மும்மூர்த்திகளையும் தன்னிடத்தே கொண்டுள்ள திருச்சி உத்தமர் கோயில்
மும்மூர்த்திகளையும் தன்னிடத்தே கொண்டுள்ள திருத்தலம் திருச்சி உத்தமர் கோயில் வரலாறு - விளக்கும் எளிய கதை. தம்மிடம் மிக்க பக்தி செலுத்தி வரும் பிரம்மாவைச் சோதிக்க விஷ்ணு கடம்ப மரமாக உருவெடுத்து இங்கு வந்ததாகவும், அவ்வுருவிலும் பிரம்மா அவரை அறிந்து கொண்டு தொடர்ந்து வழிபட்டமையால், மனம் மகிழ்ந்த விஷ்ணு அவருக்கு இங்கு தனி வழிபாட்டு சந்நிதி கொள்ளுமாறு செய்ததாகவும் கூறுவர்.
இந்தியாவில் மிகச் சில இடங்களிலேயே பிரம்மா மற்றும் சரஸ்வதி ஆகியோருக்கு தனிக் கோயில்களோ, சந்நதிகளோ உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில், சிவன் பிச்சாடனாராக உருக்கொண்டமைக்கும் ஒரு வரலாறு உள்ளது. தன்னைப் போல் பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் உள்ளதைச் சகிக்காத சிவபெருமான் பிரம்மனுடைய ஒரு தலையைக் கிள்ளி எறிந்ததாகவும், பிரம்ம ஹத்தி தோஷம் வந்ததால், சிவனின் கையிலிருந்த கபாலம் அவரது கையோடு ஒட்டிக் கொண்டதாகவும், சிவன் கையில் ஒட்டிக் கொண்ட கபாலத்தில் மகாலட்சுமியைக் கொண்டு பிச்சையிடச் செய்ததால் அச்சாபம் நீங்கியதாகவும் கூறுவதுண்டு.
மும்மூர்த்திகளையும் தன்னிடத்தே கொண்டுள்ள இத்திருத்தலம் பல சிறப்புப் பெயர்களையும் கொண்டுள்ளது. கடம்ப மரங்கள் அதிகமிருந்தமையால், கடம்பனூர் என வழங்கப்பெற்று பிறகு அது கரம்பனூர் எனவும், திருக்கரம்பனூர் எனவும் ஆனது என்பர். இதுவே வடமொழியில் நீப ஷேத்திரம் என்றானது.
புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமானதால், உத்தமர் கோயில் எனப் புகழ் பெற்றது. சிவபெருமான் திருவோடேந்தி பிட்சை கேட்ட திருக்கோலத்தில் எழுந்தருளியமையால், பிட்சாடனர் கோயில் எனலாயிற்று. மும்மூர்த்திகளும் காட்சியளிக்கும் காரணத்தால் மும்மூர்த்தி ஷேத்திரம் எனவும் இது வழங்கப்படுகிறது.
உத்தமர் கோயில் திருச்சி கோட்டை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர்கள் தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ள, மும்மூர்த்திகளும் குடி கொண்ட, 108 வைணவத் திருத்தலங்களுள் சோழ நாட்டு மூன்றாவது திருத்தலம்.
Leave a Comment