷேகம் /குடமுழுக்கு  எனப்படுவது யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.

 

 கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல் மஹாபிஷேகம் .

 

 இறுதியாக , 48நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை முழு சக்தியுடன் இருக்கச் செய்வதுமண்டலாபிஷேகம் ஆகும் .

 

இனிவரும் நாட்களில் நம் ஊரிலோ , அல்லது குறைந்தபட்சம் நம் தெருவில் இருக்கும் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்ததால் , அந்த புனித வைபவத்தில் கலந்துக் கொண்டு இறையருள் பெறுவோமாக .

 

 

 



Leave a Comment