நல்ல நாள், நல்ல நேரம் கணக்கிடுவது எப்படி?
எந்த ஒரு செயலையும் செய்யத் துவக்கும்போது கண்டிப்பாக அதற்குரிய நாளையும், நேரத்தையும் கணக்கிட்டுச் செய்வது நல்லது. நேரம் நன்றாக இருந்தால் எல்லாமே நல்லபடியாக முடியும் என்று சொல்வார்கள். நல்ல நாள் மற்றும் நல்ல நேரத்தினை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதனை சற்று விரிவாகக் காண்போம்.
இந்த நல்ல நாள் என்பதனை, பொதுவாக வருகின்ற நல்ல நாட்கள், தனிப்பட்ட மனிதனுக்குப் பொருந்துகின்ற நல்ல நாட்கள் என்று இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். பொதுவான நல்ல நாட்கள் என்பதை பஞ்சாங்கம் மற்றும் காலண்டர்களில் சுபமுகூர்த்த நாட்கள் என்று குறிப்பிட்டிருப்பார்கள். இந்த நாட்களில் கூட எல்லா சுபநிகழ்ச்சிகளையும் செய்துவிட முடியாது. ஒவ்வொரு சுபநிகழ்ச்சிக்கும் அதற்குரிய விதிமுறையின் படி நாட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உதாரணத்திற்கு கிரகப் பிரவேசத்திற்கு நாள் பார்க்கும்போது ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களைத் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் திருமணத்தை ஆனி மற்றும் பங்குனி மாதங்களில் நடத்துவார்கள். எந்த ஒரு சுபநிகழ்ச்சியினைச் செய்ய உள்ளோமோ அதற்கு ஏற்றவாறு, அந்த நிகழ்ச்சியைத் துவக்குவதற்கு எந்தெந்த விதிகளை பின்பற்ற வேண்டுமோ அவற்றை மனதில்கொண்டு நாட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.
அதேபோல தனிப்பட்ட மனிதருக்குப் பொருந்துகின்ற நல்ல நாட்களைக் கணக்கிடுவதற்கு என்று தனியாக விதிகள் உண்டு. குறிப்பாக தாராபலன், சந்திரபலன் ஆகியவற்றை கணக்கிட வேண்டும். தாரா என்றால் நட்சத்திரம் என்று பொருள். ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திலிருந்து சுபநிகழ்ச்சியினைச் செய்ய உள்ள நாளின் நட்சத்திரத்தினை எண்ணி அதனை ஒன்பதால் வகுத்த மிச்சம் 1, 3, 5, 7 வந்தால் ஆகாத நாட்கள் எனவும், 2, 4, 6, 8, 9 வந்தால் நன்மை தரும் என்றும் கணக்கிடுவதே தாராபலன் பார்க்கும் முறை.
அதே போல ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் அமர்ந்திருக்கும் ராசி முதல் அதாவது ஒருவருடைய ஜென்ம ராசி முதல் நிகழ்ச்சியினை நடத்துகின்ற நாளில் சந்திரன் அமர்ந்திருக்கும் ராசியை எண்ணிவர 1, 3, 6, 7, 10, 11 வந்தால் சுபம் என்றும் 2, 5, 9 வந்தால் மத்திமம் என்றும் 4, 8, 12 அசுபம் என்றும் கணக்கிட வேண்டும்.
இதில் வளர்பிறையாக இருந்தால் 2, 5, 9 உத்தமம் என்றும் தேய்பிறையாக இருந்தால் 4, 8, 12 உத்தமம் என்ற கணக்கும் உண்டு. இவ்வாறு தனிப்பட்ட மனிதனுக்கு நல்ல நாளைக் கண்டறியும்போது தாராபலன், சந்திர பலனைக் கணக்கிடுவதோடு அந்த நாள் பொதுவாக வருகின்ற நல்லநாளாகவும் அமைந்திருக்க வேண்டும். தாராபலன் இருந்து சந்திர பலன் இல்லை என்றாலும் பரவாயில்லை, சந்திராஷ்டம நாளாக அமையாமல் இருந்தால் போதுமானது என்பது பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்து.
Leave a Comment