குழந்தைச் செல்வம் தரும் சந்தானலட்சுமி வழிபாடு


சந்தானம் என்றால் மழலைச் செல்வம் என்று பொருள். ஒரு வம்சம் தழைத்து வளர மழலைச் செல்வம் இன்றியமையாதது. மற்ற செல்வங்களைவிட சிறந்த செல்வம் குழந்தைச் செல்வம் ஆகும். அத்தகைய மழலைச் செல்வத்தை வழங்குபவள், சந்தானலட்சுமி. ஆறு திருக்கரங்களுடன் தலையில் பின்னலாகிய சடையுடன் குழந்தையை மடியில் இருத்தி அருள்பாலிக்கும் தோற்றம் கொண்டவள். சடையுடன் கிரீடத்தை சூடியவளாக, வரத-அபயத் திருக்கரங்களுடன் கத்தி, கேடயம் ஆகிய ஆயுதங்களைத் தரித்து காட்சி தருகிறாள்.

இவளது பீடத்தில் சாமரம் வீசியவாறும், விளக்கினைக் கையில் ஏந்திய வண்ணமும் இரு கன்னிப் பெண்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். பிள்ளை பாக்கியம் பித்ருக்களைக் கடைத்தேற்றும் என்பது இந்து மத நம்பிக்கை. ‘கருடனை வாகனமாகக் கொண்ட மோகினியே, சக்கரம் தாங்கி அன்பர்களைக் காத்து அன்பை வளர்ப்பவளே, அறிவுமயமானவளே, உயர் நலமுடையவளே, உலகனைத்தும் நலம்பெற அருள்பவளே, ஏழிசைக் கானத்தினால் துதிக்கப்படுபவளே, சூரரும் அசுரரும் தேவரும் முனிவரும் மாந்தரும் பணிந்து துதிக்கும் இணையடி வாய்ந்தவளே, இம்மைக்கு மட்டும் இல்லாமல் மறுமைக்கும் வாழ்வளிக்கும் சந்தானத்தை அருள்பவளே, மதுசூதனன் மனைவியே, சந்தான லட்சுமியே, என்னை எப்பொழுதும் காக்க வேண்டும்,’ என வேண்டிட, செல்வத்தில் சிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றியும், தடையின்றியும் அளித்து, ஜாதகத்தில் உள்ள புத்ரதோஷத்தையும் ஸ்ரீசந்தான லட்சுமி நீக்கி அருள்புரிவாள்.



Leave a Comment