முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரங்கள்


முருகப் பெருமானுக்கு இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும். ஒன்று விசாக நட்சத்திரமும், மற்றொன்று கார்த்திகை நட்சத்திரமும்தான். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறிகளாகத் தோன்றி சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று.

கார்த்திகை திங்களில் பவுர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும். கார்த்திகைத் தீபத் திருநாளன்று திபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது. கார்த்திகை பவுர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. அன்றைய தினம் சிவசக்தி சமேதராய், பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.

கார்த்திகைகளில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெண்கலம் அல்லது வெள்ளி விளக்கில் நெய்யிட்டு,தீப ஒளியுடன் வேதம் அறிந்த விற்பன்னருக்கு தானம் அளித்தால், இல்லத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் மகிழ்வுடன் நிறைவேறும்.

கார்த்திகை மாத முதல் நாளில் காவேரியில் நீராடினார், ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானப் பலனை இந்த ஒரே நாளில் பெற முடியும். கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.

திருவண்ணாமலையை கார்த்திகைப் பவுர்ணமி அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள். இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள். மகா விஷ்ணு மகா லட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. இதனால் யமவாதனை யமபயம் நீங்கும்.

கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும் கூடிவரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறந்தது. அந்த நாளில் முருகன் சந்நிதியில் தீபங்கள் ஏற்றி வழிபட சகல பாக்கியங்களையும் பெறலாம்.
 



Leave a Comment