ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான புண்ணியத் தலம்


 

அருள்மிகு லலிதாம்பிகை ஆலயம் , திருமீயச்சூர், திருவாரூர் மாவட்டம்

 

பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அவர்கள் தங்களை காக்க வேண்டி அன்னை பராசக்தியை வேண்டினார்கள். வேண்டுதலை ஏற்ற பராசக்தி, அசுரனை வதம் செய்வதற்காக ஒரு வேள்வி குண்டத்திலிருந்து ஸ்ரீசக்ர ரதத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அசுரனுடன் போர் செய்து அவனை அழித்தாள்.  உக்ரமாக இருந்த அவளைச் சமாதானம் செய்யும் பொறுப்பை ஏற்ற சிவன் , உலக உயிர்களின் நன்மை கருதி அவளை கோபம் தணியும்படியும், இதற்காக “மனோன்மணி’ என்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார் . அம்பிகையும் இத்தலம் வந்து தவம் செய்து சாந்தமானாள். தன் முகத்திலிருந்து, “வசின்யாதி வாக் தேவதைகள்’ என்பவர்களை வரவழைத்து தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே “ஸ்ரீ மாத்ரே’ என துவங்கும் ‘லலிதா சகஸ்ரநாமம்’ என்று தல வரலாறு கூறுகிறது .

ஆன்மீக அன்பர்களால் தாய் லலிதாம்பிகையை ஸ்மரித்து மெய்யுருக பாடப்படும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான தலம் தான் திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்தில் இருந்து ஒரு கி.மீ தூரத்தில் உள்ளது திருமீயச்சூர்.

 

காஷ்யபருக்கு வினதை மற்றும் கர்த்துரு என்று இரு மனைவியர் இருந்தனர். நீண்ட நாள் குழந்தை பேறு இல்லாத இவர்கள் குழந்தை வரம் வேண்டி சிவனை பெருமானை  வழிபட்டனர். அவர்கள் இருவருக்கும் ஒரு முட்டையைக் கொடுத்த சிவன், ஓராண்டு காலம் பாதுகாக்கும்படி சொன்னார். வினதையிடம் இருந்த முட்டையில் இருந்து  கருடன் பிறந்து, அது மகாவிஷ்ணுவின் வாகனமாகும் தகுதியைப் பெற்றது.கர்த்துருவின் முட்டையில் இருந்து ஏதும் வராததால், அவசரப்பட்ட அவள் அந்த முட்டையை உடைத்துப் பார்க்க அதனுள் இருந்து குறை உடலுடன் ஒரு குழந்தை பிறந்தது . தன் தவறுக்கும் வருந்திய  அவள் மிகவும் வருத்தப்பட்டு சிவனிடம் மன்னிப்பு கோரினாள்.

சிவனும் மனமிரங்கி  அவளை மன்னித்து, அந்தக் குழந்தை சூரியனின் ஏழு குதிரை கொண்ட தேரை ஓட்டும் சாரதியாவான் என்றும், சூரிய உதயம் அவனது பெயரால் “அருணோதயம்’ என்று வழங்கப்படும் என்றும் அருள் செய்தார். சிறந்த சிவபக்தனான  அருணன் சிவதரிசனம் வேண்டி தவமிருந்தான். இதையறிந்த சூரியன் உடலில் குறைபாடுள்ள நீ எப்படி கைலாயம் செல்ல முடியும் என கேலி செய்தான். இருந்தாலும் விடாமுயற்சியால் சிவனை குறித்து தவம் செய்து,  சிவனின் தரிசனத்தைப் பெற்றான் அருணன். மேலும் அவனைக் கேலி செய்த சூரியனை ஒளி யிழக்கும்படி சபித்து விட்டார் சிவன். பதறிப்போன சூரியன், பார்வதி பரமேஸ்வரனை யானையில் அமர வைத்து வழிபாடு செய்து, மீண்டும் ஒளி பெற்றான். இந்த சிவனே இங்கு ‘மேகநாதன்’ என்ற பெயரில் அருளுகிறார் என்று சொல்லப்படுகிறது . சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டு வந்ததின் அடிப்டையில் இத்தலம் “மீயச்சூர்’ என அழைக்கப்படுகிறது.

சனீஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரும்  அவதரித்ததாக சொல்லப்படுவதால் , திருமீயச்சூர் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது ..        

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள்.. வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது என்பதால் இவளுக்கு அதிக சக்தி உண்டு என்கிறார்கள் பலனடைந்தவர்கள் .

 

கோவில் சிறப்பம்சங்கள்

 

மதுரையில் மீனாட்சி மற்றும்  ஸ்ரீவில்லிப்புத்தூர்  ஆண்டாளுக்கு அடுத்து  இங்குள்ள துர்க்கையின் கையில் கிளி இருக்கிறது.

லலிதாம்பிகையிடம் உபதேசம் பெற்ற ஹயக்கிரீவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமையைப் பற்றி விவரித்தார். இதைக்கேட்ட அகத்தியர், “லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன் கிடைக்கும் ?” என கேட்டதற்கு , ஹயக்கிரீவர்,  “பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும்,” என்றார்.

அகத்தியரும் தன் மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். அப்போது அகத்தியர், “லலிதா நவரத்தின மாலை’ என்னும் ஸ்தோத்திரம் பாடியதாக சொல்லப்படுகிறது .

 

சூரியனாரின் சாபம் போக்கிய தலம் என்பதால் இங்கே நவக்கிரகங்களுக்குச் சந்நிதி இல்லை. மாறாக, 12 ராசிகளுக்கு உரிய 12 நாகர்களும் உள்ளனர்.

 சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.

மூலவர் மேகநாத சுவாமிக்கு அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்கின்றனர்.

 இங்குள்ள கல்யாணசுந்தரரை மணமாகாத பெண்கள் வழிபட்டு இறைவனுக்கு மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கூடும் என்பது நம்பிக்கை.

ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பாக கருதப்படுகிறது .

பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. இதற்கும் ஒரு புராண கதை சொல்லப்படுகிறத்து .

சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், இத்தல இறைவனை நீண்ட ஆயுளைத்தரக்கூடிய 1008 சங்குகளால் அபிஷேகம் செய்து, எமலோகத்தின் தல விருட்சமும் சக்தி வாய்ந்ததுமான பிரண்டை கலந்த அன்னத்தை மேகநாத சுவாமிக்கு நைவேத்யம் செய்து வழிபட்டான் என்கிறார்கள்

அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் தலமான திருமீயச்சூர்அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய முக்கியத் தலமாகும் .

 



Leave a Comment