பிள்ளையார் சுழி போட்டு செயல் அதனை தொடங்கு?
எதை எழுத ஆரம்பித்தாலும் முதலிலே பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம். எழுதுவது மட்டுமில்லாமல் எந்தக் காரியமானாலும் ஆரம்பிக்கிற போது அது விக்நமில்லாமல் பூர்த்தியாவதற்கு மஹாகணபதியைக் கொண்டு வந்துதான் ஆகணும். அவரைக் ஸ்மரிக்காமல் எந்தக் காரியமுமே இல்லையானாலும், இந்த எழுத்துக் காரியத்தில் அவரை ஸ்மரிக்கிறோம். பின்னாடி நாம் எழுதுகிற விஷயம் 'சுழித்து'ப் போகாமலிருப்பதற்காக முன்னாடி பிள்ளையார் சுழி போட்டு விடுகிறோம்.
சுழி என்பது வளைசல்; 'வக்ரம்' என்பார்கள். பிள்ளையாரின் தும்பிக்கை நுனி வளைந்து சுருட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் 'வக்ரதுண்டர்'என்றே அவருக்கு ஒரு பேர். பிள்ளையார் சுழி போடுவதில் பாதியாக இருக்கிற வளைசல் பூர்ணமாகிவிட்டால் முழு வட்டம். பூலோகமும், பல லோகங்களும், நக்ஷத்ர மண்டலங்கள் அடங்கியுள்ள பிரம்மாண்டமும் எல்லாமே வட்டமானவைதான்.
வளைசலான கொம்போடு ஆரம்பிக்கிற பிள்ளையார் சுழி, கொஞ்சம்கூட வளையாத நேர்கோட்டோடு முடிகிறது. பிள்ளையார் பூர்ணம், சூன்யம் இரண்மாக ஆனாற்போலவே வக்ரமானதும் அவர்தான், ஆர்ஜவமானதும் (நேரானதும்) அவர்தான் என்பது தாத்பரியம். 'உ' என்பது ப்ரணவத்தின் இரண்டாவதான நடு அக்ஷரம். அ-உ-ம என்ற மூன்றும் சேர்ந்தே 'ஓம்'காரமான ப்ரணவம். 'அ'என்பது ஸ்ருஷ்டி; பிரம்மா. உ என்பது பரிபாலனம்; விஷ்ணு. ம ஸம்ஹாரம்; ஈஸ்வரன். த்ரிமூர்த்திகளும் தோன்றியது ஏக பராசக்தியால்தான். அதனால் அவள் ப்ரணவ ஸ்வரூபிணி.
அ-உ-மவில் ஹ்ருதயம் மாதிரி நடுவேயிருப்பது 'உ'அதுவே கருணாமயமாகக் காப்பாற்றுகிற தேவீ ப்ரணவத்தில் ப்ரதம ஸ்தானத்திலிருக்கிறது. ப்ரணவ ஸ்வரூபப் பிள்ளையார் 'அ'வும் 'ம'வும் சேராமல் இந்த 'உ'காரமாக மட்டுமே பிள்ளையார் சுழியில் இருப்பதைப் பார்க்கும்போது ஒன்று தோன்றுகிறது. அதாவது அவர் ''தாயைப் போலப் பிள்ளை''மட்டுமில்லை;தாயாருக்கும் ஒரு படி மேலே என்று தோன்றுகிறது. எப்படி? அவளும் ரக்ஷிக்கிற 'உ'வுக்குப் பின்னாடியாவது ஸம்ஹார 'ம' ஸ்ருஷ்டி 'அ' இவற்றையும் வைத்தக் கொண்டிருக்கிறாள். ஆனால் பிள்ளையோ எப்போது பார்த்தாலும் எல்லாரையும் ரக்ஷிப்பது தவிர வேறு ஜோலியே வைத்துக்கொள்ளாத பூர்ண கருணாமூர்த்தியாக இருந்துகொண்டு 'உ'ஒன்றோடேயே நின்றுவிடுகிறார்.
நாம் போடுகிற பிள்ளையார் சுழி ஒரு சின்ன எழுத்தின் மூலம் விக்நேஸ்வரரை ஸங்கேதமாகத்தான் காட்டுகிறது; வெளிப்படையாகப் பிள்ளையார் பேரைத் தெரிவிக்கவில்லை. ஆனால் பழங்காலச் சுவடிகளைப் பார்த்தால் அவற்றின் ஆரம்பத்தில் வெளிப்படையாகவே '' ஸ்ரீ கணாதிபதயேநம : '' என்று போட்டிருக்கும்.
அவரைச் சொல்லும்போதும் விநாயகர், விக்னேஸ்வரர், வக்ரதுண்டர், ஹேரம்பர் முதலான மற்ற எந்தப் பெயரையும் போடாமல் "கணாதிபதி" என்றே எந்தச் சுவடியிலும் போட்டிருப்பது ஏன் என்று யோசித்தேன். வித்வான்களுடன் டிஸ்கஸ் பண்ணினதில் ஒரு மாதிரி புரிந்தது. கண என்ற வார்த்தைக்கு உள்ளே அநேக அர்த்தங்களில் பாஷா ஸம்பந்தமாகவே ஒன்று இருக்கிறது. ஒரே வித்க்குக் கீழே வருகிற எல்லா தாதுக்கள் அல்லது வார்த்தைகளை ஒரு கணம் என்று தொகுத்து வியாகரணத்தில் கொடுத்திருக்கிறது. இந்த கணங்களுக்கெல்லாம் அதிபதிதான் கணாதிபதி. பரமேஸ்வரனுடைய பூத கணங்களுக்குத் தலைவரானதால் கணபதி, கணாதிபதி, கணேசர், கணநாதர் என்றெல்லாம் அவருக்குப் பெயர் இருப்பதோடு, பத ஸமூஹங்களுக்கெல்லாம் தலைவர் என்ற அர்த்தத்திலும் இப்படிப் பெயர் பெற்றிருப்பதால்தான் கணாதிபதயே நம : என்று போட்டு எழுத ஆரம்பித்துருக்கிறார்கள்.
விநாயகர் ப்ரணவ ஸ்வரூபம் என்றால், அந்த ப்ரணவம்தானே ஸகல சப்தங்களுக்கும் வார்த்தைகளுக்கும் ஆதாரம்? அதனால் அவரைப் பத ஸமூஹங்களின் அதிபதியாகக் கொண்டு, எழுத ஆரம்பிக்கும்போது முதலில் நமஸ்காரம் தெரிவிப்பது பொருத்தந்தான்.
பிள்ளையாருக்கே கொஞ்சம் புதிராக வியாஸர் பண்ணின ஸ்லோகங்களுக்குத்தான் ''பாரத குட்டு''என்று பேர். ஆனாலும் அவர் ஞான ஸ்வரூபமானதால் அடுத்த க்ஷணமே அவருக்கு ''குட்டு உடைஞ்சுடும்!'' மறுபடி எழுத ஆரம்பித்துவிடுவார்*. அப்படிப்பட்டவரை ஸ்மரித்து விட்டு எழுதத் தொடங்கினால், எந்தச் சிக்கலான விஷயமும் நொடியில் தெளிவாகி, மேற்கொண்டு எழுதிக் கொண்டு போக முடியும் என்ற நம்பிக்கை 'ஸ்ரீ கணாதிபதயே நம:' என்று ஆரம்பித்தால் உண்டாகும். பிள்ளையார் சுழியும் இதை மனிதில் கொண்டே, ஆரம்பத்தில் போடும் வழக்கம் ஏற்பட்டது.
Leave a Comment