எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைக்கும் சரபேஸ்வரர் .... 


ஹிரண்யனை வதம் செய்வதற்காக ஸ்ரீநரஸிம்ஹர் அவதாரம் எடுத்த ஸ்ரீமகாவிஷ்ணு , வதம் முடிந்த பின்னரும் தன்னுடைய உக்ரத்தை அடக்க முடியாமல் இருக்க அவன் மார்பில் வாசம் செய்யும் அந்த “ஸ்ரீமஹாலட்சுமி” கூட நரஸிம்ஹரின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். 

அண்ட சராசரங்களும் நடுங்கின அவரின் கோபத்தில். செய்வதறியாது திகைத்த தேவாதி தேவர்கள் சம்ஹார மூர்த்தியான சிவபெருமானைச் சரணடைய அவர் தான் ஒருவர் தான் இவரின் கோபத்தை சாந்திப்படுத்த வல்லவர் என்று கைலாயம் சென்றார்கள்.

பின்னர் சிவபெருமான் சரபரின் தோற்றத்தில் உருமாறி ஸ்ரீ நரஸிம்ஹரின் கோபம் தனித்தார் என்கிறது காளிகா புராணம். இந்த சரபரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது.  மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபர். 

தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார். 

சரபரின் ஹுங்கார சப்தத்தில் நரஸிம்ஹரின் கோபாக்னி அடங்கியதாய்ச் புராணங்கள் கூறுகின்றன. சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் “பட்சிகளின் அரசன்” என்றும் “சாலுவேஸ்வரன்” என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர். 

இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி.  இதில் தேவி பிரத்யங்கிரா சரபரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் அதி பயங்கர உக்கிரத்தை அடக்கியதாகவும் சில புராணங்கள் கூறுகின்றன. 

காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மர் வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மரின் கோபத்தை சாந்தப்படுத்தியதாக கூறுகிறது. 

லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது. எப்படி நரஸிம்ஹரின் சக்தி எப்படி அளவிட முடியாததோ அதேபோல் சரபேஸ்வரரின் சக்தியும் அளவிடவே முடியாதது.  சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள்.

இவரைக் “கலியுக வரதன்” என்றும் குறிப்பிடுகிறார்கள். “நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி” என்றும் குறிப்பிடுகின்றனர்.  தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர்.  பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபரின் சிற்பங்கள் காணப் படுகிறது. இதில் திருபுவனம் கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. 
 



Leave a Comment