அருள் தரும் பஞ்ச பூத திருத்தலங்கள் (ஆகாச தலம் – ஆகாயம்)


 

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது இவ்வுலகம் . பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும்  இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும், காக்கும், அழிக்கும் வல்லமைகள்  உண்டு. சமஸ்கிருத மொழியில் இந்த பஞ்ச பூதங்களை பிருத்வி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(காற்று ), ஆகாசம்(வான்) என அழைக்கிறோம் . எம் பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில்  அருள்புரியும் ஐந்து சிவதலங்கள் நம் தென் இந்தியாவில் உள்ளது .

 ஆகாச தலம் – ஆகாயம்

 

பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலமாவது ‘தரிசிக்க முக்தி தரும்’ என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் சிதம்பரம் மாவட்டத்தில் உள்ள நடராசர் சிவகாமியம்மை திருக்கோயில் ஆகும் .  பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் இத் தலம் சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலமாகும் . நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலமாதலால் இறைவனின்  திருப்பெயர் மூலட்டானேஸ்வரர் (திருமூலநாதர்).

நடராஜர் கோலத்தில் உலகில் ஐந்தொழில் செய்யும் திருக்கோலத்தில் சிவபெருமான் இருக்கிறார். மேலும் மாணிக்கவாசரின் பாடலை எழுதி சிற்றம்பலத்தான் என இறைவனே கையெழுத்து இட்டு அருள் செய்த  அற்புத தலம்.

இத்திருத்தலம் சைவ, வைணவ சமய ஒற்றுமைக்கு மிகச்சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகப்  போற்றப்படும் திருசித்திரக்கூடம் என்ற பெயருடைய கோவிந்தராஜப் பெருமாள் கோவில் தில்லை சிதம்பரம் கோவிலின் உள்ளே அமைந்திருப்பது சிறப்பு .  நடராஜப் பெருமானின் சந்நிதிக்கு நேர் எதிரே நின்றுகொண்டு நடராஜரை தரிசனம் செய்தபிறகு இடதுபுறம் திரும்பி நின்றால் கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியைக் காணலாம்.

சிதம்பரத்தில் மிக முக்கியமான மற்றொன்று சிதம்பர ரகசியம். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயிலின் திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டபடும் . இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லாமல் தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும். இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது.

 



Leave a Comment