தாயுமானவர் சாட்சிநாதர் ஆன கதை
திருப்புறம்பியம் – கோயில் சூழ் கும்பகோணம் நகரில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிவ தலம். பொன்னியின் செல்வன் வரலாற்று காவியம் படித்த வாசகர்கள் நெஞ்சில் நிலைத்துள்ளது திருபுறம்பியம் பள்ளிப்படைக்கோவில்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சேர்ந்து பாடிய அபூர்வ கோவில்களில் ஒன்று திருப்புறம்பியம் சாட்சிநாதசுவாமி கோவில். முற்காலத்தில் பிரளயம் ஏற்பட்டு அனைத்து ஊர்களும் அழிந்த காலத்தில் இந்த ஊர் மட்டும் சாட்சியாக நிலைத்துள்ளது.
சுற்றிலும் உள்ள நீரை ஊருக்குள்ளே புகவிடாமல் விநாயகர் தடுத்து புறத்தே நிறுத்தி காத்ததால் ,இந்த ஊருக்கு ‘திரும்புறம்பயம்’ என்றும், விநாயகருக்கு ‘பிரளயம் காத்த விநாயகர்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது . வருண பகவானால் நத்தான்கூடு, கிளிஞ்சல், கடல் நுரை போன்ற பொருட்களால் உருவாக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டது தான் இந்த பிரளயம் காத்தவிநாயகர் .
விநாயகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியன்று நடத்தப்பெறும் தேனாபிஷேகத்தை தவிர, வேறு எந்த நாளிலும் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும் விநாயகப்பெருமானின் திருமேனியில் உறிஞ்சப் பெறுவது வேறு ஏங்கும் காணக்கிடைக்காத அதிசயம் .மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் இரு தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களில் பிரளயத்தின் ஏழு கடல்களும் வந்து அடங்கி உள்ளதாக ஐதீகம்.
கோபுர வாயிலுக்கு வெளியே வலதுபுறம் தனிக்கோவிலில் கருணையே வடிவான குரு பகவான் குடி கொண்டுள்ளார். தமிழகத்திலேயே தனிக்கோவிலில் குரு பகவான் எழுந்தருளி அருள் வழங்கும் திருத்தலம் இது ஒன்று தான் என்பது கூடுதல் சிறப்பு .
இறைவன் சாட்சிநாதர் ஆன கதை
மனிதனின் வாக்கிற்கு மதிப்பு நிலைக்காத நேரத்தில் தன்னை நோக்கி அபாய குரல் எழுப்பிய நங்கைக்கு இறங்கி இறைவனே சாட்சி சொன்னதால் சாட்சிநாதர் ஆனார் .
காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த அரதன குப்தன் என்ற வணிகன் ஒருவன் ,மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தான்.
காவிரிபூம்பட்டினத்தில் அவன் தங்கையும் ,தங்கையின் கணவரும் வசித்து வந்தனர் . அவர்களுக்கு தங்கள் மகள் ரத்னாவளியை அரதன குப்தனுக்கே மணம் முடித்து வைக்க ஆசை .ஒரு நாள் எதிர்பாராமல் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக தகவல் அறிந்த அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் .
இரவானதால் பயணக்களைப்பில் , வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்தில் இருந்த ஒரு புன்னைவனத்தில் தங்கினர் .அங்கே ஒரு வன்னிமரத்தின் அருகில் ஒரு சிவலிங்கம் , சற்றுத் தள்ளி ஒரு கிணறு இருந்தது . அன்றிரவு இருவரும் அங்கேயே தங்கி விட முடிவு செய்து உறங்கினார்கள் . காலையில் கண் விழித்த ரத்னாவளி, அரவம் தீண்டி பிணமாக இருந்த அரதன குப்ததைப் பார்த்து கதறி அழுதாள் .
அப்போது அவ்வழியே வந்த திருஞானசம்பந்தர் , அப்பெண்ணுக்கு மனமிரங்கி ஈசனிடம் முறையிட, இறைவனும் அரதன குப்தனை உயிரோடு எழுப்பினார் . இருவரையும் பற்றி தெரிந்துக்கொண்ட சம்பந்தர் “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி , இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..”என்று கூறினார் .
மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன். வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும் கல்யாணத்திற்கு சாட்சிகலானார்கள் . இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள். கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்டாள் முதல் மனைவி . ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே எவ்வளவோ சொல்ல முயன்றும் அதை கொஞ்சமும் நம்பாமல் , ரத்னாவளி கேவலமாக பழித்துப் பேசினாள் .
வழக்கு சபைக்கு வந்தது. திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்க “மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி.முதல் மனைவி கேலியாக ,“அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?” என்று கேட்க கூடி இருந்தவர்களும் சிரித்தார்கள்.
தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி இறைவனிடம் அழுதாள் . “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? என ரத்னாவளி கதறி அழ ,அங்கே அசரீரியாக கேட்டது ஒரு குரல் ,"நாங்கள் சாட்சி.." கூட்டத்தினர் அனைவரும் திகைத்துப் பார்க்க....ஈசன் அங்கே எழுந்தருளி“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான். ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தார் திருவிளையாடலின் நாயகன் ஈஸ்வரன்.
இப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில் வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவற்றைக் காண முடியும் .
அன்று ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்காக தாயுமானவராக மாறிய ஈசன் , ரத்னாவளிக்காக சாட்சிநாதர் ஆனார். இறைவனை நம்பினோர் என்றைக்கும் கைவிடப்படார். ஓம் நமச்சிவாய….
Leave a Comment