மாசி மக திருநாளில் வழிபட வேண்டிய தெய்வங்கள் 


மாசி மக திருநாளில் அனைத்து திருக்கோவில்களிலும், தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறுகிறது. சிவபெருமான் வருணனுக்கு சாப விமோசனம் அளித்ததும் இந்நாளில் தான். இதனால் சிவனை வழிபடுவதற்கும் உகந்த நாளாகிறது மாசிமகம். புண்ணியம் நிறைந்த நன்னாளில் இந்தப் பிறவிப்பயனை ஈடேற்றித் தரும் ஈசனை வணங்குங்கள். உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.

பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. சக்தி வழிபாட்டிற்குரிய நாளாகும்.

தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசிமகம் தான். இதனால் முருகனை வழிபடுவதற்கும் சிறப்பான நாளாக மாசி மகம் அமைகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான். இதனால் இந்நாள் பெருமாளை வணங்குவதற்குரிய நாளும் ஆகிறது. அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கான சிறப்பு நாளாக மாசி மகம் அமைகிறது. இந்த நன்னாள் தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.

மகாவிஷ்ணு, உமாமகேசுவரர் மற்றும் முருகன் ஆகிய மூன்று தெய்வங்களையும் வழிபட்டால் இந்தப் பிறப்பு மட்டுமல்லாமல் முன் ஜன்மங்களில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகியோடும். மேலும், மக நட்சத்திரத்தை ‘பித்ருதேவா நட்சத்திரம் என்றும் அழைப்பார்கள். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மையைத் தரும். மாசி மகம் அன்று முறைப்படி விரதமிருந்து வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெறுவோம்.



Leave a Comment