முழுவெற்றி பெற அருள்புரியும் ஸ்ரீஆதிலட்சுமி 


நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டுவித செல்வங்களுக்கு அதிபதியாக, எட்டு தெய்வீக வடிவங்களில், அஷ்டலட்சுமியாக வழிபடுவது நம் மரபாக இருக்கிறது.

பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியவள். இவ்வடிவம் தேவி என்றும் நிலைத்திருப்பவள் என்பதனைக் குறிக்கிறது. இவ்வம்மை மஞ்சள் பட்டு அணிந்து அழகிய கிரீடத்துடன் காட்சியளிக்கிறாள். இவளுக்கு நான்கு கரங்கள் உள்ளன. ஆதி என்பதற்கு ‘முதல்’ என்று பொருள். திருப்பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது முதலில் நஞ்சு வந்தது. பின் காமதேனு, சந்திரன் என வந்தார்கள். அப்போது தோன்றிய முதல் லட்சுமியே ஆதி லட்சுமி. ஒவ்வொரு லட்சுமிக்கும், பெயரைப் பொறுத்து ஒவ்வொரு குணம் உண்டு.

ஆனால் ஆதிலட்சுமிக்கு அப்படியில்லை. ஏனென்றால், அவளுக்குப் பெயரிட வேண்டிய அவசியமில்லாமல் அவள் மாத்திரமே இருந்தாள். ஆதிலட்சுமியின் திருப்பாதத்திற்குக் கீழ் பூர்ணகும்பம், கண்ணாடி, சாமரம், கொடி, பேரிகை, விளக்கு, ஸ்வஸ்திகம் போன்ற அபூர்வ மங்கள அம்சங்கள் அமையப் பெற்றிருக்கும். அவள் பொற்பாதங்கள் பற்றியவர்களுக்கு மங்களம் சிறக்கும் என்பதனால் அவளை வழிபட்டுப் பேறுபெற வேண்டியது முக்கியம்.

‘தேவர்களால் வணங்கப்படுபவளே, அழகானவளே, மாதவனின் மனைவியே, சந்திரனின் சகோதரியே, பொன்மயமானவளே, முனிவர்களால் போற்றப்படுபவளே, மோட்சத்தை அளிப்பவளே, இனிமையை அருள்பவளே, வேதங்களால் துதிக்கப்படுபவளே, தாமரை மலரில் வசிப்பவளே, தேவர்களால் பூஜிக்கப்படுபவளே, சாந்தியோடு கூடியவளே, மதுசூதனனின் மனைவியே, மகாலட்சுமியின் முதல் உருக்கொண்ட ஆதிலட்சுமியே, என்னை எப்போதும் காப்பாற்ற வேண்டும். எப்பொழுதும் நலன் அருள்வாய்!’ - எனத் துதிக்க எக்காரியமும் தடை, தாமதம் இல்லாமல் நிச்சயமாக முழுவெற்றியுடன் நடக்க ஸ்ரீஆதிலட்சுமி நமக்கு அருள்புரிவாள்.
 



Leave a Comment