பிரசாதமாக பக்தர்களுக்கு தங்கம் வழங்கும் ஆச்சரியம்...
கோயிலில் தரிசனம் முடிந்த பின் பிரசாதமாக பொங்கல், புளியோதரை, பூ, பழம், விபூதி, குங்குமம் போன்றவற்றை பிரசாதமாக வழங்குவதை பார்த்து இருப்போம். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில், பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளியை பிரசாதமாக வழங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா...!
ஆம், மத்தியப் பிரதேச மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது ரத்லம் என்று அழைக்கப்படும் ரத்னபுரி நகரம். இங்குள்ள மகாலட்சுமி கோயிலில்தான் தங்கத்தை பிரசாதமாக வழங்குகின்றனர்.
ஏழை எளியவர்களின் வறுமையைப் போக்கும் எண்ணத்தில் அமைக்கப்பட்ட இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம் செலுத்துவது இல்லை. வேண்டுதல் நிறைவேறி நேர்த்திக் கடன் செலுத்தும் அனைவரும், தங்களால் இயன்ற அளவுக்கு தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இப்படி, ஆண்டு முழுவதும் பக்தர்கள் செலுத்தும் தங்கம் மற்றும் வெள்ளி மலை போல் குவித்து வைக்கப்பட்டிருக்கும். பொதுவாக, அனைத்து கோயில்களிலும் சேரும் பணம், தங்கம், வெள்ளி போன்றவற்றை திருப்பணிக்காக பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இந்தக் கோயிலில் காணிக்கையாக கிடைத்த தங்கம் மற்றும் வெள்ளியை, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.
இந்த நிகழ்ச்சி, ஆண்டுதோறும் தீபாவளித் திருநாள் அன்று நடக்கிறது. அன்றைய தினம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பிரசாதமாக வழங்கப்படுகிறது. ‘‘இதை, இறைவனால் தரப்படும் பிரசாதமாக பக்தர்கள் பார்க்கின்றனர். எனவே, இந்தக் கோயிலில் வழங்கப்படும் தங்கத்தை பக்தர்கள் யாரும் விற்பனை செய்வது கிடையாது’’ என்கின்றனர் கோயில் நிர்வாகிகள்.
Leave a Comment