அருள் தரும் பஞ்ச பூத திருத்தலங்கள் (வாயு தலம் – காற்று)
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது இவ்வுலகம் . பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும் இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும், காக்கும், அழிக்கும் வல்லமைகள் உண்டு. சமஸ்கிருத மொழியில் இந்த பஞ்ச பூதங்களை பிருத்வி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(காற்று ), ஆகாசம்(வான்) என அழைக்கிறோம் . எம் பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில் அருள்புரியும் ஐந்து சிவதலங்கள் நம் தென் இந்தியாவில் உள்ளது .
வாயு தலம் – காற்று
ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பூங்கோதை திருக்கோயில் வாயுதலமாகும். தட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றெல்லாம் புகழப்படும் இத்தலத்தில் பிவேசிப்பதே முக்தி எனப்படுகிறது. சிலந்தி, பாம்பு, யானை என உயிர்கள் வழிபட்டு சிவபெருமானை அடைந்த தலம்.
சிலந்தி ஒன்று, சிவனை வழிபட நினைத்தது. தன்னிடம் சுரக்கும் நூல் போன்ற திரவத்தால், மதில், கோபுரம், மண்டபம், மாளிகை, கருவறை, கலசம் என, கோவில் அமைத்தது. யாராவது அதை அறுத்து விட்டால், விடாமல் புதுப்பித்தது.
சிலந்தியின் அன்பை சோதிக்க விரும்பிய சிவன், தன் சன்னிதியில் இருந்த விளக்கை, சுடர்விட்டு எரியும்படி செய்தார். ஒரு நொடியில் சிலந்தி அமைத்த கோவில் எரிந்தது. மனம் வருந்திய சிலந்தி, உயிர்விடத் துணிந்து, விளக்கில் விழ முயன்ற போது, தடுத்தார் சிவன். சிலந்திக்கு காட்சி தந்து, "வேண்டும் வரம் கேள்!' என்றார்.
உலகப்பொருட்கள் மீது ஆசையில்லாத சிலந்தி, "பெருமானே... உன் திருவடியின் கீழ் அமரும் பாக்கியத்தை தர வேண்டும்...' என்றது. சிவனும் அவ்வாறே அருள்புரிந்தார். காளன் என்னும் பாம்பு, அரிய வகை ரத்தினக்கற்களை சிவனின் திருமுடியில் வைத்து பூஜித்து வந்தது. அத்தி எனும் யானை, அந்த ரத்தினங்களை தள்ளிவிட்டு, ஆற்றிலிருந்து நீர் எடுத்துவந்து, சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளை வைத்துச் சென்றது. மறுநாள் வந்த பாம்பு, "ரத்தினக் கற்களை சிதறடித்து, ஏதோ இலையை குப்பை போல் போட்டிருக்கின்றனரே...' என்று புலம்பியவாறே, அதைச் சுத்தப்படுத்தி, மீண்டும் ரத்தினக் கற்களை இறைவன் திருமுடியில் சூட்டி, பூஜித்து சென்றது.
யானை வழக்கம் போல் வந்து மணிகளைத் தட்டிவிட்டு, வில்வத்தைச் சூட்டிச் சென்றது. பல நாட்கள் இதே நிலை தொடர்ந்தது. ஒருநாள், யார் இப்படி செய்கின்றனர் என அறிய, சன்னிதிக்குள் மறைந்திருந்தது பாம்பு. அப்போது யானை, அங்கு வந்து மணிகளைத் தட்டி விடவே, ஒளிந்திருந்த பாம்பு சீறியெழுந்து, யானையின் துதிக்கையில் உள்ள துளைக்குள் புகுந்து, மத்தகத்தை அடைந்து குடையத் தொடங்கியது.
யானை அதைத் தாங்க முடியாமல், நிலத்தில் தும்பிக்கையை அடித்தும், ரத்தம் வரும் அளவு மத்தகத்தை தரையில் தேய்த்தும் பார்த்தது; குடைச்சல் தீரவில்லை. இதனால், "உடலில் புகுந்த பாம்பைக் கொன்று, நாமும் இறப்போம்...' என்று கருதி, கோபத்துடன் அங்குள்ள மலைமேல் மோதியது.
இந்த முழக்கத்தைக் கேட்ட தேவர்கள் நடுங்கினர். குகைகளில் தங்கியிருந்த முனிவர்கள் பயந்தனர். யானை தலை பிளந்து மயங்கி விழுந்தது. பாம்பு வெளியே வர முடியாமல் தவித்தது. அப்போது சிவபெருமான் உமையம்மையோடு காளை வாகனத்தில் தோன்றி, யானையை எழுப்பினார். உள்ளிருந்த பாம்பு வெளியே வந்தது. இரண்டிற்கும் தரிசனம் தந்த சிவன், அவற்றிற்கு முக்தியளித்தார்.
"சீ' என்றால் சிலந்தி. காளம் என்றால் பாம்பு. ஹஸ்தி (அத்தி) என்றால் யானை. சிலந்தி, பாம்பு, யானை ஆகியவை இத்தலத்து இறைவனை வழிபட்டு முக்தி அடைந்ததால் இத்தலத்தை, "சீகாளத்தி' என்றும், காளஹஸ்தி என்றும் அழைத்தனர்.
தட்சிண (தென்) கயிலாயம் என்னும் சிறப்புடைய இத்தலத்தில் இறைவன் வாயுலிங்கமாக காட்சி தருகிறார் . சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் உள்ளது இத்திருத் தலம். வடக்கு முகமாகப் பாய்ந்து ஓடுவதால் இவ்வாறு உத்தரவாகினி என அழைக்கப்படுகிறது . இங்கு அஸ்தி கரைப்பது விசேஷமாக கருதப்படுகிறது .
மூலவர், சுயம்பு - தீண்டாத் திருமேனி. இங்குள்ள ஆவுடையார் பிற்காலத்தில் கட்டப்பட்டது.
சுவாமி மீது தங்கக் கவசம் சார்த்தும்போதும் எடுக்கும்போதும் கூட சுவாமியைக் கரம் தீண்டக்கூடாது. இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ள இக்கவசத்தில் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இருதந்தங்களும், மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன. மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் காற்றினால் மோதப்பெற்றதுபோல் எப்போதும் அசைந்து கொண்டு , வாயுத்தலம் என்பதற்கு சாட்சியாக இருக்கிறது .
சர்ப்ப தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம், இராகுகால சாந்தி முதலியன விசேஷமாகச் சொல்லப்படுகிறது.
இக்கோயிலில் உச்சி காலம் முடித்து நடைசார்த்தும் வழக்கமில்லை; காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது.
Leave a Comment