அருள் தரும் பஞ்ச பூத திருத்தலங்கள் (தேயு தலம் – நெருப்பு )
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது இவ்வுலகம் . பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும் இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும், காக்கும், அழிக்கும் வல்லமைகள் உண்டு. சமஸ்கிருத மொழியில் இந்த பஞ்ச பூதங்களை பிருத்வி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(காற்று ), ஆகாசம்(வான்) என அழைக்கிறோம் . எம் பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில் அருள்புரியும் ஐந்து சிவதலங்கள் நம் தென் இந்தியாவில் உள்ளது .
தேயு தலம் – நெருப்பு
அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் சிறப்பாக பாடியுள்ள சிறந்த பாடல் பெற்ற தலமாக தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையம்மை திருக்கோயில் விளங்குகிறது . இது தேயு தலமாகும். ‘தேயு’ என்றால் நெருப்பு என்று பொருள்படும் . ஒரு முறை பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே யார் பெரியவன் என்று நிகழந்த போரில் , அடிமுடி காணமுடியாத நெருப்பு பிரளயமாக உயர்ந்து , தானே பெரியவன் என்று சிவபெருமான் உணர்த்தினார். பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் இறைவன் நெருப்பாக தோன்றி அருள் செய்த தலம் இது.
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில் மலையின் உச்சியில் ஏற்றப்படும் மஹா தீபத்தை தரிசிக்க ஆயிரக்கணகில் பக்தர்கள் இங்கு கூடுவது வழக்கம் . திருவண்ணாமலையில் ஓவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் கிரிவலம் வருவது புண்ணியமாக கருதப்படுகிறது. லட்சக் கணக்கான சிவ பக்தர்கள் பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர்.
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம், எனப்படும் எட்டு வித லிங்கங்கள் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிப்பதாக நம்பப்படுகிறது .
Leave a Comment