காஞ்சி மஹா பெரியவா அதிசம்.... பக்தருக்கு ஏற்பட்ட அற்புத அனுபவம்.... 


பக்தர் ஒருவர், பெரிய மூங்கில் கூடை நிறைய கொன்றைப்பூக்களைக் கொண்டு வந்து பெரியவா பார்வை படும்படியான இடத்தில் அவருக்கு முன்னால் வைத்தார். பூக்கள் மலர்ந்தது போலவே பெரியவா முகமும் மலர்ந்தது. காரணம் சிவபெருமான் மிகவும் விரும்பி அணியும் மலர் இது. 

எனவே ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரருக்கு அணிவிக்கலாம் என்று எண்ணி, பக்தர் கொண்டு வந்த ஒரு கூடைப் பூவையே பார்த்துக் கொண்டிருந்தார் மகா பெரியவா. அந்த பக்தரைப் பார்த்துப் பெரியவா கேட்டார்; "கூடையிலே வேற என்ன கொண்டு வந்திருக்கே?"

அந்த பக்தர் இடக் கையை மார்பில் கட்டிக் கொண்டு வலக்கையால் வாயைப் பொத்தியபடி, "கொன்றைப்பூ மட்டும்தான் பெரியவா" என்றார் பவ்யமாக. "பார்த்தா அப்படித் தெரியலியே.."-பெரியவா பதிலில் ஒரு பொடி இருந்தது.

பெரியவா இப்படிச் சொன்னதும் அந்த பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை. இதற்கு என்ன பதில் சொல்வதென்று விழித்தார்.காரணம்-அவரைப் பொறுத்தவரை கொன்றைப்பூக்கள் மட்டும்தான் இருந்தன. பெரியவாளே இப்படிச் சந்தேகத்துடன் கேட்கிறார் என்றால் அப்படிக் கூடைக்குள் வேறு என்னதான் இருக்கிறது?

அங்கு கூடி இருந்த ஒட்டுமொத்த பக்தர்கள் கூட்டமும் அடுத்து பெரியவா சொல்லப் போகும் பதிலைத் தெரிந்து கொள்வதற்காக ஆர்வத்துடன் காத்திருந்தது. பெரியவா புன்னகையுடன் அந்த பக்தரைப் பார்த்துத் திருவாய் மலர்ந்தார்.; "ஈஸ்வரனுக்கு ப்ரியமான புஷ்பங்களை மட்டும் நீ கொண்டு வரலே.. அந்த சர்வேஸ்வரனுக்கு ஆபரணமும் கொண்டு வந்திருக்கியே..."

கொன்றைப்பூக்களைக் கொண்டு வந்த பக்தருக்கும் சரி... அங்கே கூடி இருந்த மடத்துச் சிப்பந்திகள் மற்றும் பக்தர்களுக்கும் சரி... எவருக்குமே பெரியவா என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை.

காலியாக இருக்கும் இரண்டு மூங்கில் தட்டுகளை அங்கிருந்து எடுத்துக் கொள்ளச் சொன்னார் பெரியவா. பிறகு, "கூடையில் நீ கொண்டு வந்திருக்கிற பூக்களை இந்தத் தட்டுகள்ல கொட்டு, கொஞ்சம் தள்ளி ஓரமா எடுத்துண்டு போய் கொட்டு.....ஜாக்கிரதை" என்றார்.

பெரியவா எது சொன்னாலும் அதில் ஓர் அர்த்தம் இருக்கும். என்பதை உணர்ந்தவர் ஆயிற்றே அந்த பக்தர்! எனவே, பெரியவா எடுத்துக் கொள்ளச் சொன்ன இரண்டு மூங்கில் தட்டுகளை எடுத்துக் கொண்டு கொன்றைப்பூக்கள் அடங்கிய மூங்கில் கூடையுடன் ஓர் ஓரமாகச் சென்றார். கூடையின் மேல் சுற்றுக் கட்டி இருந்த கயிற்றை அவிழ்த்து அதில் இருக்கும் பூக்களை முதல் தட்டில் வெகு கவனமாகக் கொட்டினார்.

அவ்வளவுதான்....தட்டில் கொட்டியவுடன் அடுத்த விநாடி 'புஸ்'ஸென்று...ஒரு சர்ப்பம் சீறிக் கொண்டு மூங்கில் தட்டில் இருந்து எகிறிக் குதித்து வெளியேறியது. பக்தர் உட்பட ஒரு சில பக்தர்கள் மட்டுமே அந்த சர்ப்பத்தைக் கவனித்தனர். கண நேரத்தில் அனைவரது பார்வையில் இருந்தும் மறைந்து, வந்த சுவடே தெரியாமல் அந்த சர்ப்பம் போயே போயிற்று.

கொன்றைப் பூக்கள் கொண்டு வந்த பக்தருக்கும் சரி.....கூடி இருந்தவர்களுக்கும் சரி..படபடப்பு அடங்க வெகு நேரம் ஆனது. அதை பின் பக்தரைப் பார்த்து, "சந்த்ரமௌலீஸ்வரருக்கு எத்தனை கூடை பூ வேணாலும் கொண்டு வா... ஆபரணம் எல்லாம் வேண்டாம். நாகாபரணம் ஸ்ரீ மடத்துலயே இருக்கு: என்று பெரியவா புன்னகையுடன் சொன்னார்.
 



Leave a Comment