8 திசைகளிலும் புகழ் தரும் நரசிம்மர் வழிபாடு 


திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள். நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு. இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். 

சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரி கட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள். சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.

நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும். திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.

மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம். சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.

நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.
 



Leave a Comment