பங்குனி உத்திர திருநாளில் செய்யக்கூடிய சுபநிகழ்ச்சிகள் 


பங்குனி உத்திர நாளில் இந்திய  தேசத்திலுள்ள புனித தீர்த்தங்கள் எல்லாம் திருப்பதியிலுள்ள எட்டு புனித தீர்த்தங்களில் ஒன்றான  தும்புரு தீர்த்தத்தில் இணைவதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.  இந்த நாளில் வெங்கடாசலபதியை சேவிப்பதும், புனித நீராடுவதும் சிறப்பானவை. அதுமட்டுமா!  வைணவ தென்கலைப் பிரிவின் மஹா ஆசார்யரான ஸ்ரீராமாநுஜர் பெருமாளைத் தொழுது சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம் என்ற மூன்று வசனக் கவிதைகளைப் பாடியதால் 'உடையவர்' என்ற பதவியை திருமாலிடமிருந்து பெற்றார். இந்தப் பதவியை ஸ்ரீராமாநுஜர் பெற்ற நாள் பங்குனி உத்திரம். ஸ்ரீரங்கம் ஆலயத்தின் 'சேர்த்தி வைபவம்' நடைபெறுவதும் இந்த நாளில்தான்.  

ரங்கநாத பெருமாள் - ரங்கநாயகி தாயார் ஊடல் கொண்டு சண்டையிட்டுக்கொள்வதும், பின்னர் இணைவதும் இந்த நாளின் விசேஷம். இந்த வைபவத்தைக் காணும் அன்பர்கள், களத்திர தோஷத்திலிருந்து விடுபட்டு திருமண வரம் பெறுவார்கள் என்பது ஐதீகம். ஸ்ரீரங்கத்தைப்போலவே இந்த நாளில் காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், மலையாள நாச்சியார் மற்றும் பெருந்தேவித் தாயார் சமேதராக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார். இந்த வைபவம் பங்குனி உத்திரத்தன்று மட்டும்தான் நடைபெறுகிறது. 

பூ முடித்தல், தாலிக்குப் பொன்னுருக்குதல், திருமண ஓலை எழுதுதல்,  சீமந்தம், புதிய பொருள்கள் வாங்குதல், புதிய சிகிச்சை  மேற்கொள்ளுதல், புதிய கோயிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்தல், செடி நடுதல், வணிகம் தொடங்குதல்,  வேலையில் சேருதல், புதிய இடத்துக்கு மாறுதல், நீர் நிலைகளை உருவாக்குதல், போர்ப்பயிற்சி மேற்கொள்ளுதல் போன்ற நற்காரியங்கள் செய்வதற்கு உகந்த நாள் பங்குனி உத்திரத் திருநாள். எண்ணற்ற பல மங்களகரமான, தெய்விக நிகழ்வுகள் நடைபெற்ற பங்குனி உத்திரத் திருநாளில் நாமும் இறைவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.



Leave a Comment