அருள் தரும் பஞ்ச பூத திருத்தலங்கள் (அப்பு தலம் - நீர்)


 

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது இவ்வுலகம் . பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும்  இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும், காக்கும், அழிக்கும் வல்லமைகள்  உண்டு. சமஸ்கிருத மொழியில் இந்த பஞ்ச பூதங்களை பிருத்வி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(காற்று ), ஆகாசம்(வான்) என அழைக்கிறோம் . எம் பெருமான் பஞ்ச பூதங்களின் வடிவில்  அருள்புரியும் ஐந்து சிவதலங்கள் நம் தென் இந்தியாவில் உள்ளது .

 

அப்பு தலம் -  நீர்

 

தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், திருவானைக்காவல் என்று அழைக்கப்பெறும் ஐம்புலிங்கேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் ,அப்பு தலமாகும். ‘அப்பு’ என்றால் நீர் என்று பொருள்படும் .  புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.

சிவ பக்தர்களாக யானையும் சிலந்தியும் சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும்.

சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது.

உமையம்மை ஈசனை வணங்க நீரைக் கொண்டு லிங்கம் செய்ததால் , இந்த லிங்கம் அப்புலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.

மூலரான ஜம்புகேசுவரரின் லிங்கம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால்  எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருப்பதைப் பார்க்க முடியும் கோடையில், காவேரி வற்றிப் போகும்  நேரங்களிலும், கூட இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

திருவானைக்காவில் ஆட்சி செய்யும் அன்னையின் திருநாமம்  அகிலாண்டேஸ்வரி. மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக காட்சியளித்த  அம்பாளை சாந்தம் செய்ய ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமாக  காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

 



Leave a Comment