ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ கொடியேற்றம்


ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் கண்ணப்பன் மலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உலகப் பிரசித்தி பெற்ற வாயு தலமான ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி  19-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று கோவில் அருகில் உள்ள கண்ணப்பர் மலைமீது கண்ணப்பர் கொடியேற்றம் நடைபெற்றது. இரண்டாம் நாளான நாளை காலை 10 மணிக்கு வெள்ளி அம்பாரிகளில் காளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாடவீதிகளில் வீதி உலா நடைபெற உள்ளது. 

அதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்குமேல் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு வெள்ளி அம்பாரிகளில் வீதிஉலா நடக்கிறது. மூன்றாவது நாளான 8-ந் தேதி காலை 10 மணிக்கு சூரியபிரபை வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாடவீதிகளில் வீதிஉலா வருகிறார்கள். 7-வது நாளான 12-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு மிகவும் உகந்ததாக பக்தர்களால் கருதப்படும் லிங்கோத்பவ தரிசனம் நடக்கிறது. 

9-வது நாள் அதிகாலை 3 மணிக்கு ஆதி தம்பதியர்களான சிவன்- பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். 16-ந் தேதி பகல் 12.30 மணிக்கு மகாசிவராத்திரி பிரம்மோற்சவ கொடி இறக்குதல் நடைபெறும். 17-ந் தேதி இரவு 9 மணிக்கு பல்லக்கு சேவையும், 18-ந் தேதி காலை 9 மணிக்கு ஏகாந்த சேவையும், 19-ந் தேதி காலை 10.30 மணி முதல் கோவிலில் சாந்தி அபிஷேகங்கள் நடைபெற உள்ளது இத்துடன் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை காண்பதற்காக ஆந்திரா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஸ்ரீகாளகஸ்தி வந்துள்ளனர்.



Leave a Comment