ஆன்மீகத்தில் ஓர் அதிசயம் ..... பழனி மலை


சங்க கால இலக்கியங்களில் பழனியைப் பற்றியும், பழனியை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்த ஊரின் பழமையான பெயர் பொதினி. இப் பகுதியை ஆவியர்குடியைச் சேர்ந்த வேள் ஆவிக்கோப்பெரும்பேகன் என்ற மன்னர் ஆட்சி செய்துள்ளார்.

இப் பகுதியில் ஆவியர்குடி என்னும் தனி இனக் குழுவினர் மிகுதியாக இருந்துள்ளனர். எனவே அவர்களின் தலைவன் ஆவியர் கோமான் எனப் பெயர் பெற்றுள்ளான்.

அதனால் ஆவி நாடு என்றும், பின்னாளில் வைகாவூர் நாடு என்ற பெயரிலும் இப்பகுதி அழைக்கப் பட்டிருக்கிறது. இன்றும் இந்த ஊரின் நடுவே உள்ள குளம், வையாபுரிக் குளம் என்றே அழைக்கப்படுகிறது.

 தற்போது, மலை மீது காணப்படும் கோயில்; பிற்காலப் பாண்டிய மன்னர்களின் கட்டுமானப் பாணியில் உள்ளது. கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கோயிலின் திருப்பணிகள் துவக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கோயில் கருவரையின் வடபுறச் சுவரில் உள்ள சடையவர்மன் வீரபாண்டியன் கல்வெட்டு, கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகிறது.

கருவறைச் சுவர்களில் உள்ள நான்கு கல்வெட்டுக்களில் ஒன்று கிருஷ்ண தேவராயர் காலத்தைச் சார்ந்தது (கி.பி. 1520). இந்தக் கல்வெட்டில் தான் ஸ்ரீபழனிமலை வேலாயுதசாமி எனப் பெயர் இடம் பெற்றுள்ளது.

மற்ற கல்வெட்டுகள் இங்குள்ள மூலவரை இளைய நயினார் (சிவபெருமானின் இளைய மகன்) என்றே சுட்டிக் காட்டுகின்றன.விஜயநகர மன்னர் மல்லிகார்ஜூனர் காலத்தில் (கி.பி. 1446), அவரது பிரதிநிதியாக அன்னமராய உடையார் என்பவர் இந்தப் பகுதிக்கு நிர்வாகியாக இருந்துள்ளார்.

அந்தக் காலத்தில் மூன்று சந்தி கால பூஜைக்கும் திருவமுது, நந்தா விளக்கு, திருமாலை, திருமஞ்சனம் சாத்துவதற்கான செலவுகளுக்காக ரவிமங்கலம் என்ற ஊர் நன்கொடையாக வழங்கப் பட்டிருக்கிறது.

இந்த ரவிமங்கலத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் காலப் பாடல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு, தற்போது, அந்தக் கல்வெட்டு பழனி அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது.

இந்தப் பழனி மலைக் கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஊருக்கு வட மேற்கே உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலும் மிகப் பழமையானது. பிரசித்தி பெற்றது. தமிழ் நாட்டிலேயே ரோப் கார், மற்றும் வின்ச் எனப்படும் மலை இழுவை ரயிலும் பக்தர்களின் வசதிக்காக இங்கு மட்டும் தான் அமைக்கப் பட்டிருக்கிறது.

அறிவியல், விஞ்ஞானம் ஒரு புறம் வளர்ச்சி அடைந்தாலும், அதையும் தாண்டி ஆன்மீகமும் வளர்ந்து கொண்டிருப்பதற்கு, இங்கு வரும் பக்தர்களின் கூட்டமே சாட்சி!



Leave a Comment