காத்து நிற்கும் காஞ்சி கருணை
கண் கண்ட தெய்வம் காஞ்சி கருணை மகாப் பெரியவா ஒவ்வொரு நொடிப் பொழுதும் தனது அளவற்ற கருணையினால் தன் அடியார்களை கண்ணின் இமைப் போல காத்து ரட்சித்து வருகிறார். நினைத்த நொடியில் , பெரியவாள் கருணை கிடைக்கப் பெறுவதை உணரும் பக்தர்கள் ஏராளம். மகாப் பெரியவாள் தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய நல்ல தாக்கங்களை பலரும் பதிவு செய்துள்ளனர்.
சமீபகாலமாக இணைய உலகிலும் மகாப் பெரியவாளின் கருணை சம்பவங்கள் அதிகம் எழுதப்பட்டும் , பேசப்பட்டும் வருகின்றது. அதில் சில அற்புதங்கள் நமது சக்தி ஆன்லை வாசகர்களுக்காக பெரியவாளை வணங்கி சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த சம்பவங்களை எழுத்து வடிவில் பதிவு செய்த பல பெரியவா ஆடியார்களின் பக்தி உணர்வை சக்தி ஆன்லைன் சிரம் தாழ்த்தி வணங்குகிறது.
மகாப் பெரியவாளைப் பார்க்க வரும் கூட்டம் பெரும்பாலும் நிரந்தரமானது. யார் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்பதையும் பெரியவா நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்.
அன்று கூட்டத்தில் ஒரு மூதாட்டி, பகவானின் அருட்கடாட்சத்துக்காக நின்று கொண்டிருந்தார் . சேவை முடிந்ததும் ஒரு தட்டில் சில பழங்களை வைத்து, அம்மையாரை எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்.
மிகவும் திருப்தியாகப் பழங்களை எடுத்துக்கொண்ட அந்த அம்மையார் பழத்தோடு சேர்ந்து வந்த மெல்லிய மரிக்கொழுந்து காம்பு ஒன்றை எடுத்துக் கீழே போட்டு விட்டு பழங்களை மட்டும் எடுத்துப் பையில் போட்டுக் கொண்டார்!
"அதையேன் கீழே போட்டுட்டே? அதுவும் உபயோகமாக இருக்கும்.எடுத்துக்கோ!" என்றார் மகான் சிரித்தவாறே. பெரியவா சொல்லிவிட்டாரே என்பதற்காக,அந்த அம்மையாரும் மரிக்கொழுந்துக் காம்பை எடுத்துத் தனது பையில் போட்டு பத்திரப்படுத்திக் கொண்டார்.
"ஏன் இதை பத்திரமாக எடுத்துக்கொண்டு போகச்சொன்னார்?" என்றெல்லாம் அந்த அம்மாள் அப்போது யோசிக்கவில்லை. மகானிடம் கேட்கவும் இல்லை.
தன் ஊருக்குப் போக அம்மையார் பஸ்ஸில் ஏறி அமர்ந்துவிட்டார். பஸ் புறப்பட்டதும் அப்படியொரு தூக்கம். அருகில் அமர்ந்து இருந்த பெண், தூங்கும் அம்மையாரின் பையிலிருந்த பணப்பையைத் திருடிக் கொண்டாள்.
கண்டக்டர் வந்தார்.டிக்கெட் எடுக்க வேண்டுமல்லவா? . குரல் கேட்டு விழித்தெழுந்த அம்மையார்,பையில் பணப்பையைத் தேடினார். அது அங்கே இல்லை!
ஆனால் அந்த பர்ஸ் பக்கத்தில் இருந்த பெண்ணின் கையில் இருந்தது. "அது என் பர்ஸ்!" என்று இந்த அம்மையார் பதற்றத்தில்கதற..."இல்லை, இல்லை...இது என்னுடையதுதான்!" என்று பக்கத்திலிருந்த பெண் சொல்ல, அங்கே களேபரம் ஆகிவிட்டது!
பர்ஸில் இவ்வளவு பணம்தான் இருக்கிறது என்று கச்சிதமாகச் சொல்கிறாள் எடுத்தவள். எண்ணியும் வைத்திருக்கிறாள் என்பது பர்ஸின் நிஜ சொந்தக்காரிக்கு மட்டுமே தெரியும்!.
கண்டக்டரோ, யாரை நம்புவது என்று தெரியாமல் தத்தளிக்கிறார். அப்போதுதான் அந்த அம்மையாருக்குப் பெரியவா ,மரிக்கொழுந்து காம்பைப் பத்திரமா எடுத்துக்கொண்டு போகச் சொன்னது 'பளிச்'சென்று ஞாபகத்துக்கு வந்தது.
"கண்டக்டர் சார்...அந்த பர்ஸில் வேறொரு வஸ்து இருக்கிறது.அது என்னவென்று இந்தப் பெண்ணைச் சொல்லச் சொல்லுங்கள்.
திருடியவளிடமிருந்து இதற்கு எப்படிப் பதில் வரும்?. "நான் சொல்கிறேன்....மரிக்கொழுந்தின் சிறிய காம்பு ஒன்று உள்ளே இருக்கிறது. வாசனை உள்ளது . வேண்டுமானால் அந்த பர்ஸைத் திறந்து பாருங்கள்..தெரியும்!" என்றார் அம்மையார்.
கண்டக்டர் புதியவளிடமிருந்து பர்ஸை வாங்கிப் பார்க்க..உள்ளே,அந்த மரிக்கொழுந்து காம்பு பத்திரமா இருந்திருக்கிறது.
பிறகென்ன -திருடியவள் தன் தவறை ஒப்புக்கொண்டாள். அம்மையாரின் வேண்டுகோளுக்கிணங்க அவள் மன்னித்து விடப்பட்டாள்.
காஞ்சி பெருங்கருணா மூர்த்தி , தன் பக்தர்களுக்கு இடர் வருவதை முன்கூட்டியே அறிந்தவர். இடர் தீர்க்கும் உபாயத்தை குறிப்பால் உணர்த்தி கவலை தீர்த்தவர் காஞ்சி மகாப் பெரியவா.. அதற்கான நிவர்த்தியுடன் அனுப்பும் அந்த மகானின் கருணை உள்ளத்தை எவ்வாறு அளவிட முடியும்
மனம் கலங்காது மகாப்பெரியவாவை மனதில் நினைத்தாலே போது பெருந்துயரமும் சுவடு தெரியாமல் காணமால் போய்விடும் . இது காஞ்சி தெய்வத்தின் கருணை. பலரின் அனுபவ சத்தியம் இது.
ஜயஜய சங்கர ஹரஹர சங்கர…
பெரியவா போற்றி…..
Leave a Comment