சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு....


வைகாசி மாத பூஜைகள் நிறைவு பெற்றதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது.
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 14-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. 15-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ர கலச பூஜை, களபாபிஷேகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

இந்த பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை வழிபட்டனர். 5 நாட்களாக நடைபெற்று வந்த வைகாசி மாத பூஜைகள் நேற்று நிறைவு பெற்றது. முன்னதாக தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் நேற்று லட்ச்சார்ச்சனையும், தொடர்ந்து மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி தலைமையில் களபாபிஷேகமும், களபம் தாங்கிய கலசத்துடன் ஊர்வலமும் நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்பட்டது.
சபரிமலையில் சாமி விக்ரகம் அமைக்கப்பட்ட தினம் ஜூன் 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 3-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். 4-ந் தேதி வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம் உள்பட பூஜைகள் நடைபெறும்.
அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்பட்டு, மீண்டும் ஆனி மாத பூஜைக்காக கோவில் நடை ஜூன் 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் ஆனி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.



Leave a Comment