தெய்வத்தின் அருளையும் கூட தடை செய்யும் பித்ருக்களின் சாபம்.....
பித்துருக்களின் சாபமானது தெய்வத்தின் அருளையும் கூட தடை செய்யும் சக்தி பெற்றது. அவ்வளவு வலிமையானவர்கள் நம்முடைய பித்ருக்கள் தான். அமாவாசை திதியன்று நாம் முறையாக பித்ருக்களை வழிபட்டு அவர்களின் பசியை போக்கவேண்டும். இல்லாவிட்டால், நமது பித்ருக்கள் மிகுந்த வருத்தத்துடன் பிதுர் லோகம் சென்றுவிடுவார்கள். அப்படி வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்லும் நமது முன்னோர்கள் கோபம் கொண்டு, நமக்கு சாபமும் அளித்துவிடுவார்கள். எனவே முறையாக பித்ரு கடன்களை செலுத்தி, நம்மை படைத்த கடவுளின் கணையை பெற வேண்டும்.
மனிதனாக பிறந்த ஒவ்வொரும், தான் முற்பிறப்பில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்றவாறே மீண்டும், மீண்டும் மறபிறவி எடுத்து, முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பலா பலன்களை அனுபவித்து வாழ்ந்து மடிந்தது கடைசியில் இறைவனோடு கலந்து விடுகிறான்.
ஒரு ஆன்மா மனிதனாக பிறவி எடுத்து, பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பலா பலன்களை அனுபவித்துவிட்டு இறந்து போனால், இறந்த உடனேயே மீண்டும் ஒரு மனிதப் பிறவி எடுப்பது கிடையாது. இறந்த பின்பு ஆன்மாக்களின் உலகம் எனப்படும் பித்ரு லோகத்திற்கு சென்று, அங்கேயே தங்கியிருந்து, தனக்காக தன்னுடைய வாரிசுகள் செய்யும் பித்ரு கடன் எனப்படும் தர்ப்பணத்தை பெற்றுக்கொள்ளும் வரை ஆன்மாவாகவே சுற்றித் திரியும்.
பித்ரு என்பது, இறந்துபோன நமது தந்தை, தாய், உள்ளிட்ட முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழி மற்றும் தாய் வழி சொந்தம் என இறந்துபோன நம்முடைய அனைத்து முன்னோர்களுமே நமது பித்ருக்கள் தான். நமது தந்தை வழியில் இருந்து போன முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் என்றும், தாய் வழியில் இறந்த முன்னோர்கள் அனைவரும் மாத்ரு வழி பித்ருக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். சுருக்கமாக சொல்வதென்றால், நமது ரத்த சொந்தத்தில் இறந்து முன்னோர்கள் அனைவருமே பித்ருக்கள் தான்.
நம்மோடு வாழ்ந்து மறைந்துவிட்ட நமது முன்னோர்களான பித்ருக்கள் அனைவருமே, நாமும் நம்முடைய சந்ததிகளும் நலமுடன் வாழவேண்டும் என்று தான் விரும்புவார்கள். எனவே தான், அவர்கள் உயிரோடு இருந்தபோது, அவர்களை முறையாக பேணி காத்து அவர்களின் பசியை போக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட, அவர்கள் இறந்த பிறகாவது அவர்களின் பசியை போக்கி அவர்களின் ஆன்மாவை சாந்தப்படுத்த வேண்டும். இது தான் பிதுர்க்கடன் என கூறப்படுகிறது.
நமது பித்ருக்கள் தான், நமக்கும் இறைவனுக்கும் நடுவில் இருந்து இறைவின் அருளாசியை நமக்கு பெற்றுத் தருவதோடு, நமது வேண்டுதல்களையும் இறைவனிடம் கொண்டு சேர்த்து வேண்டுதல்களையும் நிறைவேற்றித் தருவார்கள். இப்படி, ஆவிகள் ரூபத்தில் உலவிடும் நமது முன்னோர்களுக்கு நாம் முறையாக செய்யும் வழிபாடு தான் பித்ருகடன் அல்லது தர்ப்பணம் என கூறப்படுகிறது.
Leave a Comment