எமனை உயிர்ப்பித்த ஞீலிவனேஸ்வரர்
திருப்பபைஞ்ஞீலி அற்புதங்கள்
ஞீலி என்பது கல்வாழையில் ஒரு வகை. பைஞ்ஞீலி என்றால் பசுமையான வாழை என்று பொருள் . பசுமையான ஞீலி வாழையை தல விருட்சமாக கொண்டுள்ளதால் இத்தலத்திற்கு திருப்பபைஞ்ஞீலி என்று பெயர் .
தேவாரம் பாடிய அப்பர் சுவாமிகள் , திருச்சி மலைக்கோயில்,திருவானைக்கோயில், திருவெறும்பூர், திருப்பராய்த்துறை ஆகிய தலங்களில் தரிசனம் செய்து முடித்து விட்டு நடைப்பயணமாக திருப்பைஞ்ஞீலிக்கு வந்தார். கடும் வெயிலில் நடந்து வந்த களைப்பு, பசி மயக்கம் என மிகுந்த களைப்புடன் அப்பர் இருந்த நிலையில் , எதிரில் நடந்து வந்த ஒருவர், ” அய்யா , யார் நீங்கள் ?எங்கு செல்கிறீர்கள்? களைப்புடன் இருக்கிறீர்களே?” என்று அன்பு பொங்க கேட்டார். அப்பர், “ நான் திருப்பைஞ்ஞீலி செல்கிறேன். அங்குள்ள சிவ பெருமானை தரிசிக்க வேண்டியே இந்த பயணம் .” என பதிலளித்தார். உடனே அப்பரை கேள்வி எழுப்பியவர், ” நான் சிவபெருமானை பூஜிக்கும் அந்தணர். என்னிடம் கட்டு சாதம் உள்ளது. இதை உண்டு , தாகம் தீர்த்து செல்லலாம்.நானே அழைத்து செல்கிறேன்” என்றார். அப்பர் களைப்பு தீரப் பசியாறிய பின்னர், அந்த அந்தணர் , அப்பரை, திருப்பைஞ்ஞீலி திருக்கோயிலுக்கு அழைத்து சென்றார். அதுவரை அப்பருடன் பேசிக்கொண்டு வந்த அந்தணர் அங்கு திடீரென மறைந்து விட்டார்.ஆச்சர்யப்பட்டு நின்ற அப்பருக்கு , ரிஷப வாகனத்தில் சிவபெருமான் , பார்வதி தேவியுடன் சேர்ந்து காட்சியளித்தார். தன்னை பசியாற்றி, இறைவன் கொடுத்த தரிசனத்தால் உள்ளம் மகிழ்ந்த அப்பர் , அங்கு திருக்கோயில் கொண்டிருக்கும் ஞீலிவனேஸ்வரரை போற்றிப் பாடினார்.
திருச்சியை அடுத்த மணச்சநல்லூருக்கு வடமேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் திருப்பைஞ்ஞீலி ஸ்ரீலிவனேஸ்வரர் திருக்கோயில். தன்னை நாடி வந்தவர்களுக்கு அருள்பாலிக்கும் அற்புதமான தலம் திருப்பைஞ்ஞீலி திருத்தலம். இங்கு விசாலாட்சி அம்பிகை சமேதராய் அருள்பாலிக்கிறார் ஞீலிவனேஸ்வரர். பங்குனி, புரட்டாசி மாதங்களில் மூன்று நாட்கள் சுயம்பு லிங்கமான சுவாமி மீது சூரிய ஒளிக்கதிர் விழுகிறது. வசிஷ்ட முனிவருக்கு, எம்பெருமான் நடனக் காட்சியை காட்டி அருளிய தலம் இது என்பதால் மேலைச் சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது .
வாயுவுக்கும், ஆதிசேசனுக்கும், யார் பெரியவர் என்று ஏற்பட்ட போட்டியில் , அதிசேசன் கைலாய மலையை சுற்றி வளைத்துக் கைலாயத்தை தளர்த்த சண்ட மாருதத்தை உண்டு பண்ணினார். கடுமையாக வீசிய சண்ட மாருதத்தால் கைலாயத்திலிருந்து எட்டு சிகரங்கள் பெயர்ந்து விழுந்தன.
இவற்றுள் சுவேதகிரி என்பதே திருப்பைஞ்ஞீலி திருத்தலமாகும் . ஆகவே இது தென்கைலாயம் எனவும் வழங்கப்படுகிறது.
தல புராணம்
பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது திருமணத்திற்கு முன்பு இத்தலம் வந்து அம்பாளின் தரிசனம் வேண்டி தவம் செய்ததாகவும் அவர்களுக்கு அம்பாள் காட்சி தந்து, தகுந்த காலத்தில் நல்ல வரன்கள் அமையப்பெற்று சிறப்புடன் வாழும்படி வரம் தந்ததாகவும் கூறப்படுகிறது . சப்தகன்னிகளின் வேண்டுகோளின்படி அம்பாள் இங்கே எழுந்தருளி, சப்த கன்னிகளிடம்,நீங்கள் வாழை மரத்தின் வடிவில் இருந்து நீண்ட காலத்திற்கு என் தரிசனம் காண்பீர்கள், என்றாள். அதன்படி சப்த கன்னிகள் வாழை மரங்களாக மாறி இங்கேயே தங்கி விட்டனர் . பிற்காலத்தில் வாழை வனத்தின் மத்தியில் அம்பாள் இருந்த இடத்தில் சிவனும் சுயம்புவாக லிங்க வடிவில் எழுந்தருளினார் என்கிறது தல வரலாறு .
மேலும் அப்பருக்கு அந்தணர் உருவில் அமுது பாலித்ததால் சோற்றுடை ஈஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கும் ஆண்டவருக்கு சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திர நாளில் அப்பர் திருநாவுக்கரசருக்கு சோறு படைத்த விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குழந்தை வடிவில் எமன்
பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் பாலகனாக அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். திருக்கடவூர் தலத்தில் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் எமனை சம்ஹாரம் செய்ததால் , உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமி தேவி சிவபெருமானிடம் முறையிட்டாள். மற்ற தேவர்களும் சிவனிடம் எமனை உயிர்ப்பித்து தருமாறு முறையிட , சிவபெருமான் மனமிரங்கி எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்தார் . தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார் . அதனால் இந்த சந்நிதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்தபூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர்.
எமனுக்கு தனி சந்நிதி உள்ளதால் ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை. ஞீலிவனேஸ்வரர் சன்னதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே உள்ள ஒன்பது குழிகளில் தீபம் ஏற்றி அதையே நவக்கிரகங்களாக எண்ணி வணங்குகின்றனர்.
ஆலயத்தின் விசேஷ பரிகார பூஜை
பார்வதி தேவி ஒருமுறை இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள்செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்குப் பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும் என்கிறார்கள் .
இந்த பரிகார பூஜை நேரம் காலை 8.30 முதல் பகல் 12.30 மணி வரையும், மாலையில் 4.30 முதல்5.30 வரையும் நடத்தப்படுகிறது .
கல்லில் உள்ள தேரைக்கும் படியளக்கும் எம்பெருமான் ஈசன் , அப்பருக்கு படியளந்த இந்த அற்புத திருத்தலத்தைப் பார்க்க நம் மனமும் விழைகிறது அல்லவா ?
திருச்சிற்றம்பலம் .......
Leave a Comment