திருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்கத்தில் சங்கு, சக்கரம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தேனியை சேர்ந்த பக்தர் ரூ 2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சங்கு, சக்கரத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நன்கொடையாக வழங்குவதற்காக தேனியை சேர்ந்த தங்கதுரை எனும் பக்தர் ரூபாய் 2 கோடி மதிப்பில் நான்கு கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சங்கு மற்றும் சக்கரத்தை தயார் செய்துள்ளார். திருமலைக்கு கொண்டுவரப்பட்ட சங்கு சக்கரம் ஏழுமலையான் கோவிலில் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.  

இதுகுறித்து தங்கதுரை பேசுகையில் கடந்த 50 ஆண்டுகளாக ஏழுமலையானை தரிசனம் செய்து வருகிறேன். நான்கு மாதத்திற்கு ஒரு முறை ஏழுமலையானை தரிசனம் செய்வது எனது வழக்கம். அவ்வாறு ஒவ்வொரு முறை தரிசனம் செய்த பிறகும் ஏழுமலையானுக்கு தேவையானவற்றை என்னால் முடிந்த வரை  நன்கொடையாக வழங்கி வருகின்றேன். கடந்த மார்ச் 23ஆம் தேதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன். 

ஆனால் கொரோனா ஊரடங்கு காலகட்டம் என்பதால் ஊரடங்கு  ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியவில்லை. இதனால் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகினேன். இந்நிலையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான  வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது முதல் வாரத்திற்கு ஒருமுறை சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும் என நினைத்தேன். அவ்வாறு  ஸ்ரீவாணி நன்கொடை அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி தரிசனம் செய்து வருகின்றேன். கொரோனா காலகட்டத்தில் 30 நாட்கள் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தேன். அப்பொழுது ஏழுமலையானுக்கு சங்கு, சக்கரம்  வழங்குவதாக வேண்டிக் கொண்டேன் . 

வேண்டிக் கொண்ட சில நாட்களிலேயே எனது உடல் ஆரோக்கியம் அடைந்தது. இதையடுத்து ஏழுமலையானுக்கு சங்கு சக்கரம் நன்கொடையாக வழங்குவதற்காக என்னால் முடிந்த காணிக்கையுடன் தயார் செய்து தற்பொழுது இந்த சங்கு சக்கரம் நாளை ஏழுமலையான் கோவிலில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த உடலில் உள்ள உயிர் நான் வாழும் வாழ்க்கை அனைத்தும் பெருமாள் வழங்கிய போனஸ் வாழ்க்கையாக நான் கருதுகிறேன். எனவே என்னால் முடிந்த வரை அவருக்கு தேவையானவற்றை செய்து தருவதே எனது நோக்கம் என அவர் தெரிவித்தார்.



Leave a Comment