சதுர்த்தி விரதத்தின் மகிமைகள்....


ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.

கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும். துவாபர பாகத்தில் மூஞ்சுறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார்.

வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி. குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை ”சோமாஸ்கந்த வடிவம்” என்றும் இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் இது கஜமுக அனுக்ரஹ வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

 வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார். தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.

அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.

கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள சிவன் கோவிலில் ‘விநாயகர் சபை’ உள்ளது. இத்தகைய சபை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் இல்லை.

நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அருகே கன்னடியன் கால்வாய் ஓரத்தில் மிளகு பிள்ளையார் உள்ளார். இவர் மீது மிளகை அரைத்து பூசி வழிபட்டால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்க விநாயகரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் கோவிலில் ஆதியந்த பிரபு விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான அமைப்பாகும். இவருக்கு நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்த கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.

மும்பையில் கடந்த 2010-ம் ஆண்டு ஒரு லட்சத்து 19 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் வரை வைக்கப்பட் டுள்ளது.

தெருவுக்கு தெரு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதால் மும்பையில் பூசாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
 



Leave a Comment